செய்திகள் :

காங்கிரஸ்: கண்ணாம்மூச்சி ஆடும் டெல்லி; தமிழ்நாட்டில் பிளான் B - ஸ்கெட்ச் யாருக்கு?!

post image

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை அனைத்துக் கட்சிகளும் முடுக்கிவிட்டிருக்கும் நிலையில், அங்கொன்றும் இங்கொன்றுமாக சலசலப்புகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

தமிழ்நாட்டின் என்.டி.ஏ கூட்டணிக்கு பா.ஜ.க. சார்பில் பொறுப்பு வழங்கப்பட்ட பியூஸ் கோயல் தமிழ்நாடு வந்திருக்கிறார். அதேபோல் காங்கிரஸின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தமிழ்நாடு வந்திருக்கிறார். இன்னும் சில தினங்களில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி, பிரியாங்கா காந்தி ஆகியோர் தமிழ்நாடு வருவதற்குத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

அதே நேரம், பா.ஜ.க. கூட்டணிக்குள் தே.மு.தி.க. இருக்கிறதா இல்லையா என்றக் குழப்பம் இருப்பதுபோல, தி.மு.க. கூட்டணிக்குள் காங்கிரஸ் இருக்கிறதா இல்லையா என்ற கேள்வியையும் தவிர்க்க முடியவில்லை. அதற்குக் காரணம், மாணிக்கம் தாக்கூரில் தொடங்கி, திருச்சி வேலுசாமி வரை பலரும் தி.மு.க-வை விமர்சித்ததும், ஆட்சி - அதிகாரத்தில் பங்கு கேட்டதும், தவெக ஆதரவு நிலைப்பாடு எனப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

பொங்கல் விழாவுக்குக் கூட முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததன் மூலம் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியை வலுப்படுத்தினார் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை.

ஆனால், பொங்கலுக்குப் பிறகு டெல்லி காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் நடந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கெடுத்த செல்வப் பெருந்தகை, ``கூட்டணி குறித்து யாரும் வெளியே பேசக்கூடாது என்பது தலைமையின் உத்தரவு” எனச் பாந்தமான குரலில் கூறிவிட்டு கடந்து சென்றுவிட்டார்.

நேற்று(20-01-2026) சத்யமூர்த்தி பவனில் காங்கிரஸின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் செயற்குழுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கிரிஷ் சோடங்கர், ``திமுக இன்னும் எங்களைக் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. நாங்கள் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை எங்கள் தலைமை முடிவு செய்யும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

செல்வப்பெருந்தகை - ஸ்டாலின்
செல்வப்பெருந்தகை - ஸ்டாலின்

இதன் அடிப்படையில் பார்த்தால் காங்கிரஸ் கட்சிக்குள்ளும், வெளியேயும், கூட்டணிக்குள்ளும் உரசல்போக்கு நீடிப்பதைப் பார்க்கிறோம்.

உண்மையில் காங்கிரஸுக்குள் என்னதான் நடக்கிறது..? காங்கிரஸின் 'பிளான் பி' என்ன? என்பதை அறிந்துகொள்ள ஊடகவியலாளர் குபேந்திரனைத் தொடர்புகொண்டோம்.

நிதானமாக பேசத் தொடங்கியவர், பல்வேறு அம்சங்களாகஇந்த விவகாரத்தை அணுகினார்.

``டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருக்கும் பிரச்னைகளையும், கட்சிக்குள் இருக்கும் குழப்பத்தையும் டெல்லி தலைமைக்குச் சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக பதவியில் இருக்கும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தி.மு.க ஆதரவு என்றும், இளம் தலைவர்கள் தவெக ஆதரவு என்றும் பேசிக்கொண்ட தகவலும் சொல்லப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் மனநிலை தி.மு.க ஆதரவு நிலைப்பாடுதான் என்பதை அவரது செயல்பாடுகள் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம். ஆனால், பதவியில் இல்லாத தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் 'வெறும் 25 எம்.எல்.ஏ, 10 எம்.பி. சீட்டுக்காக தி.மு.க-விடம் கட்சியை அடகு வைப்பதா? நாம் இன்னும் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும்' என விரும்புகிறார்கள்.

