செய்திகள் :

விருமாண்டி : கலைத் திருவிழா! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 09

post image

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி'ஸ்கோப் தொடர்!

முதல் காட்சி. ஒரு சிறைக்கைதி பேசுகிறார்.

”பெயர் மாறப்பன். தூக்குத் தண்டனைக் கைதி. ஒரு பள்ளிக்கூடத்துல 30 வருசமா ஹெட்மாஸ்டர் வேலை பார்த்துட்டு இருந்தேனுங்க. கரஸ்பாண்டண்ட் பையன் ஒருத்தன் பொண்ணுங்கிட்ட சேட்டை பண்ணினான். சொன்னேன், கேக்கல! அடிச்சேன், கீழ விழுந்து செத்துப் போயிட்டானுங்க. மனவருத்தப்பட்டு, உசுர விட்டுறலாம்னு வீட்டுக்குப் போனேன்.

ஆனா பொண்டாட்டி சொன்னா -வாத்தியாரு இப்படி முன்னுதாரணமா இருக்கக்கூடாது- சரிதாம்னுட்டு நேரா போலீஸ்ல போயி சரணடைஞ்சிட்டேனுங்க. அப்புறம் கோர்ட்டு, அது இதுனு இழுத்தடிச்சுட்டு இப்ப தூக்குத் தண்டனை குடுத்துட்டாங்க. இதுதான் சட்டம், இதுதான் தீர்ப்பு, இதுதான் நியாயம்னா, அன்னிக்கு எங்க வீட்டு விட்டத்துலயே தொங்கிருப்பேனுங்க”

விருமாண்டி | `சினி'ஸ்கோப் 09
விருமாண்டி | `சினி'ஸ்கோப் 09

மாறப்பன், கேமராவுக்கு முன்னால் மனமுடைந்துபோய் இதைச் சொல்கிறார். ஒரு பையன் தவறு செய்திருக்கிறான். எப்பேர்ப்பட்ட தவறு என்றாலும், மரணம் ஒருபோதும் தீர்வாகிவிட முடியாது. ஒரு பள்ளி மாணவனின் உயிர்போக நாம் காரணமாகிவிட்டோமே எனும் குற்றவுணர்வால் தற்கொலை செய்துகொள்ளப் போயிருக்கிறார். அப்போது அவர் மனைவி. ’ஐயோ, என்னை தவிக்கவிட்டுவிட்டுப் போய்விடாதீர்கள்’ என்று அழுது புலம்பாமல், ‘சாவது ஒருபுறமிருக்கட்டும், ஓர் ஆசிரியராக நீங்கள் தற்கொலை செய்துகொள்வது இந்தச் சமூகத்துக்கான தவறான முன்னுதாரணமாகிவிடும்’ என்று சொல்லியிருக்கிறார். எத்தனைத் தெளிவான அறிவுரை பாருங்கள்! அதுவும் ஓர் ஆசிரியருக்கே வழிகாட்டியிருக்கிறார் அவரது மனைவி.

அவரும் சட்டத்தை மதித்து போலீஸில் சரணடைந்திருக்கிறார். ஆனால், அவருக்கு அங்கே மரணதண்டனை வழங்கப்படுகிறது. இப்போது அவரது மனம் எப்படியான குழப்பத்துக்கும், வேதனைக்கும் ஆளாகியிருக்கும்? எப்படி ஒரு சினிமாவில் இப்படி போகிற போக்கில் வருகிற, சில விநாடிகள் நேர வசனத்துக்குள் இத்தனைப் பெரிய கதையை, அதன் உணர்வுகளைப் பொதிந்து வைக்க முடிகிறது?

இதுமட்டுமல்ல, அடுத்தடுத்த காட்சிகள் அனைத்துமே இப்படியானவைதான். ஏஞ்சலா காத்தமுத்துவின் அறிமுகம், பேய்க்காமனின் அறிமுகம், நாராயணன் எனும் தூக்குக்கைதியின் வாக்குமூலம் இவையெல்லாமே சில நிமிடங்கள்தான் வருகின்றன. ஆனால், ஒவ்வொன்றுக்கும் பின்னால் பேசப்பட வேண்டிய விசயங்கள் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன.

