"நீங்கள் போதைப்பொருளை ஊக்குவிப்பதாக மக்கள் நினைக்க மாட்டார்களா?" - மம்மூட்டியைச்...
`வீட்ல இதுலாம் தேவையில்லாத வேலைன்னு தான் சொன்னாங்க; ஆனா.!' - லட்சத்தில் வருமானம் ஈட்டும் உஷா ராணி
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் உஷா ராணி(45). ஏ.என்.எம் முடித்த இவரோ தற்போது மூலிகை சோப்பு, மூட்டுவலி தைலம், ஹெர்பல் டை போன்ற 18- க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரித்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் விற்பனை செய்து, மயிலாடுதுறை மாவட்டத்தின் வளர்ந்து வரும் தொழிலபதிராக திகழ்கிறார்.
இவரின் வெற்றிக்கதையை அறிய நேரில் சென்றபோது, பரப்பரப்பான வேலையிலும் நம்மை பரவசத்துடன் வரவேற்று, நம்மிடையே மகிழ்வுடன் பேச தொடங்கினார்.
"நான் நர்ஸிங் முடிச்ச உடனே எங்க வீட்ல கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. நான் வீட்ட விட்டு பெருசா எங்கையும் வெளிய போனதே கெடையாது. எங்க வீட்ல என்ன வெளியில விட்டதும் கெடையாது. அப்படியே விட்டாலும் யாராவது ஒருதவங்க கண்டிப்பா என் கூடவே துணைக்கும் வந்துடுவாங்க.
காலேஜ் படிச்சப்ப வேலைக்கு போகனும். வெளியில போகனும் அப்டின்ற ஆசையெல்லாம் எனக்கு வந்ததே இல்ல. அதெல்லாம் எனக்கு வந்தது என்னமோ கல்யாணத்துக்கு அப்பறம் தான்.

முதல்ல மகளிர் சுய உதவிக் குழு ஒன்னு என்னோட தலைமையில ஆரம்பிச்சேன். அந்த குழுக்கே எங்க வீட்ல எல்லாம் வேணான்னு தான் சொன்னாங்க. ஆனா, நான் அதையெல்லான் பெருசா எடுத்துகல. இப்ப 13 வருசமா அந்த குழுவ சிறப்பா நடத்திட்டு வரேன்.
அந்த குழுதான் நான் வேலைக்கு போறதுக்கான முதல் படின்னு கூட சொல்லாம். எங்க வீட்டுகாரு வெளிநாட்டில இருக்காரு. எனக்கு ரெண்டு பையன். ஒருத்தன் காலேஜ் படிக்கிறான். இன்னொருத்தன் ஸ்கூல் படிக்கிறான். ரெண்டு பசங்களுக்கும் அவங்க வேலைய அவங்க பாத்துகுற அளவு வளந்துட்டாங்க. பசங்க ரெண்டு பேரும் ஸ்கூல் போயிடட்டா வீட்டுல நான் மட்டும் தனியாத்தான் இருக்கனும்.
அப்படி தனியா இருக்கும் போது தான் எதாவது சாதிக்கணும் எதாவது பண்ணனுன்ற ஆசையே எனக்கு அதிகமா வந்துச்சி. அந்த தனிமையே போக்க பக்கத்துல ஃபிரண்ட் வீட்டுக்கு போவேன். அவங்க சோப்பு தயாரிச்சி விக்கிறாங்க. அவங்கள்ட்ட எப்படி செய்றீங்கன்னு கேட்டதுக்கு தேங்காய் எண்ணெய்ல செய்றன்னு மட்டும்தான் சொன்னாங்க. வேற எதுவும் சொல்லல.
அப்ப தான் எனக்கும் ஒரு சின்ன யோசன வந்துச்சி... நாமும் சோப்பு செய்யலான்னு, அதுவும் இயற்கையான முறையில தரமான காலத்துக்கு உகந்த மூலிகை சோப்புகளாக தான் தயாரிக்கனுன்னு நெனச்சேன். சின்மேக்ஸ் நிறுவனத்துல சேர்ந்து சோப்பு தயாரிக்க முழுசா கத்துக்கிட்டு சோப்பு தயாரிக்கவும் ஆரம்பிச்சிட்டேன்.

