பிரியங்கா காந்தியின் மகனுக்கு நிச்சயதார்த்தமா? - மணமகள் யார் தெரியுமா?
வேலூர்: 15 வயது சிறுமி வன்கொடுமை; கடமைத் தவறிய போலீஸாருக்கு ரூ.9 லட்சம் அபராதம் - அதிர்ச்சி பின்னணி!
வேலூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம், மோகனப்பிரியா என்பவரின் வீட்டில் அடைத்துவைக்கப்பட்டு சந்தோஷ்குமார் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. `இதுபற்றி வெளியில் சொல்லக்கூடாது’ என வற்புறுத்தியதோடு, தொடர்ந்து தங்கள் வீட்டிலேயே தங்கச்சொல்லி மோகனப்பிரியாவும், மோகநாதன் என்பவரும் சிறுமியை மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், `வி.ஐ.பி-க்கள் மற்றும் அரசு அதிகாரிகளைத் திருப்திப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் கொன்றுவிடுவோம்’ எனவும் அச்சுறுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடவும் சிறுமியை துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து, பாதிக்கப்பட்ட சிறுமி, வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 23-6-2022 அன்று புகாரளித்தார். புகாரின்பேரில், போக்சோ சட்டத்தின் பிரிவு 3(a), 4(2), 17 மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 506(i) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான நபர்களுக்கு ஆதரவாக போலீஸார் நடந்துக்கொண்டார்களாம்.

சிறுமி பாதிக்கப்பட்ட போக்சோ வழக்கை, அப்போதைய பொறுப்பு இன்ஸ்பெக்டர் ஷியாமளா, சப்-இன்ஸ்பெக்டர் சத்யவாணி, எழுத்தர் தமயந்தி ஆகியோர் கையாண்டிருக்கின்றனர். சப்-இன்ஸ்பெக்டர் சத்யவாணி, `மருத்துவப் பரிசோதனைக்கு ஒத்துழைக்க வேண்டாம்’ என்று சிறுமியிடம் கூறினாராம். அதுமட்டுமல்லாமல், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகத் தகவல் கிடைத்தும், குழந்தை நல அதிகாரிக்குத் தெரிவிக்கப்படவில்லை. போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்ட நாளிலிருந்து 3 நாட்களுக்குப் பிறகுதான் அந்தச் சிறுமி மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, சிறுமியின் குடும்ப உறுப்பினரோ அல்லது குழந்தை நல அதிகாரியோ போலீஸாருடன் செல்லவில்லை, மாறாக, அந்தப் பணிக்காக ஒரு காவலர் மட்டுமே நியமிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, 25-8-2023 அன்று மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வாசுகி என்பவரால் அவசர, அவசரமாக சிறுமி பாதிக்கப்பட்ட போக்சோ வழக்கு முடித்துவைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான் பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த மனித உரிமைகள் ஆணையம் டிசம்பர் 26-ம் தேதி தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதில், ``வழக்கை கையாண்ட இன்ஸ்பெக்டர்கள் உட்பட முதல்நிலைக் காவலர்கள் வரையிலான 6 போலீஸாரும், தங்களின் கடமைகளை செய்யத் தவறியது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட சிறுமியிடமே மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் செயல்பட்டிருக்கின்றனர். அவர்கள் சிறுமிக்கு இழப்பீடு வழங்கக் கடமைப்பட்டவர்கள். பாதிக்கப்பட்ட சிறுமி எதிர்கொள்ளும் விவரிக்க முடியாத துன்பத்திற்கும், மன வேதனைக்கும் பண இழப்பீடு மட்டுமே முழுமையான தீர்வாக இருக்காது என்பது, இப்போது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருத்தாகும். ஆனால், சில நேரங்களில், அது ஒரு சரிசெய்யும் நடவடிக்கையாகவும், ஒரு குடிமகனின் அடிப்படை மற்றும் மனித உரிமைகள் அரசு ஊழியர்களால் மீறப்பட்டதற்கு பரிகாரம் தேடும் ஒரு தீர்வாகவும் இருக்கலாம்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.9 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும். பணியில் இருந்த இன்ஸ்பெக்டர்கள் ஷாகின், ஷியாமளா, வாசுகி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சத்யவாணி ஆகியோரிடம் இருந்து தலா ரூ.2 லட்சமும், முதல்நிலை பெண் காவலர்களான தமயந்தி, ஜெயசுதா ஆகியோரிடம் இருந்து தலா ஐம்பதாயிரம் ரூபாயும் இழப்பீடாக வசூலித்து வழங்க வேண்டும். ஒரு மாதத்துக்குள் இழப்பீட்டை வசூலிக்க வேண்டும். மேலும், இவர்கள் 6 பேர் மீதும் `ஒழுங்கு நடவடிக்கை’ எடுக்கவும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது. சிறுமி பாதிக்கப்பட்ட `குற்ற எண் 20/2022’ வழக்கை, டி.எஸ்.பி பதவிக்குக் குறையாத ஒரு அதிகாரியைக் கொண்டு மறுவிசாரணை செய்து, 3 மாதங்களுக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யவும் ஆணையம் பரிந்துரைக்கிறது’’ என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.


















