`வெறுப்புப் பேச்சு'- அண்ணாமலைக்கு சம்மன்; பியூஷ் மானுஷ் தொடர்ந்த வழக்கில் நீதிமன...
விட்டுக்கொடுக்காத அதிமுக; கலக்கத்தில் அமமுக | சமூக அரசியலால் சலசலக்கும் திமுக! - திருப்பூர் அரசியல்
அதிமுக Vs அமமுக மல்லுக்கட்டு
தேசிய ஜனநாயக கூட்டணியில் அண்மையில் இணைந்த அமமுக, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை அல்லது மடத்துக்குளம் தொகுதியில் ஏதாவது ஒன்றை பெற்றுவிட வேண்டுமென தீவிரமாக முயற்சி செய்து வரும் நிலையில், இரண்டு தொகுதிகளையும் விட்டுக் கொடுக்காமல் அதிமுக முரண்டு பிடித்து வருவது அந்தக் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதுஒருபுறம் இருக்க திமுக-வில் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் தொகுதிகளில் சமூக கணக்கை முன்வைத்து நடைபெறும் அரசியல் அந்தக் கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் விஐபி தொகுதியாக உடுமலைப்பேட்டை பார்க்கப்படுகிறது. திமுக-வின் பொருளாளராக நீண்டகாலம் இருந்த முன்னாள் அமைச்சர் சாதிக் பாட்சா, அதிமுக-வில் எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியாக இருந்த முன்னாள் அமைச்சர் ப.குழந்தைவேலு, முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், முன்னாள் அமைச்சரும், தற்போதைய உடுமலைப்பேட்டை எம்.எல்.ஏ-வுமான ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
உடுமலைப்பேட்டை
1951-ஆம் ஆண்டில் இருந்து 2021 வரை நடைபெற்ற தேர்தல்களில் 8 முறை அதிமுக-வும், 4 முறை திமுக-வும், காங்கிரஸ் மூன்று முறையும், சுயேச்சை ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன. அதேபோல், உடுமலைப்பேட்டை தொகுதியையொட்டி உள்ள மடத்துக்குளம் தொகுதி கடந்த 2011-ஆம் ஆண்டு மறுசீரமைப்பின்போது உருவாக்கப்பட்டது. இதுவரை நடைபெற்ற மூன்று தேர்தல்களில் இரண்டு முறை அதிமுக-வும், ஒருமுறை திமுக-வும் வெற்றி பெற்றுள்ளன.
அதிமுக-வின் கோட்டையாக பார்க்கப்படும் உடுமலைப்பேட்டை தொகுதியில் அறிவிக்கப்படாத வேட்பாளராக தற்போதைய எம்.எல்.ஏ-வான ராதாகிருஷ்ணனும், மடத்துக்குளம் தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ-வான சி.மகேந்திரனும் தொகுதிக்குள் நலத்திட்ட உதவிகள், பரிசுப் பொருள்கள் என தீவிரமாக பிரசாரக் களத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அண்மையில் இணைந்த அமமுக உடுமலைப்பேட்டை அல்லது மடத்துக்குளம் ஆகிய இரண்டு தொகுதிகளில் ஏதாவது ஒன்றை பெற்றுவிட வேண்டுமென தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது. அதிமுக-வில் அமைச்சராக இருந்தவரும், தற்போது அமமுக-வின் துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் சி.சண்முகவேல் இரண்டு தொகுதிகளில் ஒன்றை குறிவைத்துள்ளது, அதிமுக-வுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

விட்டுக் கொடுக்காத அதிமுக
இது குறித்து அதிமுக-வைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பேசுகையில், "சண்முகவேல் ஏற்கெனவே, உடுமலைப்பேட்டை தொகுதியில் இரண்டு முறையும், மடத்துக்குளத்தில் ஒருமுறையும் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராக இருந்தவர் என்பதால், இரண்டு தொகுதிக்குள்ளும் அவருக்கு நல்ல அறிமுகம் உள்ளது.
கடந்த 2021 தேர்தலில் மடத்துக்குளம் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டு சண்முகவேல் தோல்வியைத் தழுவினார். இந்த முறை அமமுக தனித்துப் போட்டியிட்டால், தேர்தலில் நிற்கப்போவதில்லை என்ற முடிவில் இருந்த சண்முகவேல், தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணைந்ததை அடுத்து, உடுமலைப்பேட்டை அல்லது மடத்துக்குளம் தொகுதிகளில் ஏதாவது ஒன்றை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் சண்முகவேல் உள்ளார்.