நாராயணன் ஏஞ்சலாவிடம் பேசக்கூடாத சிலவற்றைப் பேச முயன்றதால் அன்றிரவே கொல்லப்படுகிறான். மறுநாள் வரும் ஏஞ்சலா, நாராயணனைப் பார்க்க வேண்டும் என்று ஜெயிலர் ஜெயந்த்திடம் கேட்கும் இடம் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

விருமாண்டி | `சினி'ஸ்கோப் 09
விருமாண்டி | `சினி'ஸ்கோப் 09

ஜெயந்த் எனும் அந்த ஜெயிலரின் முகத்தில், அந்த வேலை கொடுக்கும் மன அழுத்தம், தவறுகள் குறித்த கொந்தளிப்பு, அதற்குக் காரணமான இந்த சிஸ்டம் மீதான எரிச்சல் என எல்லாமும் அவரது முகத்தில் தெரியும்.

பேய்க்காமனை வைத்துக்கொண்டு சிலவற்றைப் பேசமுடியாமல் தவிக்கும் அவர், பேய்க்காமனை, “கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணுங்க” என்ற கடுமையான குரலில் வெளியே அனுப்புகிறார். அவரை அனுப்பிவிட்டு ஏதோ உண்மையைத்தான் சொல்லப்போகிறாரா என்று நாம் எதிர்பார்க்கும்போது, அந்த சிஸ்டத்துக்குள் இருக்கும் ஜெயந்த், சிஸ்டத்துக்கு ஆதரவாகவே “நேற்று நாராயணன் உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போற வழியில இறந்துட்டாரு” என்று இறுக்கமான முகத்தோடு ஏஞ்சலாவிடம் சொல்கிறார்.

நாசரின் அற்புதமான நடிப்புக்கு ஓர் பிரமாதமான எடுத்துக்காட்டாக இந்தக் காட்சியை நாம் சொல்லலாம். பேய்க்காமனாக நடித்திருக்கும் சண்முகராஜனின் நடிப்புக்கும் இதே காட்சி ஒரு பதம். நாசர் அவரை வெளியே அனுப்பும் போது, அபவுட் டர்ன் செய்யும் சண்முகராஜனின் முகம் கேமராவின் பார்வையில்தான் இருக்கும். அந்தப்பக்கம் சாந்தமாக இருந்த அவரின் முகம், ஒரே நொடியில் மறுபக்கம் வன்மம் நிறைந்ததாக மாறிவிடும்.

பல படங்களும், ஒரு சில கதாபாத்திரங்களுக்காக, அவற்றில் மறக்க முடியாத நடிப்புத் திறனை சில நடிகர்கள் வெளிப்படுத்தியமைக்காக நினைவுகூரப்படுகின்றன. ஆனால், நாசர், சண்முகராஜன், ரோகிணி, ஓ.ஏ.கே சுந்தர், கமல்ஹாசன், பிரமிட் நடராஜன், நெப்போலியன், பசுபதி, வடிவுக்கரசி, அபிராமி, எஸ்.என்.லட்சுமி, சுஜாதா, தென்னவன் என ஒரு நடிப்புத் திருவிழாவே அரங்கேறிய ஒரு படமாக நாம் விருமாண்டியைத்தான் குறிப்பிட முடியும் என்று நினைக்கிறேன்.

விருமாண்டி | `சினி'ஸ்கோப் 09
விருமாண்டி | `சினி'ஸ்கோப் 09

ஏஞ்சலா காத்துமுத்து எனும் ஒரு ஆவணப்பட இயக்குனர், மரணதண்டனை பற்றி ஓர் ஆய்வு செய்து ஆவணப்படம் எடுக்கும் முயற்சியில் இருக்கிறார். அதுதான் இந்தப் படத்தின் தொடக்கக் காட்சிகளாக வருகின்றன. அதன் பின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இருவரைப் பேட்டிகாணும் வாய்ப்பு ஏஞ்சலாவுக்குக் கிடைக்கிறது.

ஒருவன் கொத்தாளன், ஆயுள் தண்டனைக் கைதி.

இன்னொருவன் விருமாண்டி, மரணதண்டனைக் கைதி.

24 பேர் கொல்லப்பட்ட ஒரே குற்றவழக்கைச் சார்ந்த குற்றவாளிகள்தான் இருவருமே! இருவரும் ஒரே கதையைத்தான் ஏஞ்சலாவிடம் பகிர்ந்துகொள்கிறார்கள். ஆனால், இரண்டும் இருவேறு உணர்வுகளை நமக்குள் ஏற்படுத்துகின்றன. அவர்களின் கோணம் மாறுபடுகிறது. கதையின் பொருள் மாறுகிறது. இதுதான் ரஷோமான் உத்தி எனப்படுகிறது.

