ஜனநாயகன்: விஜய் பட சென்சார் வழக்கு; சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்குகிறது உயர் நீ...
லிவ்-இன் உறவில் கைவிடப்படும் பெண்கள்... தீர்வு குடும்பங்களிடம் இருக்கிறது!
`லிவ்-இன்’ உறவில் இருக்கும் பெண்களுக்கு மனைவி அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சமீபத்தில் தெரிவித்திருப்பது பெரும் கவனம் பெற்றுள்ளது. இந்த உறவில் உள்ளவர்களுக்கான சட்டத் தேவை பற்றிய உரையாடல்களையும் அது ஆரம்பித்திருக்கிறது.
ஒரு பெண்ணுடன் லிவ்-இன் உறவில் வாழ்ந்து, திருமண வாக்குறுதி அளித்த ஆண், ‘வருமானம் இல்லை, பெற்றோரைச் சார்ந்து வாழ்கிறேன். எனவே, அவரை மணக்கும் எண்ணம் இல்லை’ என்று கைவிட்டார். இவ்வழக்கில்தான், லிவ்-இன் உறவில் பலியாகும் பிரிவினராக பெண்கள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள நீதிபதி எஸ்.மதி, அவர்களுக்கு மனைவி அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும் என்று கூறி, அந்த ஆணின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.
ஆணாதிக்கம், உழைப்புச் சுரண்டல், வரதட்சணைக் கொடுமை என குடும்ப அமைப்பு பெண்களுக்குச் செய்யும் கொடுமைகள் பல. இவற்றிலிருந்து விடுபட நினைக்கும் பெண்கள் சிலர், திருமணத்தைத் தவிர்த்து லிவ்-இன் வாழ்க்கையைத் தேர்வு செய்கிறார்கள். குடும்பப் பொறுப்புகளில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள நினைக்கும் ஆண்கள் சிலரும் இதைத் தேர்வு செய்கிறார்கள். நவீன வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றம் இது.
இப்படியான உடன்படிக்கையாக இல்லாமல், `லிவ்-இன்’ என்பதை நவீனம், முற்போக்கு என்ற போர்வையில் சில ஆண்கள் பயன்படுத்திக்கொள்ளும்போது, பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகிறார்கள். சொல்லப்போனால், இதுதான் பெரும்பான்மையாக நடக்கிறது.
`பிடித்தால் வாழலாம், கசந்தால் பிரிந்துவிடலாம்’ என்பதுதான் லிவ்-இன் வாழ்வு தரும் சலுகை. ஆனால், இதில் சாக்குகளைக் கண்டுபிடித்து பிரிந்துசெல்பவர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே உள்ளனர். கைவிடப்படுபவர்கள் பெண்களாக இருக்கின்றனர். ஒருவேளை, இருவரும் முடிவெடுத்துப் பிரிந்தாலுமேகூட, அதற்குப் பின்னான வாழ்க்கை ஆண்கள்போல பெண்களுக்கு எளிதாக அமைந்துவிடுவதில்லை. அவர்கள் கடுமையான சமூக மதிப்பீடுகளுக்கு ஆளாகிறார்கள்.
லிவ்-இன் வாழ்க்கையில் பெண்ணடிமைத்தனம் இன்மை, பரஸ்பர அன்பு மற்றும் மரியாதை, வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்வது, செலவுகளைப் பங்கிட்டுக்கொள்வது, ஒருவர் முன்னேற்றத்துக்கு ஒருவர் உதவுவது போன்ற பரஸ்பர இணக்கம் இருந்தால் அது இனிமையாக நகர்கிறது. ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் அங்கும் வழக்கமான ஆண் - பெண் உறவுச் சிக்கல்கள், ஆணாதிக்கமே தலைதூக்குகிறது. அந்த உறவின் முடிவில், கைவிடப்பட்ட நிலை பெண்களைக் கதறவைக்கிறது.
உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் சில, லிவ்-இன் உறவை திருமணத்திற்கு இணையானதாகக் கருதி, குடும்ப வன்முறைச் சட்டம் 2005 மூலம் பாதுகாப்பு, பராமரிப்பு போன்ற சட்ட பாதுகாப்புகளை வழங்கியுள்ளன. என்றாலும், இந்தியாவில் இதற்கான பிரத்யேக சட்டம் உருவாக்கப்படும்வரை பெண்கள் இதில் பாதிக்கப்படுவது தொடரும்.
பெண்கள் குடும்ப அமைப்பிலிருந்து மூச்சுத்திணறி விலகாமல் இருக்க, குடும்பங்களை ஜனநாயகப்படுத்தி, பாலின சமத்துவத்தை உறுதிசெய்ய வேண்டும். ஆம்... வீடுகளில் இருந்துதான் தொடங்கப்பட வேண்டும் இப்பிரச்னைக்குத் தீர்வு!
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்
















