ஸ்ரீவில்லிபுத்தூர் மதிமுக செயல் வீரர்கள் கூட்டம்; செய்தியாளரின் செல்போனைப் பறித்...
ஸ்ரீவில்லிபுத்தூர் மதிமுக செயல் வீரர்கள் கூட்டம்; செய்தியாளரின் செல்போனைப் பறித்து தாக்க முயற்சி
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற ம.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் செய்தியாளரை ம.தி.மு.க-வினர் தாக்க முயன்றதால் பரபரப்பு.
ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு ரத வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட ம.தி.மு.க கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் வேல்முருகன் அழைப்பின் பேரில் நிருபர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செய்தி சேகரித்தனர். கூட்டத்தில் சாத்தூர் ம.தி.மு.க எம்.எல்.ஏ ரகுராமன் பேசுகையில் மாவட்டச் செயலாளருக்கு எதிராக சில கருத்துக்களைப் பேசினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாவட்டச் செயலாளர் தரப்பினர் ரகுராமனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ரகுராமன் ஆதரவாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர் வேல்முருகன் ஆதரவாளர்கள் ஒருவருக்கு ஒருவர் மோசமான வார்த்தைகளால் தாக்கிக் கொண்டனர்.
கூட்டத்தில் நடைபெற்ற இந்நிகழ்வை வீடியோ எடுத்து கொண்டிருந்த தனியார் தொலைக்காட்சி நிருபரை நோக்கி வந்த ம.தி.மு.க-வினர் அவரது செல்போனைப் பறித்து அவரைத் தாக்க முயன்றனர்.

இதனால் மண்டபத்தில் இருந்து தாக்கப்பட்ட நிருபருடன் இருந்த மற்ற நிருபர்கள் வெளியே அழைத்து வந்தனர். அதன் பின்பும் வெளியே வந்த ம.தி.மு.க-வினர் நிருபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நகரின் மையப்பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்வால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் சில மாதங்களுக்கு முன்பு வைகோ தலைமையில் சாத்தூரில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் செய்தியாளர்கள் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ம.தி.மு.க நிகழ்வுகளில் செய்தியாளர்கள் தாக்கப்படுவது ஒரு தொடர்கதையாக உள்ளது.















