தொகுதி் பங்கீடு: பேச்சுவார்த்தைக்கு அழைத்த அறிவாலயம்... விசிக-வின் கணக்கு என்ன?
மதுரை: சீனி அவரைக்காய் அல்வா டு சுண்டைக்காய் பிரியாணி; சுவையால் மிரளவைத்த 'சமையல் சூப்பர் ஸ்டார்'
சக்தி மசாலா, சத்யா ஏஜென்சீஸ், நாகா, கோல்டு வின்னர், எக்ஸோ, அஸ்வின் ஸ்வீட்ஸ், ஆர்.கே.ஜி நெய், லலிதா ஜுவல்லரி, சௌபாக்யா, சுப்ரீம் ஃபர்னீச்சர், இந்தியன் ஆயில், மெரிபா பன்னீர், விகடன் பிளே, ஹலோ எஃப்.எம் ஆகியவை இணைந்து வழங்கும் ‘அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்-3’ போட்டிகள் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.

விழுப்புரம், புதுச்சேரி, வேலூர், சேலம் மற்றும் கோவையைத் தொடர்ந்து, சனிக்கிழமை (பிப்.28) மதுரையில் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு எதிரே உள்ளே ரியோ கிராண்டே ஹோட்டலில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்தனர்.
சமயநல்லூர், கே.புதூர், விராட்டிப்பத்து, ஐயர் பங்களா, விளாங்குடி, திருப்பாலை, மூன்றுமாவடி, ஆரப்பாளையம், அவனியாபுரம், ஜெய்ஹிந்த்புரம், வில்லாபுரம், காளவாசல், சிம்மக்கல் போன்ற மதுரையின் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து சுமார் 113 போட்டியாளர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என எல்லா வயதினரும் பங்கேற்றுள்ளனர்.

போட்டியின் நடுவரான தொலைக்காட்சி மற்றும் யூடியூப் பிரபலம் செஃப் தீனா குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அவர் மதுரையின் உணவு முறை மற்றும் உபசரிப்பு பற்றி பேசியவர், இதற்கு முந்தைய போட்டிகளில் கிடைத்த அனுபவம், சரியான உணவு முறையைப் பின்பற்றுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நலன்கள் பற்றியும் விரிவாகப் பேசினார்.
முதல் சுற்றில், போட்டியாளர்கள் தங்கள் வீட்டிலிருந்து தயாரித்துக் கொண்டு வந்த சுவையான உணவுகளைக் காட்சிப்படுத்தியுள்ளனர். ராகி அல்வா, இளநீர் புட்டிங், சுண்டைக்காய் பிரியாணி, நார்த்தங்காய் மண்டி, சிறுதானிய லட்டு, இலந்தை அல்வா, சாமை எக் ப்ரைடு ரைஸ், வெற்றிலை பாயாசம், பீட்ரூட் கேசரி, ஜாக் ப்ரூட் டிலைட், வல்லாரை வடை, பனீர் சோயா ரைஸ், சங்குப்பூ பர்பி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு குளோப் ஜாமூன், சீனி அவரைக்காய் அல்வா என அரங்கம் நெடுக பல்சுவை உணவுகள் வரிசைகட்டி நிற்கின்றன.





செஃப் தீனா ஒவ்வொரு உணவின் சுவை,தனித்துவம் மற்றும் தயாரிப்பு முறை குறித்து கேட்டுத் தெரிந்துகொண்டார். உணவை ருசி பார்த்து மதிப்பெண் வழங்கி வருகிறார். இதே நேரத்தில், அடுத்த சுற்றுக்கு தயாராகக் காத்திருந்த போட்டியாளர்களுக்காக சுவாரஸ்யமான சிறு சிறு போட்டிகள் நடத்தப்பட்டு, உற்சாகமூட்டும் பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் சுற்றில் தேர்வாகும் போட்டியாளர்கள், இரண்டாவது சுற்றான நேரடி சமையல் போட்டியில் பங்கேற்பார்கள்.

















