புதுச்சேரி: சாலையின் நடுவில் பேனர்கள்... அத்துமீறும் எம்.எல்.ஏக்கள்; அதிகாரிகளைத...
'விஜய்யின் ஆன்லைன் தளபதி; ஜெகதீஸின் பரிந்துரை!'- TN Fact Check Unit இன் தலைவராக்கப்பட்ட 'குரு' யார்?
தமிழக அரசின் 'உண்மை சரிபார்ப்புக் குழு'வின் பெயரை 'தகவல் நம்பகத்தன்மை சரிபார்ப்புக் குழு' எனப் பெயர் மாற்றி 'குரு' என்பவரை அதற்கு தலைவராக நியமித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. யார் இந்த குரு?

கடந்த திமுக ஆட்சியில் 'TN Fact Check Unit' என ஒரு அமைப்பை தொடங்கினார்கள். அந்த அமைப்பின் மிஷன் டைரக்டராக யூடியூபரான ஐயன் கார்த்திகேயன் என்பவர் நியமிக்கப்பட்டார். சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியை தழுவிய நிலையில் ஐயன் கார்த்திகேயன் தன்னுடைய பதவியிலிருந்து விலகினார். கூடவே அந்த அமைப்பில் பணியாற்றிய ஊழியர்கள் பலரும் பணியிலிருந்து விலகினர்.
இந்நிலையில், TN Fact Check Unit யை Information Integrity Desk என பெயர் மாற்றி அந்த அமைப்பின் தலைவராக 'குரு' என்பவரை தவெக அரசு நியமித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த குரு என்பவர் யார் என தவெக கட்சி வட்டாரத்தில் விசாரித்தோம். '2013-14 வாக்கில் அதாவது தலைவா, கத்தி போன்ற படங்கள் வெளியான சமயத்தில்தான் இணையத்தின் வளர்ச்சியை அறிந்து தலைவரே அத்தனை சமூகவலைதளங்களிலும் தனக்கான கணக்கை தொடங்கி ஆக்டிவாகினார்.

இதற்கு பின்னணியில் இருந்தது இப்போது முதல்வருடன் இருக்கும் ஜெகதீஸ்தான். அவர்தான் ஐ.டி.விங்கின் முக்கியத்துவத்தை அப்போதே தலைவரிடம் எடுத்துக் கூறி, இணையதளத்தில் தலைவருக்காக இயங்கும் பல ஐ.டிக்களை உருவாக்கினார். அந்த ஐ.டிக்களின் பின்னால் இருந்த முகங்களில் முக்கியமானவர் குரு. 'ஆன்லைன் தளபதி பேன்ஸ் க்ளப் (OTFC)' என ஒன்றை தொடங்கி இணையத்தில் இயங்கிக் கொண்டிருந்த ரசிகர்கள் பலரையும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைத்தார்.
தலைவர் படங்களின் போஸ்டர்கள், ட்ரெய்லர்கள், ரிவியூவ்கள் போன்றவற்றை இணையத்தில் பூஸ்ட் செய்து அதிகம் பேரிடம் சென்று சேர வைத்தது இந்த குழுதான். கூடவே எதிர்தரப்பு நடிகர்களின் ரசிகர்கள் தலைவரை சீண்டும் போது அதற்கு உரிய பதிலடி கொடுத்ததும் குருவின் டீம்தான். இதுபோக மக்கள் இயக்கத்தின் பணிகளையும் இணையத்தில் பரப்பினர். சென்னையின் முக்கியமான திரையரங்கு ஒன்றில் அடிக்கடி தலைவருக்காக ஸ்பெஷல் ஷோ எடுத்து கூட்டத்தை காட்டி தலைவரை இணையத்தில் பேசுபொருளாகவே வைத்திருப்பார். ஒரு கட்டத்தில் இந்த ஐ.டி.விங் பணிகளை கவனித்துக் கொள்ள வேண்டி அவர் பார்த்து வந்த வேலையையே விட்டு விட்டார்.

தலைவரும் சோசியல் மீடியாவில் குருவின் பணிகளை அறிந்து நேரில் அழைத்தே பாராட்டியிருக்கிறார். ஆன்லைன் ரசிகர்களுக்கென தலைவரோடு தனி போட்டோஷூட் செஷனையும் குரு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். எங்கள் கட்சி வென்றதற்கு சோஷியல் மீடியா பலம் பெரிய காரணமாக இருந்தது. அதற்கு அடித்தளமிட்டவர்களில் ஒருவர் குரு. மேலும், ஜெகதீஸூக்கு நெருக்கமானவர் என்பதால் அவரின் பரிந்துரையும் குருவுக்கு ப்ளஸ்ஸாக இருந்தது. அதனால்தான் ஒரு பெரிய பொறுப்பை தலைவர் அவருக்கு கொடுத்திருக்கிறார்' என்றனர்.
இந்த அமைப்பின் தலைவர் பொறுப்பில் அமர்பவருக்கு மாதம் 3 லட்ச ரூபாய் சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது.