அப்படியான மாற்றுக்கோணங்களில் வெளிப்படும் கதையமைப்பை தமிழில் முழுமையாகக் கொண்டுவந்த படம் இந்த விருமாண்டி. படத்தில் வரும் ஒரு முக்கியமான பஞ்சாயத்துக்காட்சியை மையப்படுத்தி, முன்னும் பின்னுமாக அமைக்கப்பட்ட திரைக்கதை மிக உயிரோட்டமானதாகவும், கொந்தளிப்பானதாகவும் இருக்கும்.

உண்மையில் அங்கே என்ன நடந்தது, யார் மீது தவறு, அந்தக் கதையின் முடிவு என்னவென்பது படத்தின் முக்கியமான கதைப்பகுதி. தொடக்கத்திலும், இறுதியிலும் வரும் ஆவணப்படமான மரணதண்டனை குறித்தான விவாதம் இந்தப் படத்தில் ஓரங்கப்பகுதிதான். ஆனால், அந்த ஓரங்கத்துக்கு வலுசேர்க்கும் படியான ஒரு முக்கியமான செய்தி, பிரதானக்கதையில் இருக்கிறது. அதுதான் விருமாண்டிக்கு வழங்கப்பட்டிருக்கும் மரணதண்டனை. விருமாண்டி செய்தது என்ன, உண்மையான குற்றவாளி யார், சூழல் என்னவென்பதெல்லாம் விருமாண்டிக்குக் கொடுக்கப்பட்ட மரணதண்டனை சரியானதா என்ற கேள்வியை எழுப்புகின்றன.

இப்படியான கட்டமைப்புக்குள், படம் கிராமங்களில் நிலவும் வலிமையான சாதியக் கட்டமைப்பு, நிலம் மற்றும் பெண்கள் மீதான ஆண்களின் ஆதிக்கம், கிராமப் பஞ்சாயத்துகளின் அதிகாரம், கிராமப்புற ஆண்களின் வன்முறை என்று பல லேயர்களில் கதை நகர்கிறது.
விருமாண்டி | `சினி'ஸ்கோப் 09
விருமாண்டி | `சினி'ஸ்கோப் 09

நாம் ஏராளமான படங்களைப் பார்க்கிறோம், ரசிக்கிறோம், ஆய்வு செய்கிறோம். ஒவ்வொரு படத்திலிருந்தும், இந்த சமூகத்திற்கு அவசியமான கருத்துக்களைப் பேசக்கூடிய அல்லது மனித உணர்வுகளை ரத்தமும், சதையுமாகக் கொண்டுவந்துவிட்ட மிக முக்கியமான காட்சிகளைப் பார்த்து வியக்கிறோம். அப்படிப்பட்ட காட்சிகளைப் ஒவ்வொரு படத்திலும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதிருக்கிறது. ஆனால், விருமாண்டியில் அப்படியொரு சிக்கலில்லை. பைபிளைப் படிக்க நினைப்பவர்கள், கண்ணை மூடிக்கொண்டு ஏதாவது ஒரு பக்கத்தைத் திறப்பார்கள். அப்படித்தான் விருமாண்டியும்.

அதில் ஒரு காட்சியை ரசிக்க வேண்டும், ஒரு காட்சியை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டுமென்று விரும்பினால், விடியோ பிளேயரின் ஸ்லைடிங் பாரை எங்கு வேண்டுமானாலும் இழுத்து நிறுத்தி வையுங்கள். அந்தக் காட்சியைப் பற்றிப்பேசிட விசயம் நிச்சயமாக இருக்கும்.

படத்தின் ஒலிப்பதிவு ஃபிரான்சிஸ். இந்தப் படத்த்தில், லைவ் சவுண்ட் எனப்படும் நேரடி ஒலிப்பதிவுமுறை முழுதுமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு நடிகர், படப்பிடிப்புத்தளத்தில் நடிக்கும் போது காட்சிக்கேற்ப அழும்போதோ, கோபப்படும்போதோ அல்லது பயப்படும்போதோ அவரது உடல்மொழி மட்டுமல்லாது அவர் மூச்சுவிடும் தொனியும், குரலின் நடுக்கமும் அந்தச் சூழலுக்கு ஏற்ப இயற்கையாக வெளிப்படும். உடன் நடிக்கும் நடிகர்களின் பாதிப்பும் அதில் முக்கியமான பங்காற்றும்.

