வேலூர்: இலவச முகாம்... இன்ஸ்டா விளம்பரம்... பெண்ணின் உயிரைப் பறித்ததா `அபூர்வ மூ...
E20 பெட்ரோல் Chloride சர்ச்சை: முதலில் எச்சரித்து, பின்வாங்கிய SIAM - அந்த கடிதத்தில் என்ன இருந்தது?
இந்தியா முழுவதும் அமலுக்கு கொண்டு வந்துவிட வேண்டும்... நிறைவேற்றிவிட வேண்டும் என்று மத்திய அரசு முனைப்புடன் இருக்கும் திட்டங்களில் ஒன்று - E20 பெட்ரோல்.
ஆனால், இது வாகனத்தின் செயல்திறனைக் குறைக்கும்... இந்தப் பெட்ரோலுக்கான வாகனங்களை இன்னும் இந்தியா தயாரிக்கவில்லை என்று ஏகப்பட்ட புகார்களை கவலைகள் எழுந்து வருகிறது.

இந்த விமர்சனங்களுக்கு மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியின் பதில், "இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL), இந்திய பெட்ரோலிய நிறுவனம் (IIP), இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) மற்றும் இந்திய ஆட்டோமோட்டீவ் ஆராய்ச்சி சங்கம் (ARAI) ஆகிய அமைப்புகள் இணைந்து இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் E20 பெட்ரோலின் தாக்கங்களை மதிப்பிடுவதற்கான ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வின் படி, கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் எஞ்சின்களில் எந்த மாற்றமும் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பது தெரியவந்துள்ளது".
இது நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் கொடுத்த எழுத்துப்பூர்வப் பதில் ஆகும்.
E20 பெட்ரோலின் தரத்தை உறுதி செய்யவும், தொடர்ந்து கண்காணிக்கவும் புது டெல்லியில் இருக்கும் இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) சில வலியுறுத்தல்களைக் கூறி மத்திய அரசிற்கு முன்னதாக கடிதம் ஒன்றை எழுதியிருந்தது.
அந்தக் கடிதத்தில், "சில்லறை விற்பனை பங்குகளில் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் E20 பெட்ரோல், நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும்.
இதை கட்டுப்பாடுகள் மூலம் செய்ய முடியும் என்று நம்புகிறது: ஒன்று, எரிபொருள் தரக் கட்டுப்பாட்டு விதிகளில் இதற்கு வரம்பு நிர்ணயிப்பது; இரண்டாவது, எரிபொருளின் தரத்தைத் தொடர்ந்து தீவிரமாகப் பரிசோதிப்பது.
SIAM அமைப்பின் உறுப்பினர்கள், வாடிக்கையாளர்களின் வாகனப் பாகங்கள் பழுதாவது மற்றும் அவற்றை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படுவது சமீபகாலமாகப் பெருமளவில் அதிகரித்துள்ளதைக் கவனித்துள்ளனர்.

(உதாரணத்திற்கு ஃபியூயல் இன்ஜெக்டர்கள், ஃபியூயல் பம்ப், EGR வால்வு, எக்சாஸ்ட் மற்றும் எரிபொருளோ அல்லது புகையோ நேரடியாகப் படும் பாகங்கள்).
பழுதான வாகனப் பாகங்களை ஆய்வு செய்தபோது, எரிபொருளில் அதிகளவில் குளோரைடு கலந்திருப்பதே இந்தத் துருப்பிடித்தலுக்கும் பாகங்கள் தேய்மானத்திற்கும் காரணம் என்பது தெரியவந்துள்ளது. பழுதான பாகங்களில் படிந்துள்ள கழிவுகளிலும் குளோரைடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
E20 எரிபொருள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகுதான் இந்த குளோரைடு பிரச்சினை அதிக அளவில் காணப்படுகிறது என்பதையும், இதற்கு முன்பு இது மிகவும் குறைவாகவே இருந்தது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
குளோரைடு என்ஜின் பாகங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எரிபொருள் அமைப்பிலோ அல்லது எக்சாஸ்ட் அமைப்பிலோ குளோரைடு சேரும்போது, அது பாகங்களைத் துருப்பிடிக்க வைத்து, உடனடியாகவோ அல்லது காலப்போக்கிலோ என்ஜின் பாகங்களை முற்றிலும் பாழ்படுத்திவிடும்.
எனவே, எரிபொருள் தரக்கட்டுப்பாட்டு விதிகளில் குளோரைடு அளவைச் சேர்ப்பதும், வாடிக்கையாளர்களின் வாகனங்கள் பழுதைத் தடுக்கத் தரக்கட்டுப்பாட்டை அமல்படுத்துவதும் மிகவும் அவசியமாகும். எரிபொருளில் கலப்படம் இருப்பது E20 எரிபொருளைப் பற்றிய தவறான பிம்பத்தை வாடிக்கையாளர் மனதில் உருவாக்கிவிடும். இதை உடனடியாகத் தடுத்தாக வேண்டும்.
அதிக குளோரைடு தவிர, சில்லறை விற்பனை பங்குகளில் விநியோகிக்கப்படும் E20 எரிபொருளில் அதிகப்படியான ஈரப்பதம் (Moisture) இருப்பதையும் SIAM உறுப்பினர்கள் கவனித்துள்ளனர். அதிக ஈரப்பதம் (1.0%-க்கும் மேல்) இருக்கும்போது எரிபொருளில் உள்ள எத்தனாலையும் பெட்ரோலையும் தனித்தனியாகப் பிரித்துவிடும் (Phase separation).


