அன்புமணி பின்னால் விவரமறியாமல் சென்றவர்கள் திரும்புவார்கள்! - ஜி.கே.மணி அதிரடி
விஜயகாந்த்: 2-ம் ஆண்டு நினைவுநாள்; தலைவர்களின் நினைவுக் குறிப்புகள்!
தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்தின் 2வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி தே.மு.தி.க-வினர் குருபூஜையாக இந்த தினத்தை அனுசரித்து வருகின்றனர். தேமுதிக தொண்டர்கள் இருமுடி சுமந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அதேபோல் கோடம்பாக்கத்தில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பி-ரேமலதா விஜயகாந்த் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இதனிடையே விஜயகாந்த் நினைவிடத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ வேலு உள்ளிட்டோரும் நேரில் வந்து மரியாதை செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து, முதலவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து தங்கள் சமுக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஏழை மக்கள் மீது பெரும் பரிவு கொண்டு, அனைவருக்கும் உதவும் தன் உயர்ந்த உள்ளத்தால் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்ற எனது அருமை நண்பர் - தே.மு.தி.க. நிறுவனர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களின் நற்பணிகளை நினைவுகூர்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
பாமக தலைவர் அன்புமணி,``விஜயகாந்த் நினைவு நாள்: ஆண்டுகள் கடந்தாலும் மனிதநேயத்திற்காக மக்களால் நினைவு கூறப்படுவார்! தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் நான் அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். தமிழக அரசியலில் மிகவும் வித்தியாசமான மனிதர். குறுகிய காலமே ஆனாலும் அவருடன் பழகிய நாள்கள் மறக்க முடியாதவை. மனித நேயத்தின் சிகரமாக திகழ்ந்தவர். ஆண்டுகள் கடந்தாலும் மனித நேயத்திற்காக என்றென்றும் தமிழ்நாட்டு மக்களால் அவர் நினைவுகூறப்படுவார்." எனத் தெரிவித்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, தவெக கொள்கைப்பரப்புச் செயலாளர் அருண்ராஜ்,``கருப்பு எம்.ஜி.ஆர் என்று மக்களால் கொண்டாடப்பட்டவர்... அரசியல் வியாபாரிகள் மத்தியில் 'அசல்' தங்கமாய் வாழ்ந்தவர்! தவறு கண்டால் பொங்கும் 'கோபம்'... பசி என்று வந்தால் கொடுக்கும் 'குணம்'... அது தான் அவரின் தனித்துவம்! தோழமைக்கு தோழமையாக... துணிச்சலுக்கு துணிச்சலாக... வாழ்ந்து மறைந்த மாமனிதர்!! கள்ளம் கபடமற்ற அந்த வெள்ளை உள்ளத்திற்கு இரண்டாம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்கம்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
எம்.பி. கனிமொழி, ``எளிமை குன்றாத மனிதராக, திரைத்துறையிலும் அரசியலிலும் துணிவோடு செயல்பட்டவர், தே.மு.தி.க நிறுவனர் திரு. விஜயகாந்த் அவர்கள். தலைவர் கலைஞர் அவர்களின் அன்பிற்கு பாத்திரமான அவர், எல்லோர் மீதும் அன்புகாட்டும் பண்பாளராக வாழ்ந்தவர். அவரது நினைவுநாளான இன்று, அவரது மக்கள் பணிகளை நினைவு கூர்கிறேன்." எனத் தெரிவித்திருக்கிறார்.
பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ``இன்று மரியாதைக்குரிய அண்ணன் விஜயகாந்த் அவர்களின் நினைவு நாள். அரசியல் நிகழ்வாக இருக்கட்டும் தனிப்பட்ட நிகழ்ச்சியாக இருக்கட்டும் எப்பொழுதும் என்னை வாய் நிறைய "தங்கச்சி" என்று அழைப்பார்... "தன் கட்சி "மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தாரோ அதேபோல இந்த "தங்கச்சி" மீதும் பாசம் வைத்திருந்தார். அவர் நினைவு நாளில் அவர் நினைவை போற்றுகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
அமமுக தலைவர் டிடிவி தினகரன், ``தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவரும், தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அன்பிற்குரிய சகோதரர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களின் நினைவு தினமான இன்று அவர் ஆற்றிய நற்பணிகளை நினைவில் வைத்துப் போற்றுவோம்." எனத் தெரிவித்திருக்கிறார்.















