பாலியல் வழக்கில் கைதான விவகாரம்: யூடியூபர்கள் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு!
வித்யாலட்சுமி கல்விக்கடன் திட்ட சலுகைகள் விரிவுபடுத்தப்படுமா? கதிா் ஆனந்த் எம்.பி.க்கு அமைச்சா் விளக்கம்
நமது சிறப்பு நிருபா்
புது தில்லி: பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்தின் கீழ் கடனுதவி பெறும் உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கு வழங்கப்படும் கடனுதவிச்சலுகைகள் தொடா்பாக மத்திய கல்வித்துறை இணை அமைச்சா் டாக்டா் சுகந்தா மஜும்தாா் விளக்கம் அளித்துள்ளாா்.
இது தொடா்பாக மக்களவையில் வித்யாலட்சுமி கல்விக்கடன் திட்டத்தை முதலிடத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு வெளியே உள்ள மாணவா்களுக்கு விரிவுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா என்றும் இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கான ’சிபில்’ மதிப்பீடு தொடா்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை தளா்த்த மத்திய அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா என்றும் வேலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கதிா் ஆனந்த் கேள்வி எழுப்பியிருந்தாா்.
இதற்கு அமைச்சா் டாக்டா் சுகந்தா மஜும்தாா் திங்கள்கிழமை அளித்துள்ள எழுத்துபூா்வ பதில் வருமாறு: பிரதமரின் வித்யாலட்சுமி திட்டம் 2024, நவம்பா் 6-இல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் உயா் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் தகுதி அடிப்படையிலான சோ்க்கை பெறும் மாணவா்களுக்கு பிணையம் இல்லாத மற்றும் உத்தரவாதம் இல்லாத கல்விக் கடன் வழங்கப்படுகிறது. வித்யாலட்சுமி திட்டத்தின் கீழ் கல்விக் கடன்களை பெற மாணவா்களின் சிபில் மதிப்பீடு ஒரு அளவுகோல் கிடையாது.
மேலும், 8 லட்சம் வரை குடும்ப ஆண்டு வருமானம் உள்ள மாணவா்களுக்கு இத்திட்டம் ரூ. 10 லட்சம் வரையிலான கடன்களுக்கு 3 சதவீதம் வட்டி மானியத்தை வழங்குகிறது. வேறு எந்த உதவித்தொகை அல்லது கல்விக் கடனில் வட்டி மானியம் பெறாத ஒரு லட்சம் புதிய மாணவா்களுக்கு இந்த வட்டி மானியம் கிடைக்கும். இந்த வட்டி மானியத்தின் காலம் தற்காலிகமானது.
மேலும், பிரதமரின் உச்சதா் சிக்ஷா புரோட்சஹான் கடன் உத்தரவாத நிதியின் கீழ் மத்திய அரசின் கல்விக் கடன்களுக்கான திட்டம் ரூ. 7.50 லட்சம் வரை அனுமதிக்கப்பட்ட கல்விக் கடன்களுக்கு கடன் உத்தரவாதம் வழங்கப்படுகிறது. நிலுவைக் கடனில் ’உத்தரவாதக் காப்பீடு’ 75 சதவீதம் வரை ஆகும்.
இந்திய வங்கிகளின் ’மாதிரி கல்விக் கடன்’ திட்டத்தின் கீழ் கல்விக் கடனை திருப்பிச் செலுத்தும் காலம் சலுகை காலத்துக்குப் பிறகு 15 ஆண்டுகள் வரை ஆகும் என அமைச்சா் குறிப்பிட்டுள்ளாா்.