ஊடகவியலாளர் குபேந்திரன்
ஊடகவியலாளர் குபேந்திரன்

மேலும், `த.வெ.க-வுடன் கூட்டணி வைத்தால் 70 - 80 சீட் வரை கிடைக்கும். குறைந்தது விஜய் பிரபல்யத்தை வைத்து 45 - 50 இடங்களில் வெல்ல முடியும்' என நம்புகிறார்கள். காங்கிரஸின் இளம் நிர்வாகிகளின் விருப்பம் தவறு என நம்மால் கூற முடியாது. ஆனால் அவர்களின் விருப்பம், அரசியலில் பலிக்குமா? என்பதுதான் இப்போது நம்மிடம் இருக்கும் விடை தெரியாத கேள்வி.

தி.மு.க. கூட்டணிக்குள் காட்டும் வேறுபாடு, காங்கிரஸுக்கு பெரும் பொருமலாக இருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும், அதன் எம்.எல்.ஏ, எம்.பி-களுக்கும் தி.மு.க. அரசு கூடுதல் சலுகைகளை வழங்குகிறது. முக்கியமாக தகவல் ஆணையம், சட்ட ஆணையம் போன்ற வாரியப் பதவிகளை திருமாவளவன் பரிந்துரைக்கும் நபர்களுக்கு வழங்குகிறது.

ஆனால், காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ஒரு நகராட்சி துணைத் தலைவர் பதவிகூட இல்லை. கோயம்பேடு, மாதாவரம் போன்ற பகுதிகளில் ஒரு பெட்டிக்கடை உரிமம் வாங்குவதற்குக் கூட தி.மு.க தரப்பில் உரிய ஒத்துழைப்பு கிடைப்பதில்லை என்ற குமுறல் இருக்கிறது.

சத்தியமூர்த்தி பவன்
சத்தியமூர்த்தி பவன்

தொண்டர்கள் குறைவாக இருக்கும் கட்சி என்பதால், சில இடங்களில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. - எம்.பி.கள் தி.மு.க தலைவர்களால் தர்மசங்கடத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதுபோன்ற நிகழ்வுகளின் ஒட்டுமொத்த வெளிப்பாடே, கீழ்மட்ட நிர்வாகிகளின் தி.மு.க. எதிர்ப்பு மனநிலையாக இருக்கலாம்.

இது ஒரு பார்வை... இன்னொரு பக்கம் தி.மு.க-விடமிருந்து அதிக இடங்களைப் பெற, தவெக எனும் 'பிளான் பி' திட்டம் ஒரு அஸ்திரமாக இருக்கும் என காங்கிரஸ் நினைத்திருக்கலாம். அதனால்தான் மூத்த தலைவர்கள், இளம் தலைவர்களைப் பேசவிட்டு வேடிக்கைப் பார்த்திருக்கிறார்கள் எனக் கருதுகிறேன். இன்னும் தெளிவாகச் சொல்வதானால், இவர்களே கூட இப்படியான கருத்தைப் பேசத் தூண்டிவிட்டிருக்கலாம்.

டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்ட முடிவில், `தி.மு.க-வுடன் கூட்டணியில் இருக்கலாம், தொகுதிப் பங்கீட்டின் போது கூடுதல் இடங்களைக் கேட்கலாம். ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு கேட்கலாம். கொடுத்தால் பெற்றுக்கொள்வோம்' என்ற மனநிலைக்கு வந்திருப்பதாகத் தகவல்.

ஸ்டாலினிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளும் ராகுலின் இந்த முடிவுக்கு காரணம் இருக்கிறது. தமிழக காங்கிரஸ் அரசியல் களத்தில் பலமாக இல்லை என்ற யதார்த்தம் ராகுலுக்குத் தெரியும்.

அதே நேரம், தி.மு.க 25 தொகுதிகளையும் கொடுத்து, அதில் 17 இடங்களில் வெற்றிபெறவும் வைக்கிறது. அதாவது, தொகுதியும் கொடுத்து, அந்தத் தொகுதியில் வெற்றிபெற வேட்பாளருக்கு எல்லா உதவிகளையும் செய்கிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

வட மாவட்டத்தில் ஒரு பெண் எம்.பி. வெறும் சில ஆயிரங்களை எடுத்துக்கொண்டு தேர்தல் களத்துக்குச் சென்றார். ஆனால், தி.மு.க வைட்டமின் `ப' -வை கோடிகளில் செலவு செய்து வெற்றிபெற வைத்தது.

