சூர்யா வாழ்க்கையில் நடந்த சம்பவம்... 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் ரீ-கிரியேட் செ...
வேண்டுதலுக்காகக் கட்டிய மணிகளை விழுங்கும் அதிசய மரம்... கலியுக அற்புதம் சொரிமுத்து ஐயனார் கோயில்!
பிரார்த்தனை நிறைவேறினால் கோயிலில் மணி கட்டுவதாக வேண்டிக்கொள்ளும் வழக்கம் பல தலங்களில் உள்ளது. அப்படிக் கட்டப்பட்ட மணிகளை ஒரு மரம் ஏற்றுக்கொள்ளும் விதமாக விழுங்கிவிடுகிறது என்றால் ஆச்சர்யமாக உள்ளதல்லவா... ஆம் அப்படி இரு தலம் நெல்லை மாவட்டத்தில் இருக்கிறது. நெல்லை மாவட்டம் பாபநாசத்திலிருந்து காரையார் அணைக்குச் செல்லும் பாதையில் அமைந்திருக்கிறது இந்த ஆலயம். வாருங்கள் அந்தத் தலத்தின் மகிமைகளையும் அற்புதங்களையும் தியானிப்போம்.
பொதிகை மலைச் சாரலில் அமைந்திருக்கிறது சொரிமுத்து ஐயனார் கோயில். சாஸ்தாவின் ஆறு முக்கியத்தலங்களில் முதல் தலமாகத் திகழ்வதும் இந்த ஆலயம்தான். இங்குதான் இந்தக் கலியுகத்திலும் பல்வேறு அற்புதங்கள் நடைபெறுகின்றன. அப்படி ஒரு அற்புதம்தான் இலுப்பை மரம்.

சொரிமுத்து ஐயனாரிடம் மனமுருக வேண்டினால் தீராத வினையில்லை... கிடைக்காத வரம் இல்லை என்பார்கள். தங்கள் பிரார்த்தனை நிறைவேற வேண்டும் என்று வேண்டிக்கொண்டு ஒரு மணியை இங்குள்ள ஓர் இலுப்பை மரத்தில் கட்டுகிறார்கள்.
அவர்களின் பிரார்த்தனை நிறைவேறிவிட்டால், மரம் மணிகளை விழுங்குவது போன்று, மணிகள் மரத்தில் பதிந்து விடுகின்றன. எனவேதான் இதை, 'மணி விழுங்கி மரம்' என்றே அழைக்கிறார்கள்.
அகத்தியர் பொதிகை மலையில் தவம் செய்தபோது ஓர் ஆடி அமாவாசை திதிநாளில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. மிகப் பிரகாசமான ஜோதி ஒன்று அவருக்குப் புலப்பட்டது. முனிவர் ஞானதிருஷ்டியால் அது யார் எனப் பார்த்தபோது சகல பரிவார கணங்கள் புடைசூழ, பூர்ணா-புஷ்கலா சகிதம், ஆதிபூதநாத ஸ்வரூபத்துடன் அவருக்குக் காட்சியளித்தார் மகா சாஸ்தா.
ஐயனின் அற்புதக் கோலம் கண்டு அகத்தியர் சிலிர்த்துப்போனார். மெய்யெல்லாம் திருநீறு பூசிய அந்த முனிவர் விழிகளில் அருள்நீர் பெருகிட மெய்ம்மறந்து ஐயனை வணங்கித் தொழுதார். அவருக்கு வரங்களை வழங்கினார் ஐயன்.
மேலும், 'எமக்குத் தங்களின் தரிசனம் கிடைத்த ஆடி அமாவாசை ஆகிய இந்தப் புனித நாளில், இங்கு வந்து நீராடித் தங்களை வழிபடுபவர்களுக்குச் சகல ஐஸ்வர்யங்களையும் அருள வேண்டும்' என்றும் வேண்டினார். அப்படியே வரம் தந்தார் ஐயன். எனவேதான் ஆடி அமாவாசை நாள்களில் இங்கே பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடுகிறார்கள்.

