Doctor Vikatan: அறுவை சிகிச்சைக்குப் பிறகான வலி... பக்கவாதத்தை ஏற்படுத்துமா?
ஹோட்டலிலிருந்து வீடு திரும்பிய சிவசேனா கவுன்சிலர்கள்; மேயர் பதவிக்கு டெல்லியில் பேச்சுவார்த்தை!
மும்பை மாநகராட்சித் தேர்தலில் மேயர் பதவியைப் பிடிக்கும் அளவுக்கு எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.க 89 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா(ஷிண்டே) 29 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது.
இப்போது மேயர் பதவியைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. தங்களுக்கு 2.5 ஆண்டுகள் மேயர் பதவியைக் கொடுக்கவேண்டும் என்று சிவசேனா கூறி வருகிறது. ஆனால் மேயர் பதவியைப் பகிர்ந்து கொள்ள பா.ஜ.க தயாராக இல்லை.
இதையடுத்து சிவசேனா கவுன்சிலர்களை பா.ஜ.க அடியோடு தன் வசம் எடுத்துக்கொள்ளும் அபாயம் இருந்தது. எனவே தனது கட்சி கவுன்சிலர்களை துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கடந்த சில நாட்களாகத் தங்க வைத்திருந்தார்.
தற்போது பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வெளிநாடு சென்று இருக்கிறார். அவர் வந்த பிறகுதான் மேயர் பதவி தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரம் அடையும்.

பட்னாவிஸ் வரும் 24ம் தேதிதான் மும்பை திரும்புகிறார். எனவே ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு இருந்த கவுன்சிலர்கள் அனைவரும் அவர்களது வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத் அளித்த பேட்டியில், ''பா.ஜ.க மற்றும் சிவசேனா கவுன்சிலர்களின் மொபைல் போன்களை ஒட்டுக்கேட்டு அவர்களை பா.ஜ.க தங்களது கண்காணிப்பில் வைத்திருக்கிறது. முதல் முறையாக மேயர் பதவி டெல்லியில் முடிவு செய்யப்படுகிறது'' என்று தெரிவித்தார்.
அதேசமயம் சிவசேனா மற்றும் பா.ஜ.க தலைவர்கள் மும்பை மேயர் பதவி தொடர்பாக டெல்லியில் சந்தித்து பேசியுள்ளனர்.
சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேயின் 100வது பிறந்தநாளையொட்டி இந்த ஆண்டு தங்களுக்கு மேயர் பதவியைக் கொடுக்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே கூறி வருகிறார்.
டெல்லியில் மும்பை பா.ஜ.க தலைவர் அமீத் சாத்தம் சிவசேனா முன்னாள் எம்.பி. ராகுல் ஷெவாலேயைச் சந்தித்து பேசினார். மேயர் பதவி கிடைக்கவில்லையெனில் நிலைக்குழுத் தலைவர் பதவியையாவது கொடுங்கள் என்று சிவசேனா கோரி வருகிறது. மேயர் பதவியை விட நிலைக்குழுத் தலைவர் பதவி அதிக அதிகாரம் கொண்டது ஆகும்.














