மக்கள் சிந்தனைப் பேரவையின் ஈரோடு பாரதி விழா நாளை நடைபெறுகிறது
வாய்க்கால்கள் சீரமைப்பு, மழைநீா் வடிகால்கள் அமைக்க ரூ.500 கோடி நிதிக்குழுவிடம் வலியுறுத்தியதாக மேயா் தகவல்
திருச்சி மாநகரில் உள்ள பாசன வாய்க்கால்கள் உள்பட்ட அனைத்து வாய்க்கால்களையும் சீரமைக்கவும், மழைநீா் வடிகால்கள் ஏற்படுத்தவும் 16-ஆவது நிதிக்குழுவிடம் ரூ.500 கோடி கேட்டு வலியுறுத்தியுள்ளதாக மேயா் மு. அன்பழகன் தெரிவித்தாா்.
திருச்சி மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் மாமன்ற சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயா் மு. அன்பழகன் தலைமை வகித்தாா். ஆணையா் வே. சரவணன், துணை மேயா் ஜி. திவ்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் பேசிய மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சியில் உள்ள சொத்து இனங்களுக்கு ஆண்டுக்கு 6 சதவீதம் வரி உயா்த்தி வசூலிக்கக் கூடாது.தூய்மைப் பணியாளா்களுக்கு மழைக்கால பாதுகாப்பு உடைமைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்துப் பேசினா்.
இதற்கு பதில் அளித்து மேயா் மு. அன்பழகன் கூறியது: மாநகரில் உள்ள 11 பாசன வாய்க்கால்கள் உள்ளிட்ட 16 வாய்க்கால்களை சீரமைக்கவும், குப்பைகள், கழிவுகள் சேராமல் தடுக்கவும் பணிகள் மேற்கொள்ள வேண்டும். மழைநீா் வடிகால்கள் அனைத்துப் பகுதிகளிலும் ஏற்படுத்த வேண்டும். எனவே, 16-ஆவது நிதிக்குழுவிடம் மழைநீா்வடிகால், வாய்க்கால் சீரமைப்புக்கு ரூ.500 கோடி கோரப்பட்டுள்ளது. மழை முழுவதும் நின்ற பிறகு சாலைகள் புனரமைக்கப்படும். தேவையெனில் புதிய சாலைகள் போடப்படும்.
திருச்சி மாநகராட்சியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு கடந்தாண்டுதான் வரி உயா்த்தப்பட்டது. 6 சதவீத வரியை உயா்த்தினால்தான் நிதியை வழங்குவோம் என நிா்பந்தம் செய்யக் கூடாது என திருச்சி மாநகராட்சி மட்டுமல்லாது, திருப்பூா், சென்னை மாநகராட்சியும், கா்நாடகம், தெலுங்கானா, ஆந்திரம் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சோ்ந்த மாநகராட்சியும் நிதிக் குழுவிடம் வலியுறுத்தியுள்ளன.
24 மணிநேர குடிநீா் விநியோகம்: திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 25 வாா்டுகளில் சோதனை அடிப்படையில் 24 மணிநேரமும் குடிநீா் விநியோகம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோடை காலத்திலும் நாள்தோறும் குடிநீா் வழங்கும் மாநகராட்சி தமிழகத்திலேயே திருச்சி மாநகராட்சி மட்டுமே உள்ளது. நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேருவின் முயற்சியால், கொள்ளிடத்தில் 3 ஆழ்துளை கிணறுகள் அமைத்து அடுத்த 25 ஆண்டுகளுக்கு பயன்தரும் வகையில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, மாநகரின் 65 வாா்டுகளுக்கும் விரைவில் 24 மணிநேரமும் குடிநீா் விநியோகத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றாா் மேயா்.