எனக்கு பொம்பள புள்ள பொறந்தா சுபிக்ஷான்னு பேரு வைக்கனுன்னு ஆசப்பட்ட. அதனால அதே பேரதான் என்னோட குழுவுக்கும் நான் தயாரிக்கிற சோப்புகளுக்கும் வச்சேன்.
ஆரம்பத்துல சோப்புகள ஸ்கூல், காலேஜ், தெரிச்சவங்கன்னு இப்படி எல்லாருக்கும் இலவச தான் கொடுந்தேன். அப்படி கொடுத்துல ஒரு சில பேரு நல்லா இருக்குன்னு சொல்லி சோப் ஆடரும் பண்ண ஆரம்பிச்சாங்க.

இப்படி தான் எனக்கு கொஞ்சம் கொஞ்சமா ஆர்டர் கெடச்சுது. சென்னையில ஒரு ஃபங்சனுக்கு ரிட்டன் கிஃப்ட்டா 360 சோப் குடுத்தேன். அதுதான் அப்ப எனக்கு கெடச்ச பெரிய ஆர்டர்.
இப்ப நான் ரெண்டு வருசமா செய்றேன். சோப்பு மட்டுமே குப்பை மேனி, துளசி, சார்கோல், ஆவாரம்ப பூ இப்டின்னு 14 வகையில பண்றேன். அது இல்லாமல், மூட்டுவலி தைலம் , சீயக்காய்தூள், மூலிகை தேங்காய் எண்ணெய், ஹெர்பல் டை, பொடுகு தைலம் எல்லாமே செய்யிறேன்.
அப்பவும் சரி, இப்பவும் சரி நான் யாரையும் கம்பல் பண்ணிலா வாங்க சொல்லல. விருப்பம் இருக்குறவங்க வாங்குவாங்க. மகளிர் திட்டம் மூலமா எங்கெல்லாம் முகாம் போடுறாங்களோ அங்கெல்லாம் நானும் என்னோட பொருள எடுத்துபோயி விற்பேன்.
மயிலாடுதுறை, திருவிடைமருதூர், கேரளா, திருசெங்ககோடு, கரூர், திருச்சி மற்றும் சென்னை உள்ள பல பேரும் இப்ப என்னோட சோப்புகள கொரியர் பண்ண சொல்றாங்க.
மாசம் இதுனால எனக்கு முப்பதாயிரத்துலேந்து நாற்பதாயிரமும் வருசத்துக்கு மூணு இலட்சத்துலேந்து நாளு லட்சம் வரையும் கெடைக்குது.

நான் சம்பாதிக்கிறதுக்கு முன்னடி வரையும் எப்ப வெளிநாட்டுலேந்து வீட்டுக்காரங்க பணம் அனுப்புவாங்கன்னு காத்துகிட்டு இருப்பேன். ஆனா, இப்போ எல்லாம் அப்படி காத்துகிட்டு இருக்குறதுலான் கெடையாது. என் கையிலே காசு இருக்கு எனக்கும் என் பசங்களுக்கும் தேவையாத என்னோட சம்பளத்துலே நானே செய்றது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.

உங்கள எல்லார மாதிரியும் தான் எனக்கும் நம்ம சோப்பு செஞ்சா யாரு வாங்குவா, இது நல்லா போகுமா அப்டின்லாம் ஒரு பயம் இருந்துச்சி ஆரம்பத்துல. எங்க வீட்ல கூட இதுலான் தேவையில்லாத வேலைன்னு தான் சொன்னாங்க. எனக்கும் எல்லாரோட ஏச்சி பேச்சின்னு சிரமும் நெறையாவே இருந்துச்சி.
ஆனா, அதைவிட என்னோட ஆர்வமும் என்னால் முடியும் அப்டின்ற தன்னம்பிக்கையும் ரொம்பவே அதிகமாக இருந்துச்சி. அந்த தன்னம்பிக்கதான் `வீட்ட விட்டு தனியாவே வெளிய போகத, என்னை இவளோ தூரம் வர வச்சி இருக்கு. தன்னம்பிக்கைய மட்டும் ஆயுதமா எடுத்து எந்த ஒரு செயலையும் ஆர்வமா பண்ணுனா கண்டிப்பா எல்லாராலையும் எல்லாமுமே முடியும்" என்றார் உஷா ராணி நம்பிக்கையாக.!




















