"என் திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாத்தை தொடங்கி இருக்கிறேன்"- தனுஷ்
வீசும் வெளிச்சத்திலே: "40 செகண்ட்ஸ் மட்டுமே கதை சொன்னார் ராஜமௌலி !" - மதன் கார்க்கி | வரித்துணையே 5
முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த 'வரித்துணையே..!'.

இன்றையப் பகுதிக்கு, 'நான் ஈ' படத்தில் வரும் 'வீசும் வெளிச்சத்திலே' பாடல் பற்றி பாடலாசிரியர் மதன் கார்க்கியிடம் பேசினோம். பிறமொழி படங்களுக்கு பாடல் எழுதுவது எப்போதுமே சவால் என்பார்கள் பாடலாசிரியர்கள். பாடல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படுவதைப் பொறுத்து அது இங்கு அதிகளவில் டிரோல்களும் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், பாடலாசிரியர் மதன் கார்க்கி பிறமொழி படங்களின் பாடல்களுக்கு தமிழில் அசல் மொழிபெயர்ப்பை தவிர்த்து, அப்பாடல்களுக்கு புத்துயிர் தந்து வருகிறார். 'வீசும் வெளிச்சத்திலே' பாடல் பற்றி அவரிடம் பேச அவருடைய அலுவலகத்திற்கு சென்றோம்.
நம்மிடையே பேசிய மதன் கார்க்கி, "'வீசும் வெளிச்சத்திலே' பாடலை நான் எழுதுவதற்கு முன்பே ஒரு சுவாரஸ்யம் நிகழ்ந்தது. அப்பாவின் அலுவலகத்திலிருந்து பாஸ்கர் (வைரமுத்துவின் பி.ஏ) என்னை அழைத்தார். அவர் 'ஒரு டப்பிங் படத்தின் பாடலுக்காக உங்களை எழுதுவதற்கு அழைக்கிறார்கள்' என்றார். 'நான் டப்பிங் படங்களுக்கு பாடல் எழுதியது கிடையாது. அதனால் வேண்டாமே...' எனவும் சொல்லிவிட்டேன். அப்போது நான் ராஜமௌலி சாரின் முந்தைய படங்களையும் பார்த்தது இல்லை. பிறகு அவர் தெலுங்கில் முக்கியமான இயக்குநர் எனவும் என்னிடம் சொன்னார்கள். பிறகு கீரவாணி சாரின் குழுவினரிடம் பேசினேன். 'இயக்குநர் உங்களிடம் கதையைச் சொல்ல வேண்டுமென்கிறார். அதனால் ஹைதராபாத் வர முடியுமா?' எனக் கேட்டார்கள்.

இயக்குநர் ஒரு பாடலுக்காக எனக்கு கதை சொல்கிறாரே என நானும் ஹைதராபாத் கிளம்பிச் சென்று விட்டேன். ஒரு பாடல் எழுதுவதற்காக நான் பயணித்தது அதுவே முதல் முறை. நான் அப்போது பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கும் விடுப்பு எடுத்துவிட்டு செல்ல வேண்டும் என முதலில் தயங்கினேன். பிறகு அங்கு சென்று விட்டேன்.அங்கு சென்றதும் கீரவாணி சாரை சந்தித்தேன். அவர் எனக்கு சிறு வயதிலிருந்தே பரிச்சயம். 'வானமே எல்லை' படத்தின் பாடல்களுக்காக எங்களின் வீட்டிற்கு அவர் வந்திருக்கிறார்.
பிறகு இயக்குநர் ராஜமௌலி வந்தார். வெறும் 40 செகண்ட்ஸ் மட்டுமே எனக்கு அவர் கதை சொன்னார். இந்த 40 விநாடிகளுக்காகவா என்னை வர வைத்தார்கள் எனத் தோன்றியது. ஆனால், அந்த 40 விநாடிகளில் கதையை அவ்வளவு சுவாரஸ்யமாக என்னிடம் சொன்னார். எனக்கு இது புதிய அனுபவமாகவும் இருந்தது. பிறகு, 'பாடலை தமிழில் எழுதுவதற்கு உங்களுக்குத் தெலுங்குப் பாடல் வரிகளை விளக்க வேண்டுமா?' எனக் கேட்டார். நான் ப்ரஷாகவே தமிழில் எழுதுகிறேன் எனச் சொல்லிவிட்டேன். எப்போதுமே பிறமொழிப் படங்களுக்கு பாடல் எழுதும்போது, அம்மொழிகளின் விளக்கத்தை நான் கேட்கமாட்டேன். சூழலைக் கேட்டுவிட்டு தமிழில் ப்ரஷாகவே எழுதத் தொடங்குவேன். சில சமயங்களில், சூழலுக்கு தேவையிருந்தால் மட்டுமே வரிகளின் அர்த்தத்தைக் கேட்டு தெரிந்துகொள்வேன். சமீபத்தில் வந்த 'காந்தாரா' திரைப்படத்திற்கும் அதனுடைய சூழலை மட்டும் கேட்டுவிட்டுதான் எழுதினேன். "என்றார்.

