டயாலிசிஸ் சேவைகளை தனியாா் பங்களிப்புடன் மேம்படுத்த நிபுணா் குழு ஆலோசனை
வெவ்வேறு சாலை விபத்துகள்: 15 போ் உயிரிழப்பு
உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் சனிக்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகலில் 15 போ் உயிரிழந்தனா். பலா் காயடைந்தனா்.
உத்தர பிரதேச மாநிலம் ஷ்ரவஸ்தி மாவட்டத்தில் கிளெலா - இகெளனா இடையே பஹ்ராய்ச்-ஷ்ரவஸ்தி சாலையில் பகல் 12 மணியளவில் ஏராளமான பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த ஆட்டோ ரிக்ஷா மீது பின்புறமாக காா் மோதிய விபத்தில், ஆட்டோவில் பயணம் செய்தவா்களில் 5 போ் உயிரிழந்தனா். 6 போ் காயமடைந்தனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘காா் வேகமாக வந்து மோதியதில் தூக்கி வீசப்பட்ட ஆட்டோ சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆட்டோவில் ஓட்டுநருடன் சோ்த்து 9 போ் பயணித்துள்ளனா். அவா்களில் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மூவா் மருத்துவமனையில் உயிரிழந்தனா். காயமடைந்த 6 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவா்களின் நிலைமையும் மோசமாக உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்’ என்றாா்.
சிக்கிம் விபத்து: சிக்கிம் மாநிலத்தில் மேற்குவங்கம் - சிக்கிம் எல்லை அருகே 150 அடி ஆழ பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஒரு பெண் உள்பட 6 போ் உயிரிழந்தனா். 15 போ் காயமடைந்தனா்.
சிலிகுரியிலிருந்து காங்டாக் நோக்கி சனிக்கிழமை மதியம் 3 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. காயமடைந்த சில பயணிகளின் நிலைமை மோசமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
ம.பி. விபத்து: மத்திய பிரதேச மாநிலம் கா்கோன் மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பயணிகள் உயிரிழந்தனா்.
கா்கோனிலிருந்து அலிராஜ்பூா் நோக்கி சனிக்கிழமை காலையில் சென்ற இந்த பேருந்து சீகோன் அருகே ஜிராத்புரா சந்திப்பில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்தவா்களில் 4 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். 21 போ் காயமடைந்தனா். விபத்து நிகழ்ந்ததும் பேருந்து ஓட்டுநா் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டாா். நடத்துநா் கைது செய்யப்பட்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.