இதற்காக உடுமலை - பழனி சாலையில் அலுவலகத்தையும் சண்முகவேல் திறந்துள்ளார். சண்முகவேலுவின் வருகை அதிமுக-வினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 6 மாதங்களுக்கு முன்பாகவே, உடுமலைப்பேட்டை தொகுதியில் ராதாகிருஷ்ணனும், மடத்துக்குளம் தொகுதியில் மகேந்திரனும் பிரசாரம், நலத்திட்ட உதவிகள் என தடபுடலாக செலவு செய்யத் தொடங்கிவிட்டனர். உடுமலைப்பேட்டை அல்லது மடத்துக்குளம் ஏதாவது ஒன்றை பெற்றுவிட வேண்டும் என்று சண்முகவேல், டிடிவி தினகரன் மூலம் தீவிரமாக காய் நகர்த்துகிறார்.
அந்த இரண்டு தொகுதிகளுக்கும் சண்முகவேல் விருப்ப மனு கொடுத்துள்ளார். சண்முகவேல் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் என்பதாலும், மேற்கு மண்டலத்தில் தங்களுக்கான ஒரு பிடிப்பு இருக்க வேண்டும் என்று தினகரன் நினைப்பதாலும், எப்படியாவது சண்முகவேலுக்கு இந்த இரண்டு தொகுதிகளில் ஒன்றை பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்.
ஒரு பக்கம் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மூலமும், மறுபக்கம் எடப்பாடி பழனிசாமியுடன் தற்போது இணைக்கமாகச் செல்வதால் அதை வைத்தும் உடுமலைப்பேட்டை அல்லது மடத்துக்குளம் தொகுதியை சண்முகவேலுவுக்கு பெற்றுவிட வேண்டும் என்பதுதான் டி.டி.வி.தினகரனின் திட்டமாக உள்ளது.
சண்முகவேலுவுக்கு உடுமலைப்பேட்டை அல்லது மடத்துக்குளம் தொகுதி ஒதுக்கினால், அது தங்களுடைய இருப்புக்கு பாதிப்பாக இருக்கும் என ராதாகிருஷ்ணனும், மகேந்திரனும் நினைக்கின்றனர். உடுமலைப்பேட்டை தொகுதியை தனக்குத்தான் ஒதுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசி உள்ளார் ராதாகிருஷ்ணன். அதேவேளை மடத்துக்குளம் தொகுதியை அமமுக-வுக்கு ஒதுக்கிவிட்டு, தற்போதைய அதிமுக எம்.எல்.ஏ-வான மகேந்திரனுக்கு வரும் தேர்தலில் எம்.பி சீட் வழங்கலாம் என அதிமுக தலைமை யோசித்து வந்தது.
இதை அறிந்து கொண்ட மகேந்திரன் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தன் பங்குக்கு ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார். அனைத்தையும் கேட்டுவிட்டு நம்பிக்கையுடன் செல்லுமாறு மகேந்திரனிடம் கூறியுள்ளதால், தற்போது அவர் உற்சாகத்தில் உள்ளார். இதையும் மீறி இந்த இரண்டு தொகுதிகளில் ஏதாவது ஒன்றை அமமுக-வுக்கு ஒதுக்கினால், தேர்தல் வேலை செய்யமாட்டோம் என வெளிப்படையாகவே அதிமுக தலைமையிடம் அதிருப்தியை காட்டத் தொடங்கி உள்ளனர், அதிமுக நிர்வாகிகள். இதை கவனமாக பரிசீலித்த அதிமுக தலைமை உடுமலைப்பேட்டை அல்லது மடத்துக்குளம் தொகுதியை அமமுக-வுக்கு விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளதான்.
இரு கட்சியினரிடையே புகைச்சல்
அதேவேளை அமமுக சண்முகவேலுவை பல்லடம் தொகுதிக்கு தள்ளிவிட ராதாகிருஷ்ணனும், மகேந்திரனும் நினைக்கின்றனர். பல்லடம் தொகுதிக்கு சண்முகவேல் செல்லும்பட்சத்தில் தேர்தல் செலவைக்கூட இருவரும் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு வந்துள்ளனராம். ஆனால், உடுமலைப்பேட்டை அல்லது மடத்துக்குளம் இந்த இரண்டில் ஏதாவது ஒரு தொகுதியை கொடுத்தால் போட்டியிடுகிறேன். இல்லையென்றால் தேர்தலிலேயே நான் போட்டியிடவில்லை என டி.டி.வி.தினகரனிடம் கண்டிப்பாக சண்முகவேல் தெரிவித்துவிட்டாராம். இதனால், இந்த இரண்டு தொகுதிகளில் அதிமுக-வுக்கும், அமமுக-வுக்கும் இடையே பெரும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது என்கின்றனர் விவரம் அறிந்த அதிமுக-வினர்.
