S P Velumani வெல்வாரா? | கோவை தொண்டாமுத்தூர் களநிலவரம் என்ன்? | Ground Report | ...
Vinay Kulkarni: பாஜக பிரமுகர் கொலை வழக்கு; காங்கிரஸ் எம்.எல்.ஏ வினய் குல்கர்னிக்கு ஆயுள் தண்டனை!
கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாஜக பிரமுகர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில், தார்வாடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வினய் குல்கர்னி உள்ளிட்ட 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி, தார்வாடு பகுதியின் பாஜக உறுப்பினரான யோகேஷ் கவுடா, அங்குள்ள தனது உடற்பயிற்சிக் கூடத்தில் மர்ம நபர்களால் மிகக் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
அப்போது மாவட்டப் பொறுப்பு அமைச்சராக இருந்த வினய் குல்கர்னிக்கும் இந்தக் கொலைச் சம்பவத்திற்கும் தொடர்பிருப்பதாகப் புகார்கள் எழுந்தன.
முதலில் உள்ளூர் போலீஸாரால் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கு, கடந்த 2019-ம் ஆண்டில் சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிபிஐ தனது விசாரணையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வினய் குல்கர்னிதான் இந்தக் கொலைக்குக் காரணமாகச் செயல்பட்டிருக்கிறார் என்பதைக் கண்டறிந்து, 2020-ல் அவரைக் கைது செய்தது. பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த வழக்கு பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த புதன்கிழமை நீதிபதி சந்தோஷ் கஜானன் பட், வினய் குல்கர்னி உள்ளிட்ட 17 பேரைக் குற்றவாளிகள் என அறிவித்தார்.
சிபிஐ தரப்பில், குற்றவாளிகளுக்கு எவ்வித மன்னிப்பும் இல்லாத ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இன்று வினய் குல்கர்னி உள்ளிட்ட 17 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.


