ஹாலிவுட் படங்களில் வசனங்கள் 90% களத்திலேயே ஒலிப்பதிவு செய்யப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் முழுக்கவும் டப்பிங் முறைதான் பின்பற்றப்படுகிறது. வெளிப்புறப் படப்பிடிப்பானாலும், ஸ்டுடியோ படப்பிடிப்பானாலும் இங்கே மனிதர்கள் மற்றும் சூழலில் ஒலிக்கட்டுப்பாடு மிக மோசமாக இருப்பதால், எளிமையான வழியான டப்பிங்கே காலங்காலமாக செய்யப்படுகிறது. கமல்ஹாசனுக்கு இது ஒரு குறையாக இருந்திருக்கும் என்பதில் நமக்கு சந்தேகமில்லை. இதன் மூலம், உணர்வுப்பூர்வமான பல காட்சிகளில் நடிகர்களின் பங்களிப்பு நேரடியான ஒரு நிகழ்வைப் பார்க்கும் உணர்வைப் பார்வையாளர்களுக்குக் கொடுத்தது.

விருமாண்டி | `சினி'ஸ்கோப் 09
விருமாண்டி | `சினி'ஸ்கோப் 09

ஒளிப்பதிவு கேசவ் பிரகாஷ். இங்கிலாந்தில் சினிமா ஒளிப்பதிவுநுட்பம் குறித்து படித்திருந்த கேசவ், கமல்ஹாசனின் மருதநாயகம் எனும் படம் 1998ல் திட்டமிடப்பட்டு, சில பகுதிகள் படமாக்கப்பட்டபோது ரவி.கே.சந்திரனுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அதன் தொடர்ச்சியாக இது. மதுரை மண்ணில் வெயில் காயும் நேரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுக் காட்சியை, சென்னையில் உருவாக்கப்பட்ட செட்டிலேயே அவரால் துல்லியமாகக் கொண்டுவர முடிந்திருந்தது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் பகல் பொழுதில், திறந்தவெளியில் நடப்பவை. உணர்ச்சிக்கொந்தளிப்பான அனேக குளோஸப் காட்சிகள் படத்தில் இருந்தன. படத்தொகுப்பைச் சுதர்சன் செய்திருக்கிறார்.

இசை இளையராஜா. மொத்தப் படத்தின் உணர்வையும் பின்னணி இசையில் அப்படியே கோர்த்திருந்தார். கேலிபரேஷன் கலர் பார்ஸ் மீது ஓடும், டைட்டிலின் போது வரும் மிஸ்டிக் இசையே விருமாண்டி எதையோ ஒளித்துவைத்திருக்கும் பொக்கிஷம் என்பதை நம்மால் உணரமுடியும்.

கொத்தாளனுக்காகப் விருமாண்டி பொய் சொல்கிறான். அதனால் அவர்கள் கேஸில் ஜெயிக்கிறார்கள். ஆனால், அந்தப் பொய்யை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ’மனசுதாண்டா கோர்ட்டு, அப்புறம்தாண்டா இதெல்லாம்’ என்று ஆதங்கத்தோடு நல்லம்மர் சொல்லிச் செல்லும் வார்த்தைகள் அவனை உலுக்குகின்றன.

’என் அப்பத்தாவின் கிணத்துல சாக்கடையைக் கலக்க விட்டுட்டேன்’ என்று கிணற்றுக்குள் உட்கார்ந்து கலங்கிக் கொண்டிருக்கிறான். காதல் அவனைத் தேற்றுகிறது, வழிகாட்டுகிறது. அங்கே வரும் பாடல்தான், ‘உன்னை விட யாருமில்ல’ பாடல். கமல்ஹாசனும், ஸ்ரேயா கோஷலும் பாடிய இந்தப் பாடலை எழுதியவர்கள் கமலும், இளையராஜாவும்!

