ஹரியானா: `குடிபோதையில் ரகளை' காரை நடுரோட்டில் நிறுத்தி வாக்குவாதம் செய்த பெண் செ...
ஈரோடு மாவட்டம் காங்கயம்பாளையம், நட்டாற்றீஸ்வரர் கோயில்: அகத்தியர் பிரதிஷ்டை செய்த அருள் தரும் ஈசன்
அகத்தியர் வழிபட்ட கோயில்கள் பல ஆயிரம் உள்ளன. அங்குள்ள ஈசனுக்குப் பெரும்பாலும் அகத்தீஸ்வரர் என்பதுதான் திருநாமம். அப்படி அகத்தியர் வழிபட்ட அற்புத மகிமை உடைய ஒரு கோயில்தான் ஈரோடு மாவட்டம், நஞ்சை ஊத்துக்குளி அருகில் உள்ள காங்கயம்பாளையத்தில் உள்ளது. இங்கு ஈசன் காவிரியின் நடுவில் கோயில் கொண்டிருக்கிறார். அதனால் இவருக்கு அருள்மிகு நட்டாற்றீஸ்வரர் என்பது திருநாமம்.

கயிலையில் நடைபெற்ற சிவன் பார்வதி திருமணத்தினால் பூமியின் சமநிலை குலைய அதைச் சரிசெய்ய தென் திசை அனுப்பப்பட்டார் அகத்தியர். அப்படி அவர் தெற்கே வந்தபோது குடகில் வடக்கு நோக்கி பாய்ந்த காவிரியை, விநாயகரின் அருட்துணையோடு தெற்கு நோக்கி பாயச் செய்தார் அகத்தியர். அப்போது வாதாபி, வில்வலன் ஆகிய அசுரர்கள் தந்திரம் செய்து அகத்தியரை அழிக்க முயன்றனர். அகத்தியரோ அவர்களை அழித்தார். அதனால் அவரை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. அந்த தோஷம் நீங்குவதற்காகக் காவிரியின் நடுவில் அமைந்திருந்த நாபிக்குன்றம் என்ற இந்த ஸ்வேதமலையின் மீது ஏறி, மண்ணால் லிங்கம் அமைத்து 12 நாள்கள் தொடர்ந்து வழிபட்டு விமோசனம் அடைந்தார் அகத்தியர்.
பிற்காலத்தில், சுந்தர சோழன் இந்தத் தலத்தில் ஆலயம் எழுப்பி கும்பாபிஷேகம் செய்தான் என்கின்றன புராணங்கள். ராமேஸ்வரத்துக்கு இணையான சிறப்பு இந்தத் தலத்துக்கும் உண்டு என்கிறார்கள் பக்தர்கள்.
வேறொரு சிறப்பும் இத்தலத்துக்கு உண்டு. முருகப்பெருமான், தெற்கு நோக்கி அருள்வதோடு பிரமச்சாரியாகவும் அருள்பாலிக்கிறார். பக்தர்களின் குரலுக்கு ஓடிவந்து காக்க வேண்டி அவர்களை நோக்கி ஓர் அடியெடுத்து வைக்கும் அருட்கோலத்தில் அருள்வது, மிகவும் சிறப்பான ஒன்று என்கிறார்கள்.

இரண்டு நிலைகளாக அமைந்திருக்கும் ஆலயத்தில், சிவனார் மேல் தளத்திலும், நல்லநாயகி அம்பாள் கீழ் தளத்திலும் அருள்கிறார்கள். இருவரும் விவாக கோலத்தில் அருள்வது விசேஷ அம்சம்.
கீழ் தளத்தில் இருக்கும் பிள்ளையாரைத் தரிசித்துவிட்டு அப்படியே சிவசந்நிதிக்கு வலமாக வந்தால், அந்த பாதை அமைப்பு ‘ஓ’ எனும் வடிவிலும், பிறகு கீழ் தளத்தில் இருக்கும் அம்பாளைத் தரிசித்துவிட்டு முருகன் சந்நிதியை அடைகிறோம் எனில், அந்தப் பாதை அமைப்பானது ‘ம்’ வடிவிலும் அமையும்.ஆக, இத்தலம் பிரணவ வடிவில் திகழ்கிறது என்கிறார்கள்.
நட்டாற்றீஸ்வரர் திருக்கோயிலைச் சுற்றிலும் நான்கு உப கோயில்கள் அமைந்துள்ளன. அவை: சாத்தம்பூர் வள்ளாலீஸ்வரர் கோயில், காலமங்கலம் மத்யபுரீஸ்வரர் கோயில், முலசியில் உள்ள முக்கண்ணீஸ்வரர் கோயில், கொக்கராயன் பேட்டை (ஏமப்பள்ளி) பிரம்மபுரீஸ்வரர் கோயில். இதில் பிரம்மபுரீஸ்வரரை குக்குட நாதேஸ்வரர் எனவும் அழைக்கிறார்கள். நட்டாற்றீஸ்வரரைத் தரிசிக்கவரும் அன்பர்கள் இந்தக் கோயில்களையும் தரிசித்து வரம்பெற்று வரலாம்.

சிவனாருக்கு உகந்த ஞாயிறு, திங்கட்கிழமைகளில் இக்கோயிலில் வழிபடுவது விசேஷம். அகத்தியர் இங்கு 12 நாள்கள் வழிபட்டு அருள் பெற்றார். அவரது வழிபாட்டின் நிறைவு நாள் அதாவது 12-ம் நாள் சித்திரை முதல் நாளாம். எனவே, அந்த தினம் இங்கே வெகுகோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. திருமணம் தடைப்பட்ட அன்பர்கள், இந்தக் கோயிலுக்கு வந்து அகத்திய மகரிஷி போலவே 12 நாள்கள் தொடர்ந்து நட்டாற்றீஸ்வரரை வழிபட்டால், தடைகள் யாவும் நீங்கி விரைவில் கல்யாண மாலை தோள்சேரும் என்கிறார்கள்.
அதேபோல், கணவன் - மனைவிக்கு இடையேயான பிணக்குகள் நீங்கவும் இந்தக் கோயிலுக்கு வந்து அம்மையையும் அப்பனையும் மனமுருக வேண்டிக்கொள் கிறார்கள். இதனால், நட்டாற்றீஸ்வரரின் நல்லருளால், குறிப்பிட்ட தம்பதிகளின் வாழ்வில் பிணக்குகள், பிரச்னைகள் நீங்கி தாம்பத்தியம் சிறந்தோங்கும் என்பது நம்பிக்கை.




