"ஒரே ஃப்ளோவில் (flow) எழுதப்பட்ட பாடல் 'வீசும் வெளிச்சத்திலே'. எந்த மாற்றமும் செய்யவில்லை. 'வீசும் வெளிச்சத்திலே துகளாய் நான் வருவேன்' என்கிற வரிகள் துகள் இயற்பியல். மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிறகு நாயகன் நாயகிக்கு வெளிச்சம் தருகிறார். அந்த வெளிச்சத்திலிருந்து துகளாய் நான் வருகிறேன் என்பதை அவர் உணர்த்துகிறார். ராஜமெளலி சார் தமிழை எழுத்துக்கூட்டிப் படிப்பார். அவர் வரிகளைப் படித்த பிறகு மிகவும் சிலாகித்துப் பேசினார். 'பென்சிலை சீவிடும் பெண்சிலையே' என்கிற வரியைப் பற்றி அவர் பேசிக் கொண்டாடினார்.
'இதுபோன்றதொரு வரியை தெலுங்கில் அமைக்க முடியுமா எனத் தெரியவில்லை நான் பாடலாசிரியரிடம் இதைப் பற்றிப் பேசிப் பார்க்கிறேன்' எனவும் சொன்னார். பிறகு 'வசனங்கள் எழுதுவீர்களா?' எனவும் ராஜமெளலி சார் கேட்டார். 'நிச்சயமாக நான் 'எந்திரன்' திரைப்படத்தில் வசனப் பணிகள் மூலமாகத்தான் அறிமுகமானேன்.' என்றேன். 'அது எனக்குத் தெரியாமல் போய்விட்டதே! தெரிந்திருந்தால் உங்களை அழைத்திருப்பேனே..' எனவும் சொன்னார். இந்தப் பாடல்தான் என் மீது ராஜமெளலி சாருக்கு நம்பிக்கை கொடுத்தது எனலாம்.

அதன் பிறகுதான் 'பாகுபலி', 'ஆர்.ஆர்.ஆர்' படங்களில் எங்களுடைய பணி தொடர்ந்தது. இந்தப் படத்தின் பாடல்களை மட்டும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படம் பிடித்தார்கள். 'கொஞ்சம் உளறிக் கொட்டவா' பாடலுக்கு தமிழ் வரிகளின் லிப் சிங்கும் இருக்கும்." என்றவர், " 'நான் ஈ' படத்திற்கு கிரேசி மோகன் சார்தான் வசனம் எழுதினார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் எனக்காக அவரொரு வெண்பாவை எழுதிக் கொடுத்தார். 'தாயாரா தந்தையாய் யார் உன்னை வாயார வாழ்த்தியது, வாரிசு செய்யாரே, யாக்கி கொடுத்தார் எதுகைக்கும் மோனைக்கும் காக்கி சினிமாவைக் கலக்கு' என எழுதிக் கொடுத்தார். இது மறக்க முடியாத பாராட்டு!" என்றார் புன்னகையுடன்.


