‘அந்தக் காண்டாமணி’, ’கருமாத்தூர் காட்டுக்குள்ள’ போன்ற விருமாண்டி எனும் நாட்டார் தெய்வப் பாடல்களை எழுதியவர் கவிஞர் முத்துலிங்கம். கூடவே, ‘மாட விளக்கே’ எனும் அற்புதமான ஒப்பாரிப்பாடலையும் எழுதியிருக்கிறார். அதைப் பாடியது தேனி குஞ்சரம்மாள். அவரது குரலில், ‘மாட விளக்கே, மகராசி மண்ணை விட்டுப்போனியே, சொர்ண நிலாவே சொந்தம் விட்டு சொல்லாமப் போனியே’ என்ற வரிகள் இழப்பின் வலியை வெளிப்படுத்தின.

விருமாண்டி | `சினி'ஸ்கோப் 09
விருமாண்டி | `சினி'ஸ்கோப் 09

தயாரித்தது ராஜ்கமல் நிறுவனத்துக்காக, சந்திரஹாசன். கதை, திரைக்கதையை எழுதி இயக்கியிருந்தவர் கமல்ஹாசன். முதலில் இந்தக் கதை மூன்று கோணங்களில் திரைக்கதையாக விவரிக்கப்பட இருந்ததாக சொல்லப்படுகிறது. அதை நிரூபிக்கும் வண்ணம், கமல்ஹாசன், நெப்போலியன், பசுபதி ஆகிய மூவரின் முகங்களும் ஒன்றுக்கொன்று இணையாக, ஓவர்லேப்பாகியிருக்கும்படி படத்தின் மிக முக்கியமான ஒரு போஸ்டர் டிசைன் அமைக்கப்பட்டிருந்தது.

அந்தப் பஞ்சாயத்துக் காட்சி கமல்ஹாசனின் எழுத்துக்கும், திரைக்கதை அமைப்புக்கும் ஒரு பெரிய எடுத்துக்காட்டாக அமைந்திருந்தது. நிஜமான வில்லனான கொத்தாளன், பின்னணியில் இருந்து கொண்டு, நல்லம்ம நாயக்கர் மீதான பழம்பகை, வன்மம் மற்றும் இப்போதைய சொத்துக்கான ஆசை என விருமாண்டியை ஒரு கைப்பாவையைப் போல இயக்கிக் கொண்டிருப்பான்.

விருமாண்டியின் அப்பாவித்தனத்தையும், கொத்தாளனின் வன்மத்தையும் புரிந்துகொண்டிருந்த நல்லம்ம நாயக்கரும், கொண்டராசுவும் அதை எதிர்கொள்ள முடியாமல் திணறுவார்கள். தாம் ஏதோ பெரிய புத்திசாலி போல, நல்லம்ம நாயக்கரை அழுக்கு வேட்டி ஜமீன் என்று நக்கலடித்து, வம்பு பண்ணுவான் விருமாண்டி.

அந்தப் பஞ்சாயத்தின் முடிவே பல சிக்கல்களுக்கான தொடக்கப்புள்ளியாக அமைந்துவிடும். இந்தக் காட்சியில், நல்லம்மராக நெப்போலியன், கொண்டராசுவாக தென்னவன், விருமாண்டியாக கமல்ஹாசன், கொத்தாளனாக பசுபதி ஆகியோர் ஒருவரை ஒருவர் நடிப்பில் விஞ்சியிருப்பார்கள் எனலாம்.

விருமாண்டி | `சினி'ஸ்கோப் 09
விருமாண்டி | `சினி'ஸ்கோப் 09

கமல்ஹாசன் இதுவரை மொத்தமே மூன்று படங்களைத்தான் இயக்கியிருக்கிறார். மூன்றுமே தமிழின் ஐகானிக் படங்களாக அமைந்திருக்கின்றன.

ஹேராம், விருமாண்டி, விஸ்வரூபம்!

முன்னதாக, அவ்வை சண்முகியின் இந்தி ரீமேக்கான சாச்சி 420 படத்தை அவர் இயக்கியிருந்தாலும் அது அவர் இயக்க நினைத்த படமல்ல. போலவே, அவரது கனவாக சொல்லப்பட்ட மருதநாயகம் முடிக்கப்பட்டிருந்தால் அதுவே அவரது முதல் படமாகவும் அமைந்திருக்கும். இப்படியான ஹைஸ்கேல் படங்களை மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைத்துவிட்டாரோ என்னவோ, தமிழின் சிறந்த இயக்குநராக, இன்னும் பல படங்களைத் தந்திருக்க வேண்டிய கமல்ஹாசன், இந்த விசயத்தில் நம்மை ஏமாற்றிவிட்டார் என்றுதான் சொல்லமுடியும்.