தமிழ்நாட்டில் 9 எம்.பி. சீட் கொடுத்து, அந்த வேட்பாளர்களை வெற்றிபெறவும் வைக்கிறார்கள். மத்திய மண்டலத்தில் இருக்கும் ஒரு பெண் எம்.பி.-யையும் அதே போல் வெற்றி பெற வைக்கிறார்கள்.

இவ்வளவு ஆதரவுடன் செயல்படும் கூட்டணியை, தி.மு.க-வால் அதிகாரத்துக்கு வந்தவர்களால் எப்படி நிராகரிக்க முடியும்?

உண்மையில் காங்கிரஸ் வலிமையாக இருக்கிறது என்றால், 5 தொகுதியில் மட்டும் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெறட்டும். அதிகபட்சம் கன்னியாகுமரி, நாகர்கோவில் தொகுதிகளில் வெற்றிபெறலாம். மதுரை, திருச்சி, சிவகங்கையில் கூட அவர்களால் வெல்வது கடினம்தான்.

எனவே, தி.மு.க கூட்டணி காங்கிரஸுக்கு அவசியம்.

தமிழக காங்கிரஸ் தலைவர்களின் 'டெல்லியில் இருக்கும் தலைவர்களுடன் தொடர்பு இருந்தால் போதும், ஏதாவது பதவியில் ஏறிவிடலாம்' என்ற எண்ணத்தால் அவர்கள் கட்சி வளர்ச்சியை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இதுதான் காங்கிரஸ் செய்துகொண்டிருக்கும் முக்கியத் தவறு.

ஆரம்பக்கட்டத்தில், நகராட்சித் துணைத் தலைவர், துணை மேயர், பஞ்சாயத்து துணைத் தலைவர் போன்ற பதவிகளைக் கைப்பற்றியிருந்தால், கட்சி வளர பெரிதும் உதவியிருக்கும். அதற்கு காங்கிரஸ் தலைமை களத்துக்கு வரவேண்டும்.

ஆனால், காங்கிரஸ் வேட்பாளர்கள் கூட, டெல்லியில் யாருக்கு செல்வாக்கு அதிகமோ அவர்களைத்தான் தேர்வு செய்வார்கள். போட்டியிடும் தொகுதியில், மக்களிடம் யார் நெருக்கமாக இருக்கிறார்கள் என கவனிப்பதில்லை. பிறகு எப்படி கட்சி வளரும்?

தவெக விஜய்
தவெக விஜய்

விஜய்யின் அடையாள பிம்பத்தை வைத்து தவெக கூட்டணியில் வெற்றிபெற விரும்பும் காங்கிரஸ், முதலில் விஜய்க்கு உறுதியான வாக்கு சதவிகிதம் என்ன என்பது குறித்து அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் விஜய் ரசிகர்களுக்காக, ராகுல் காந்தி ஜனநாயகன் படத்துக்காக குரல் கொடுக்கலாம். ஆனால், அது வாக்குகளாக மாறுமா என்பதுதான் இங்கு சந்தேகம்.

விஜய் போல 2024 தேர்தலில் பா.ஜ.க. அண்ணாமலை என்ற ஒரு பிம்பத்தைக் கட்டமைத்தது. அவர் பிரசாரத்தில் 'தென்தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் இனி இருக்காது' என ஆக்ரோஷமாக பேசினார். அவருக்கு மக்கள் அளித்த வரவேற்பைப் பார்த்து பெரும்பாலான ஊடகங்கள் 'கோவையில் 2 - 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாமலை வெற்றிபெறுவார்' என்றது.

அந்தத் தேர்தலில் அண்ணாமலை என்ற பிம்பம் எப்படி கட்டமைக்கப்பட்டது தெரியுமா?

`கவுண்டர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் அண்ணாமலைதான் என முடிவு செய்துவிட்டார்கள்' என பிரசாரம் செய்யப்பட்டது. அண்ணாமலைக்காக மட்டும் ஐடி விங்கில் 15000 பேர் வேலை பார்த்தார்கள். தமிழ்நாட்டில் எந்த அரசியல் தலைவருக்கும் இவ்வளவு பேர் வேலை பார்த்தது இல்லை.

அண்ணாமலை
அண்ணாமலை

பிரசாரத்துக்காக வீடு வீடாகச் சென்றார்கள். 'வென்றாலும், தோற்றாலும் 100 நாளில் கோவையின் தொழில்துறையை மாற்றிக்காட்டுவேன்' என சவால் விட்டார். இத்தனைக்குப் பிறகும், 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அண்ணாமலை படுதோல்வியைச் சந்தித்தார்.

