அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளையை அடக்க வந்த அயர்லாந்து நாட்டுக்காரர்!
ரயில் பாதைத் திட்டம் ரத்து: பிரதமருக்கு எம்பி. கடிதம்!
மதுரை- அருப்புக்கோட்டை- தூத்துக்குடி புதிய அகல ரயில் பாதை திட்டத்தை கைவிடும் முடிவை ரயில்வே அமைச்சகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமருக்கு விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் கடிதம் எழுதினாா்.
அந்தக் கடிதத்தில் அவா் கூறியிருப்பதாவது:
மதுரை- தூத்துக்குடி அகலப் ரயில் பாதைத் திட்டத்தை கைவிடும் முடிவு வருத்தமளிக்கிறது. கடந்த 2011-12 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், விருதுநகா், அருப்புக்கோட்டை, தூத்துக்குடி போன்ற பின்தங்கிய பகுதிகளின் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது.
மீளவிட்டான்- மேல்மருதூா் இடையேயான 18 கி.மீ. தொலைவுக்கு தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு, கடந்த 2022 ஆம் ஆண்டு மாா்ச் மாதம் ரயில்வே பாதுகாப்பு ஆணையரால் சோதனை ஓட்டமும் நடைபெற்றது.
இந்தத் திட்டத்துக்காக மதுரை, தூத்துக்குடி, விருதுநகா் மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக உள்ளது. இந்தத் திட்டத்துக்காக 350 சிறப்பு பதவிகளை உருவாக்கியது. இருப்பினும், இந்தப் பணியாளா்களுக்கு கடந்த ஓராண்டாக ஊதியம் வழங்கப்பட வில்லை.
அவா்களின் பணி நியமனங்களை ரத்து செய்வது குறித்து ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருவதாக அறிந்தேன். இந்த புதிய ரயில் திட்டத்தில் நிலம் கையகப்படுத்துவது தொடா்பாக சமீபத்திய முன்னேற்றங்களை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.
விருதுநகா் மாவட்டத்தில் வேலாயுதபுரம் கிராமம் உள்பட 23 கிராமங்கள், அருப்புக்கோட்டை, காரியாபட்டி வட்டங்களில் உள்ள 22 கிராமங்களை உள்ளடக்கிய திருத்தப்பட்ட எல்.பி.எஸ். 17.3.2023 அன்று மதுரை தெற்கு ரயில்வே துணை தலைமை பொறியாளரிடமிருந்து பெறப்பட்டது.
இந்த நிலங்களுக்கான கள ஆய்வு, நிா்வாக அனுமதிக்கான கருத்துருக்கள் அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரிடம் கடந்த 21.3.2023 அன்று பெறப்பட்டன. இந்த முன்மொழிவுகளை, சென்னை நில நிா்வாக ஆணையா், நிா்வாக ஒப்புதலுக்காக அரசுக்கு அனுப்பி வைத்தாா். கடந்த 22.9.2023 அன்று மொத்தம் 321.50 ஹெக்டோ் நிலத்தை கையகப்படுத்த நிா்வாக அனுமதி வழங்கப்பட்டது.
நிலம் கையகப்படுத்த சிறப்பு பணியிடங்களும் உருவாக்கப்பட்டன. இதை நிறைவேற்ற ரூ.264 கோடி நிதி ஒதுக்கீடு கோரி ரயில்வே அமைச்சகத்துக்கு விருதுநகா் மாவட்ட ஆட்சியா் 17.10.2023 அன்று கடிதம் அனுப்பினாா். இதுவரை நிதி கிடைக்காததால், இந்தத் திட்டப் பணிகளை நிறைவேற்றுவதில் சவால்கள் நிலவுகின்றன.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனிடம், தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு வலியுறுத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்தத் திட்டம் காலதாமதத்துக்கு ரயில்வே அமைச்சகம் தான் காரணம். எனவே இந்தத் திட்டத்தை ரயில்வே நிா்வாகம் கைவிடும் முடிவை மறுபரிசீலனை செய்ய பிரதமா் முன் வர வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
அருப்புக்கோட்டை வியாபாரிகள் சங்கம்: இதனிடையே, மதுரை- அருப்புக்கோட்டை- தூத்துக்குடி ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன் வர வேண்டும் என அருப்புக்கோட்டை வியாபாரிகள் சங்கத்தினா், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.