`வெறுப்புப் பேச்சு'- அண்ணாமலைக்கு சம்மன்; பியூஷ் மானுஷ் தொடர்ந்த வழக்கில் நீதிமன...
`வெறுப்புப் பேச்சு'- அண்ணாமலைக்கு சம்மன்; பியூஷ் மானுஷ் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!
2023-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய அப்போதைய தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “1956-ம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அறிஞர் அண்ணாவை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மிகக்கடுமையாக சாடினார். மன்னிப்பு கேட்காவிட்டால், மீனாட்சி அம்மனுக்கு பால் அபிஷேகத்துக்கு பதில் ரத்த அபிஷேகம் நடக்கும் என்று எச்சரித்ததார். அதற்கு பயந்து அண்ணாவும், பி.டி.ராஜனும் ஓடிவந்து மன்னிப்பு கேட்டனர்” என்று கூறியிருந்தார். அண்ணாமலையின் பேச்சு உண்மையல்ல என பின்பு ஆய்வாளர்கள் உறுதிசெய்தனர்.
இதற்கிடையில், சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ், `அண்ணாமலை பேச்சு நாத்திகர்கள் மீதான நேரடி மிரட்டில். மீனாட்சி அம்மனுக்கு ரத்த அபிஷேகம் நடக்கும் என மிரட்டில் விடுக்கும் தொனியில் பேசியிருக்கிறார்' என அவர்மீது வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்து அவர் தன் சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்திருந்தார்.
அது குறித்து சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷிடம் பேசினோம். அவர், ``அண்ணாமலை ஒரு கூட்டத்தில்,`கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கடவுளைப் பற்றிப் பேசலாம். நம்பிக்கை இல்லாதவர்கள் பேசினால் ரத்த அபிஷேகம் செய்வோம்' எனப் பேசியது பொதுமக்களுக்கும், நாத்திகர்களுக்குமான நேரடி மிரட்டல். இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், தற்போது தமிழக அரசிடமிருந்து இரண்டாவது முறையாக வழக்குத் தொடர அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இன்று நீதிமன்றம் இந்த வழக்கைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு, அண்ணாமலைக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

`2000 ஆண்டுகளாகப் பாரம்பர்ய தீபாவளி பட்டாசுக்கு எதிராக மிஷனரிகள் செயல்படுகின்றனர்' என அண்ணாமலை பேசிய வெறுப்புப் பேச்சு தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கிலும் அனுமதி பெறப்பட்டு வழக்கு நடந்தது. இந்த வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என அண்ணாமலை மனுத்தாக்கல் செய்திருந்தார். அதையும் உடைத்தோம். தற்போது இந்த வழக்கு ஓராண்டாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதேபோல திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக அண்ணாமலை மற்றும் ஹெச்.ராஜா பேசிய வெறுப்புப் பேச்சுக்காக இருவர்மீதும் திருப்பரங்குன்றத்தில் எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவுசெய்யப்பட்டது. ஆனால் இதுவரை அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.
இது போன்ற விவகாரங்களில் காவல்துறை ஓர் ஊமை அமைப்பாக இருக்கிறது. வெறுப்புப் பேச்சினால்தான் இந்த நாடு இரண்டாகப் பிளவுபட்டது. இந்த வரலாற்றை காவல்துறை முழுமையாக உணரவில்லையோ எனத் தோன்றுகிறது. காவல்துறையினருக்கு இந்தச் சமூகப் பேராபத்து குறித்துத் தெளிவான அறிவு அல்லது சுயபுத்தி தேவை. ஆனால், என்ன நடந்தாலும் வெறுப்புப் பேச்சுக்கு எதிரான என் சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பேன்." என்றார்.



