தற்போதைய முன்னணி இயக்குநர்கள் பலரும் விருமாண்டி எப்படி தங்களைப் பாதித்தது என்பதை பல சந்தர்ப்பங்களில் பதிவு செய்திருக்கிறார்கள். எப்போதும் ஏராளமான ரசிகர்களையும், கிரியேட்டர்களையும் பாதித்துக் கொண்டுதான் இருப்பான் விருமாண்டி. ஏனெனில் அவனது வடிவமைப்பும், அவன் தாங்கிக் கொண்டிருக்கும் செய்திகளின் கனமும் அப்படியானது!

(தொடரும்)

'பட்டாசு வெடித்த ரசிகர்கள்; கண்ணீர் விட்டு அழுத தவெக மாவட்டச் செயலாளர்'- கரூர் ஜன நாயகன் காட்சிகள்

தமிழக முதலமைச்சர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம் வெளியாகி உள்ளது. கரூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நான்கு முக்கிய திரையரங்குகளில் ஜன நாயகன் திரைப்படம் வெளியாகியுள்ளது. முதல் காட்சியைப் பார்க்... மேலும் பார்க்க

Jana Nayagan: 'கற்பூர ஆரத்தி; பால் அபிஷேகம்; ஆட்டம் பாட்டம்' - நெல்லை ரசிகர்கள் உற்சாகம்! |Photos

நெல்லை:கற்பூர ஆரத்தி!பால் அபிஷேகம்! ஆட்டம்! பாட்டம் கொண்டாட்டம்! ஜனநாயகன் ரிலீஸ் ரசிகர்கள் உற்சாகம்!Jana Nayagan Review: மதவெறுப்பிற்கு எதிராகக் களமிறங்கும் நாயகன்; அதற்குள் இத்தனை 'கட்சிப் பிரசாரமா'? மேலும் பார்க்க

முதல்வர் விஜய்யின் `ஜனநாயகன்' ரிலீஸ்: ஈரோடு அண்ணா சினிமாஸ் தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாட்டம்!

ஈரோட்டில் ஜனநாயகம் படம் ரசிகர் கொண்டாட்டம்ஈரோட்டில் ஜனநாயகம் படம் ரசிகர் கொண்டாட்டம்ஈரோட்டில் ஜனநாயகம் படம் ரசிகர் கொண்டாட்டம்ஈரோட்டில் ஜனநாயகம் படம் ரசிகர் கொண்டாட்டம்ஈரோட்டில் ஜனநாயகம் படம் ரசிகர் க... மேலும் பார்க்க

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை! - பின்னணி என்ன?

காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியானப் படம் 'மன்னர் வகையறா'. இந்தப் இந்தப் படத்தை தய... மேலும் பார்க்க

Jana Nayagan: ஈரோடு தியேட்டர்களில் 'ஜன நாயகன்'; ரசிகர்கள் கொண்டாட்டம்! | Photo Album

ஈரோட்டில் ஜனநாயகன் படத்திற்கு ரசிகர் கொண்டாட்டம்ஈரோட்டில் ஜனநாயகன் படத்திற்கு ரசிகர் கொண்டாட்டம்ஈரோட்டில் ஜனநாயகன் படத்திற்கு ரசிகர் கொண்டாட்டம்ஈரோட்டில் ஜனநாயகன் படத்திற்கு ரசிகர் கொண்டாட்டம்ஈரோட்டில... மேலும் பார்க்க

Jana Nayagan Review: மதவெறுப்பிற்கு எதிராகக் களமிறங்கும் நாயகன்; அதற்குள் இத்தனை 'கட்சிப் பிரசாரமா'?

காவல் அதிகாரியாக இருக்கும் தளபதி வெற்றிக் கொண்டான் (விஜய்) கொலை குற்றத்திற்காக ஜெயிலில் இருக்கிறார். அங்கு தளபதிக்கு உதவி செய்யும் காவல் அதிகாரி ஶ்ரீகாந்துடனும் (கெளதம் மேனன்) அவருடைய மகள் விஜியுடனும்... மேலும் பார்க்க