சமூக அரசியலால் சலசலக்கும் திமுக!
இதுஒருபுறம் இருக்க திமுக-வில் சமூக கணக்குகளை முன்னிறுத்தி நடைபெறும் அரசியல் அக்கட்சி வட்டாரத்துக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து திமுக மூத்த நிர்வாகிகள் சிலர் பேசுகையில், "தெலுங்கு பேசும் நாயுடு சமூகத்துக்கு இந்தமுறை உடுமலைப்பேட்டை தொகுதியை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து குடிமங்கலம் மேற்கு ஒன்றியச் செயலாளர் அடிவள்ளி முரளி களத்தில் இறங்கியுள்ளார்.
அதிமுக-வில் இருந்து திமுக-வுக்கு வந்த முரளி இந்த அஜண்டாவை முன்வைத்து சைலன்ட்டாக பணியாற்றுவது, திமுக-வில் இருக்கும் கொங்கு வேளாள கவுண்டர் உள்ளிட்ட பிற சமூகங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடுவின் பெயரை முதல்வர் ஸ்டாலின் சூட்டினார். இதையடுத்து, கம்மவார் நாயுடு சங்கத்தின் தலைவர் ரவீந்திரன் உள்ளிட்டோரை முரளி அழைத்துச் சென்று முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

இது திமுக-வில் இருக்கும் நாயுடு சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக அந்த சமூகத்தைச் சேர்ந்த உடுமலைப்பேட்டை மத்திய மாவட்ட ஒன்றியச் செயலாளரான செந்தில், மாவட்ட மகளிர் அணி செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ-வான தம்பு என்கிற செல்வராஜின் மகளுமான அனிதா, கம்மவார் நாயுடு சங்கத்தின் தலைவர் ரவீந்திரனை நேரில் சந்தித்து தாங்கள் இல்லாமல் முதல்வரைச் சந்தித்தது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.
இதனால், இந்த அரசியலுக்குள் சிக்கிக் கொள்ள வேண்டாம் என கம்மவர் நாயுடு சங்கம் முடிவெடுத்துள்ளது. உடுமலைப்பேட்டையைவிட மடத்துக்குளத்தில்தான் நாயுடு சமூகத்தினர் அதிகமாக உள்ளனர். எனவே, அந்த நாயுடு சமூகத்தைச் சேர்ந்த தங்களுக்கு மடத்துக்குளம் தொகுதியை ஒதுக்க வேண்டுமென மத்திய மாவட்ட ஒன்றியச் செயலாளரான செந்தில், மாவட்ட மகளிர் அணி செயலாளரான அனிதா ஆகிய இருவரும் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.
கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான மு.ஜெயக்குமார் உடுமலைப்பேட்டை தொகுதியையும், மாவட்ட அவைத் தலைவரான ஜெயராமகிருஷ்ணன் மடத்துக்குளம் தொகுதியையும் பெற்றுவிட வேண்டுமென தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.
துணை முதல்வர் உதயநிதியின் குட்புக்கில் உள்ள ஜெயக்குமாருக்கு இந்த முறை உடுமலைப்பேட்டை தொகுதி ஒதுக்கப்படும் என்ற பேச்சு பலமாக அடிபடுவதால் அவர் தற்போதே தேர்தல் களத்தில் இறங்கிவிட்டார். அமைச்சர் சக்ரபாணியின் ஆதரவாளரான ஜெயராமகிருஷ்ணன் மீது கடந்த உள்ளாட்சித் தேர்தலில் சரியாக செயல்படாதது, தேர்தல் பணியில் சுணக்கம் காட்டியது போன்ற குற்றச்சாட்டுகள் இருப்பதால், கட்சித் தலைமையும் அவருக்கு மடத்துக்குளம் ஒதுக்கலாமா? வேண்டாமா? என பரிசீலித்து வருகிறது.
அதேவேளை, மடத்துக்குளத்தில் பலமாக உள்ள அதிமுக-வை எதிர்த்து பெண் வேட்பாளரான அனிதாவை களமிறக்கினால், நாயுடு சமூகத்தினருக்கு பிரதிநித்துவம் அளித்தாற்போல் ஆகிவிடுவதுடன், அந்த சமூகத்தினருக்கு உள்ள அதிருப்தியை சரிகட்டிவிட முடியும் என திமுக தலைமை நினைக்கிறது." என்கின்றனர் திமுக மூத்த நிர்வாகிகள்.
தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், சீட்டை பெறுவதில் கட்சிபேதமின்றி உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் தொகுதியில் களேபரங்கள் நடைபெற்று வருகின்றன.