இதேபோலதான் விஜய் என்ற பிம்பமும் கட்டமைக்கப்படுகிறது. தேர்தல் முடிவுதான் அவரின் பிம்பம் உண்மையா இல்லையா என்பதைச் சொல்லும். அதுவரை காத்திருக்க வேண்டும்.

மேலும், தமிழ்நாட்டின் 'மக்கள் அரசியலை' காங்கிரஸ் கீழ்மட்டத் தொண்டர்கள் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லையோ எனத் தோன்றுகிறது. இந்திய அளவில் பா.ஜ.க. மூன்று முறை மத்தியில் ஆட்சிக்கு வருகிறது.

காங்கிரஸ் கோட்டை, கம்யூனிஸ்ட் மாநிலம் எனக் கூறப்படும் கேரளாவில் கூட ஒரு பா.ஜ.க. எம்.பி. வந்துவிட்டார். ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி 15 முறை தமிழ்நாட்டுக்கு வந்தார். ஆனாலும், தமிழ்நாடு பா.ஜ.க. எம்.பி. ஒருவருக்குக் கூட இடமளிக்கவில்லை.

ஸ்டாலின், ராகுல் காந்தி
ஸ்டாலின், ராகுல் காந்தி

எனவே, காங்கிரஸ் முதலில் களத்தில் இறங்க வேண்டும். காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையைத் தவிர சாமானிய மக்களுக்கு தமிழ்நாட்டின் வேறு எந்த காங்கிரஸ் தலைவரைத் தெரியும்? எத்தனைப் பிரச்னைகளுக்கு தனித்து நின்று போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறது காங்கிரஸ்? எனவே, காங்கிரஸ் களப்பணி - கட்சிப்பணிக்கான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன்." என்றார் தெளிவாக..!

"OPS-ன் காலதாமதம்... திமுக தமிழ்நாட்டிற்குத் தேவை" - திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் சொல்வது என்ன?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. கட்சி மாறுதல், கூட்டணி மாறுதல், கூட்டணிப் பேச்சுவார்த்தை போன்றவற்றுக்கு இனி பஞ்சமிருக்காது.அதில் ஒருவர்தான், இன்று திமுகவில் இணைந்துள்ள ஒரத்தநாடு எம்.எல்.... மேலும் பார்க்க

தூத்துக்குடி தொகுதி: முட்டிமோதும் நிர்வாகிகள்; கூட்டணி முடிவில் அதிமுக? - ஜாலியில் அமைச்சர் தரப்பு!

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில், கடந்த தேர்தலில் அமைச்சர் கீதா ஜீவன் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார். தூத்துக்குடி தி.மு.கவின் முகமாகவும், மக்கள் மத்தியில் நன்கு பரிட்சியமானவர் என்பதால் வரும் தேர... மேலும் பார்க்க

`துப்பாக்கி திருப்புமுனை' - எம்ஜிஆர் காலத்து ‘அனுதாப அலை’களும் சில வெற்றிகளும்! | ‘வாவ்’ வியூகம் 02

(கூட்டணி வியூகங்கள், வசீகர வாக்குறுதிகள், பிரசார வியூகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி கட்சிகள் ஆட்சிக்கு வந்த கதைகளை, சமீபத்திய நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தும் கட்டுரைகளை உள்ளடக்கிய தொடர்தான் ‘வாவ்’ வியூகம்.... மேலும் பார்க்க

`விட்டுக்கொடுத்தால் கெட்டுப் போவதில்லை' - என்.டி.ஏ கூட்டணியில் கையெழுத்திடும் டிடிவி தினகரன்!

என்.டி.ஏ கூட்டணியில் இணையப் போவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருக்கிறார். மாவட்டச் செயலாளர்களுடன் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எடுத்திருக்கிறார். டி.டி.வி. தினகரன்அடையாறில் உள்ள அ... மேலும் பார்க்க

”ஆண்கள் மனைவியோடும், காதலியோடும் இலவசமாக பயணித்து சினிமா போலாம், ஊர் சுற்றலாம்!” - ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அ.தி.மு.க மேற்கு மாவட்டம் மற்றும் மகளிரணி சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள்விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டுப் பேசினார... மேலும் பார்க்க