இதனால் பெட்ரோல் போட்ட உடனே வாகனம் வழியிலேயே நின்றுவிடும். E20 எரிபொருளில் அனுமதிக்கப்பட்ட ஈரப்பதத்தின் அளவு கிலோவுக்கு 3000 மில்லிகிராம் தான் என்றாலும், பல இடங்களில் இது 10,000 மில்லிகிராமுக்கு மேல் (1%-க்கும் மேல்) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எரிபொருள் பங்குகளில் உள்ள தரைக்கீழ் சேமிப்புத் தொட்டிகள் மற்றும் பைப்லைன்கள் சரியாகப் பராமரிக்கப்படாததே இதற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம்.
இது தொடர்பாகக் கூடுதல் தகவல்களை வழங்க SIAM மற்றும் அதன் உறுப்பினர்கள் தயாராக உள்ளனர்" என்று குறிப்பிட்டிருந்தது.
இந்தக் கடிதத்திற்குப் பிறகு, இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு மத்திய அரசிடம் இருந்து அழுத்தம் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக SIAM எழுதிய கடிதம் திரும்ப பெறப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, முன்னர் எழுதிய கடிதத்திற்கு விளக்கமளிக்கும் விதமாக, SIAM இன்னொரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் குறிப்பிட்டிருப்பதாவது...
"தற்போதுள்ள விதிகளின்படி, எரிபொருள் தரப் பரிசோதனை என்பது 150-க்கும் மேற்பட்ட அளவுகோல்களைக் கொண்டு எண்ணெய் நிறுவனங்களால் (OMCs) மிகவும் துல்லியமாகவும் முழுமையாகவும் நடத்தப்படும் ஒரு செயலமுறையாகும்.
குறிப்பிட்ட அந்தச் செய்தி, வாகனத் துறை, எண்ணெய் நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் பரிசோதனை முகமைகள் ஆகியவற்றுக்கு இடையே வழக்கமாக நடைபெறும் தொழில்நுட்ப ஆலோசனைகளின் ஒரு பகுதியாக அனுப்பப்பட்ட கடிதமே ஆகும்.
அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில புள்ளிவிவரங்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விரிவான தகவல்களைச் சேகரித்து, எங்களது உறுப்பினர் நிறுவனங்களுடன் கலந்தாலோசித்த பிறகே முழுமையாக உறுதி செய்யப்பட வேண்டும்.

மேலும், மத்திய பெட்ரோலிய அமைச்சகம் (MoPNG) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனாலில் குளோரைடு/சல்பர் அளவு 3ppm-க்கு மிகாமல் இருக்க வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் வாகனத் துறையின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்கின்றன.
அதுமட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள 87,000-க்கும் மேற்பட்ட பங்குகளில் நாளொன்றுக்கு 8 முதல் 12 முறையும், மழை பெய்து முடிந்த பிறகும் தண்ணீர் கசிவு உள்ளதா எனப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டின் எரிசக்தி பாதுகாப்பிற்கு மிக முக்கியமான அரசின் இந்த E20 எத்தனால் திட்டத்திற்கு வாகனத் துறை எப்போதும் முழு ஆதரவை வழங்கி வருகிறது என்பதை வாடிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் SIAM உறுதியளிக்க விரும்புகிறது.
ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் இதுபோன்ற தொழில்நுட்பப் பிரச்சினைகள் கடந்த பல தசாப்தங்களாக வாகனத் துறைக்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கும் இடையே வழக்கமாகப் பேசித் தீர்க்கப்படுபவைதான்". என கூறப்பட்டுள்ளது.

















