CSK: 'அணியின் முன்னேற்றத்திற்கு சற்று காலம் எடுக்கும்; ஆனால் ருதுராஜ் தனது வேலைய...
வருமான வரித் தாக்கல் செய்யும் போது, Form 16 மட்டுமல்ல; Form 26AS ரொம்ப முக்கியம் | பணம் வளர்ப்போம்
இப்போது எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. அதனால், பலர் ஆடிட்டர்களைத் தேடி ஓடுவதில்லை. அவர்களாகவே வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்துவிடுகின்றனர்.
அதனால், அனைவரும் வருமான வரிக் கணக்குத் தாக்கல் குறித்து A டு Z தெரிந்துகொள்வது அவசியம்.
ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் வருமான வரிக் குறித்தும், வருமான வரிக் கணக்குத் தாக்கல் குறித்தும் என்னென்ன தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை விளக்குகிறார் ஆடிட்டர் கிரி பாபு.

"முதலில் ஒரு நிதியாண்டில் அதாவது ஏப்ரல் 1-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை, 'நான்' எத்தனை நிறுவனங்களில் வேலை செய்துள்ளேன் என்பதைச் சரியாகக் கணக்கில் வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரே நிறுவனத்தில்தான் வேலைப் பார்த்திருக்கிறேன் என்றால், ஜூன் அல்லது ஜூலை வாக்கில் சம்பளம், கொடுப்பனவு (Allowance), வரி பிடித்தம் என அனைத்தையும் ஃபார்ம் 130-ல் குறிப்பிட்டு தருவார்கள்.
புதிய வருமான வரிச் சட்டத்தின் படி, ஃபார்ம் 16தான் இப்போது ஃபார்ம் 130 என்று அழைக்கப்படுகிறது.
இதை வைத்துதான் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.
ஒருவேளை, ஒரே ஆண்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் வேலை செய்திருந்தால், வருமான வரிக் கணக்குத் தாக்கலுக்கு முன்பு, வேலை செய்த அனைத்து நிறுவனங்களிடம் இருந்தும் ஃபார்ம் 130-ஐ வாங்கிவிட வேண்டும். அப்போதுதான் கடைசி நேர பிரச்னையைத் தவிர்க்க முடியும்.
அனைத்து நிறுவனங்களும் ஒரு நிதியாண்டில் வேலை பார்த்த முன்னாள் பணியாளர்களுக்கும் ஃபார்ம் 130 தர வேண்டும் என்பது சட்டம். அதனால், கட்டாயம் அவர்கள் தருவார்கள்... அல்லது தந்தே தீர வேண்டும்.

முன்னால் வேலை பார்த்த நிறுவனத்தோடு பிரச்னை. அதனால், வாங்கமாட்டேன் என்று சொன்னால், நமக்கு தான் பிரச்னை. இப்போது நம் பான் கார்டு அனைத்திலும் லிங்க் ஆகியிருக்கிறது.
நாம் வாங்கிய சம்பளம் முதல் முதலீடு வரை அனைத்தும் அரசாங்கத்திற்குத் தெரியும். அதனால், வருமான வரிக் கணக்குத் தாக்கலில் எதை மிஸ் செய்தாலும், நாம் மாட்டிக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அடுத்ததாக, வருமான வரித் தளத்தில் இருக்கும் ஃபார்ம் 168-ல் (முன்னால் 26AS, AIS), சொத்து, முதலீடு விஷயங்கள் இடம்பெற்றிருக்கும். இதில் இருந்தும் நமக்கு வருமானம் வந்திருக்கக்கூடும்.
அதையும் மிஸ் செய்யாமல் இருப்பது அவசியம். இப்படி ஏதேனும் மிஸ் செய்வதால்தான், வருமான வரித் துறையிடம் இருந்து நோட்டீஸ் வருகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.


















