Doctor Vikatan: கோடையிலும் விடாமல் வாட்டும் இருமல்... தேன் சாப்பிட்டால் சரியாகும...
180 மைனர் பெண்கள் பாலியல் வன்கொடுமை; டெலிகிராமில் பரவிய வீடியோ; குற்றவாளியின் வீடு இடிப்பு!
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் மைனர் பெண்கள் 180 பேரை காதலிப்பதாகப் பேசி அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய அயன் அகமத் (18) என்ற வாலிபர் இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 180 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த 350 ஆபாச வீடியோக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அமராவதி அருகில் உள்ள பரத்வாடா என்ற நகரத்தில் வசிக்கும் அயன் அகமத் சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ் ஆப், ஸ்நாப்சாட் போன்ற குழுக்கள் மூலம் மைனர் பெண்களிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு அவர்களை பல இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.
அந்தக் காட்சிகளை வீடியோ எடுத்து ஆன்லைனில் பகிர்ந்துள்ளார். அதோடு அதனைக் காட்டி பெண்களை மிரட்டி விபசாரத்திலும் ஈடுபடுத்தியதாக புகார் எழுந்துள்ளது. இந்த வீடியோக்களை அயன் அகமத் நண்பர்கள் மூன்று பேரும் தங்களது மொபைல் மூலம் வேறு நபர்களுக்கு பகிர்ந்துள்ளனர்.

இது தொடர்பாக போலீஸார் மூன்று பேரை கைது செய்துள்ளனர். அயன் அகமத் கைதைத் தொடர்ந்து பரத்வாடா நகராட்சி நிர்வாகம் புல்டோசருடன் சென்று அயன் அகமத் வீட்டின் குறிப்பிட்ட பகுதியை இடித்துத் தள்ளியது.
அதோடு இப்புகார் குறித்து விசாரிக்க அமராவதி போலீஸார் சிறப்பு விசாரணைக்குழு ஒன்றையும் அமைத்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட வீடியோக்களின் அடிப்படையில் இதுவரை பாதிக்கப்பட்ட 8 மைனர் பெண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களது பெற்றோரிடம் வாக்குமூலம் கொடுக்கும்படி போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் பல பெண்கள் புகார் கொடுக்க முன்வருவார்கள் என்று அமராவதி போலீஸ் அதிகாரி விஷால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் கைதான குற்றவாளிகளால் அந்த வீடியோக்கள் டெலகிராமில் பரவி இருந்தது. அந்த வீடியோக்களை போலீஸார் கண்டுபிடித்து அதிலிருந்து அகற்றி இருக்கின்றனர். இதுதவிர பாதிக்கப்பட்ட பெண்களில் யாராவது காணவில்லையா அல்லது யாரேனும் தற்கொலை செய்து கொண்டார்களா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் தாங்களாக முன்வந்து புகார் செய்யவேண்டும் என்று போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். முன்னதாக பா.ஜ.க எம்.பி அனில் போண்டே இப்பிரச்னை குறித்து அமராவதி போலீஸில் புகார் செய்தார். ஏற்கெனவே நாசிக் டி.சி.எஸ் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களுக்கு பாலியல் தொல்லை பிரச்னை சமீபத்தில் பெரிய அளவில் புயலைன் கிளப்பியிருக்கும் நிலையில் அமராவதி பிரச்னையும் சேர்ந்துகொண்டுள்ளது.




