தேவர்கள் இந்த ஐயனை பொன் மலர் சொரிந்து வாழ்த்தினார்கள். எனவே இந்த ஐயனுக்கு 'பொன் சொரியும் முத்தையன்' எனும் திருப்பெயர் ஏற்பட்டது. அதுவே பிற்காலத்தில் சொரிமுத்து ஐயன் என்று ஆனது என்கிறார்கள்.
ஆலயத்தின் பிரதானமான வளைவைக் கடந்து உள்ளே வந்தால் மூன்று முக்கிய சந்நிதிகளே உள்ளன. சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார் மஹாலிங்க ஸ்வாமி. இவர் சந்நிதிக்கும் சங்கிலிபூதத்தார் சந்நிதிக்கும் நடுவே ஐயனின் சந்நிதி. பூர்ணா புஷ்கலா சமேதராக மஹாசாஸ்தா முக்தார்யன் என்ற திருப்பெயரில் பகவான் தரிசனம் தருகிறார். மக்கள், முத்தைய்யன் என்றும் பொன் சொரிமுத்து ஐயன் என்றும் அழைத்து வழிபட்டு மகிழ்கிறார்கள்.
காலக்ரமத்தில், பல பரிவார பூதங்களும் கணங்களும் ஐயனுடன் இங்கு குடி கொண்டார்கள். ஆலயத்தில் வலப்புறம் முழுமையும் தளவாய் மாடன், கரடி மாடன், பிரம்மராட்சி அம்மன், பேச்சி அம்மன், சுடலை மாட சுவாமி என பல்வேறு பரிவார தெய்வங்கள் சந்நிதி கொண்டு, எளிய மக்களின் பூஜைகளையும் படையல்களையும் ஏற்று அருள்பாலிக்கிறார்கள்.
பொன் சொரிமுத்து ஐயன் ஏழைப்பங்காளன். பக்தர் குறை தீர்க்கும் பரமன். வாடி நிற்கும் அடியாருக்கெல்லாம் வரம் வாரி வழங்கும் வள்ளல். தன்னை நாடி வரும் ஒவ்வொரு பக்தனையும் தன் பிள்ளை போல் பார்த்து அனுக்ரஹிக்கும் கருணைக்கடல்.

சாஸ்தாவின் பக்தராக வாழ்ந்து மறைந்த முத்துப்பட்டன் என்ற பட்டவராயனும் இங்கே அருள்பாலிக்கிறார். இவரே இந்த ஐயன் கோயிலுக்குக் காவல்காரர். `இன்றும் இரவு நேரங்களில், இவர் செருப்பு அணிந்துகொண்டு கையில் வல்லயம் ஏந்தியபடி வனத்துக்குள் வலம் வந்து காவல் காக்கிறார்' என்று நம்பிக்கையோடு சொல்கிறார்கள் பக்தர்கள். இவருக்குப் பிரார்த்தித்துக் கொண்டு இவரின் சந்நிதியில் செருப்புகளைக் கட்டும் பிரார்த்தனையும் இருக்கிறது. அப்படிக் கட்டும் செருப்புகள் நாளடைவில் தேய்வந்துபோகின்றன. உபயோகிக்காத செருப்புகள் தேய்வது உண்மையில் அதிசயம் அல்லவா... முத்துப்பட்டன் சூட்சமமாக அந்த செருப்புகளை அணிந்துகொண்டு காட்டுப்பகுதியில் காவல் செய்வதாலேயே அவை தேய்ந்துவிடுகின்றன என்கிறார்கள் பக்தர்கள்.
இப்படிப்பட்ட அற்புதமான அற்புதமான தலத்துக்குச் செல்ல காலை 8 மணி முதல் 4 மணி வரை வரையிலேயே அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் இது புலிகள் சரணாலயம் உள்ள பகுதி என்பதால் வனத்துறையினரின் கட்டுப்பாடுகளை பக்தர்கள் மதிக்கவேண்டும். வாய்ப்பிருப்பவர்கள் பொதிகை எழிலையும் சொரிமுத்து ஐயனின் அருளையும் ஒருங்கே அனுபவித்து தரிசித்து வாருங்கள். வாழ்க்கை வளமாகும் நலமாகும்.





















