'விஜய்யே மன உளைச்சலில் இருப்பார்!' - அறிவாலயத்தில் கருணாஸ் பேட்டி
சமஸ்கிருத சர்ச்சை: மன்னிப்பு கோரிய உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகம்!
கல்வியின் சிகரமாகக் கருதப்படும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம், ஒரு சமூக ஊடகப் பதிவினால் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. மொழிகளையும் கலாசாரங்களையும் ஆழமாகப் பயிற்றுவிக்கும் ஒரு நிறுவனத்தின் கவனக்குறைவு உலகளாவிய விவாதமாக மாறியுள்ளது. சமஸ்கிருதப் பாடத்திட்டத்தை விளம்பரப்படுத்த ஹார்வர்ட் பயன்படுத்திய ஒரு சித்திரம், கலை - மத உணர்வுகளுக்கும் இடையிலான மெல்லிய கோட்டைத் தாண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Blatant Hinduphobia and bigotry on display at @Harvard’s South Asian studies department.
— CoHNA (Coalition of Hindus of North America) (@CoHNAOfficial) February 27, 2026
A scene that feels straight out of a horror movie, starring a dark Hindu figure (notice the Tilak on his forehead) dangling some sort of ghostly figurines in his hands.
This is how… pic.twitter.com/UYzt3dQLMp

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் துறை (Department of South Asian Studies), தனது `தொடக்கநிலை சமஸ்கிருதம்' (Elementary Sanskrit) பாடப்பிரிவை விளம்பரப்படுத்த சமூக வலைதளப் பதிவில் ஒரு புகைப்படத்தைப் பயன்படுத்தியது. அதில் கருமை நிறத்தில் திலகம் அணிந்த ஒரு உருவம், பேய் போன்ற பொம்மையை கையில் வைத்திருப்பது போன்ற சித்திரம் இடம்பெற்றிருந்தது. அந்தப் படம் இந்து மதத்தைச் சிதைத்துக் காட்டுவதாகவும், `இந்துஃபோபியா’ (Hinduphobia - இந்து மத வெறுப்பு) உணர்வைத் தூண்டுவதாகவும் வட அமெரிக்க இந்துக்களின் கூட்டணி (CoHNA) மற்றும் பல அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இதுகுறித்து விளக்கமளித்த பல்கலைக்கழகம், அந்த ஓவியம் இந்தியக் கலைஞர் ஒருவரால் (அனிருத் சாய்நாத்) மகாபாரதத்தில் கிருஷ்ணரின் லீலைகளைக் குறிக்கும் வகையில் `மாஸ்டர் ஆஃப் பப்பெட்ஸ்’ (Master of Puppets) என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டது என்றும், அது தவறான புரிதலுக்கு வழிவகுத்ததற்காக வருந்துவதாகவும் தெரிவித்தது. மேலும், எதிர்காலத்தில் இத்தகைய பதிவுகளைத் தவிர்க்க உட்புற ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அதிகாரபூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளது.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் வெறும் ஒரு மொழிப் பாடமாக மட்டும் பார்க்கப்படாமல், ஆசியாவின் அறிவுசார் வரலாற்றைப் புரிந்துகொள்ளும் ஒரு கருவியாகக் கற்பிக்கப்படுகிறது. ஹார்வர்டில் சமஸ்கிருதம் 1872-ஆம் ஆண்டு முதல் கற்பிக்கப்பட்டு வருகிறது.
சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் மொழிக்கும் பெரும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தமிழக அரசு மற்றும் உலகத் தமிழர்களின் பங்களிப்போடு ஹார்வர்டில் தனித் தமிழ் இருக்கை (Tamil Chair) உருவாக்கப்பட்டது. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் வெறும் மொழியாக மட்டுமல்லாமல், உலகத் தரத்திலான ஒரு செவ்வியல் ஆராய்ச்சித் துறையாகவும் வளர்ந்து வருகிறது.
சமஸ்கிருதம் மற்றும் தமிழ் ஆகிய இரு செம்மொழிகளையும் ஒரே துறையின் கீழ் (South Asian Studies) கற்பிப்பதன் மூலம், திராவிட மற்றும் ஆரிய மொழி மரபுகளுக்கு இடையேயான தொடர்புகளை மாணவர்கள் ஆய்வு செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் இந்தப் பதிவு, ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத் திட்டமிட்டுப் புண்படுத்தும் உள்நோக்கத்துடன் செய்யப்பட்டதல்ல என்று விளக்கியுள்ளது. ஒரு கலைப்படைப்பை அதன் வரலாற்றுப் பின்னணியோடு அணுக முயன்றபோது ஏற்பட்ட சிறிய `கவனக்குறைவே' இவ்வளவு பெரிய விவாதமாக மாறியுள்ளது.

இருப்பினும், இச்சம்பவம் ஒரு முக்கியமான பாடத்தை உணர்த்துகிறது. பன்முகத்தன்மை கொண்ட இன்றைய உலகில், ஒரு கலாசாரத்தின் அடையாளங்களைப் பயன்படுத்தும்போது மிகுந்த விழிப்புணர்வு அவசியம். ஹார்வர்ட் போன்ற ஒரு நிறுவனம் தனது தவறை உணர்ந்து உடனே மன்னிப்பு கோரியிருப்பது, அந்த நிறுவனத்தின் முதிர்ச்சியையும், மாற்றுத் தரப்பு உணர்வுகளுக்கு அது அளிக்கும் மதிப்பையுமே காட்டுகிறது. இத்தகைய சிறு சறுக்கல்கள், எதிர்காலத்தில் உலகளாவிய பண்பாடுகளை இன்னும் ஆழமாகவும், மரியாதையுடனும் அணுக அந்த நிறுவனத்திற்கு ஒரு நல்வாய்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.




















