Doctor Vikatan: அறுவை சிகிச்சைக்குப் பிறகான வலி... பக்கவாதத்தை ஏற்படுத்துமா?
”ஆண்கள் மனைவியோடும், காதலியோடும் இலவசமாக பயணித்து சினிமா போலாம், ஊர் சுற்றலாம்!” - ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அ.தி.மு.க மேற்கு மாவட்டம் மற்றும் மகளிரணி சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள்விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டுப் பேசினார். அப்போது பேசிய அவர், “எம்.ஜி.ஆரின் ஆட்சியை கொண்டு வருவோம் என சிலர் சொல்லி வருகிறார்கள். எம்.ஜி.ஆரின் ஆட்சியை அவரது தொண்டர்களால்தான் கொண்டு வர முடியும். அ.தி.மு.க., 5 அற்புதமான தேர்தல் அறிக்கைகளை கொண்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்றவுடன், அனைத்து ரேசன் அட்டைதாரர்களின் வங்கிக்கணக்கிலும் மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்படும் என்ற திட்டத்தில்தான் முதல் கையெழுத்திடுவார்.
கருப்பு அட்டை, சிகப்பு அட்டை, சீனி அட்டை என்ற பாகுபாடே இல்லாமல் ரேசன் அட்டை இருந்தால் அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்படும். டெல்லியில் அ.தி.மு.க வைத்துள்ள கூட்டணியால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை நிறைவேற்ற முடியும்.
மகளிருக்கு மட்டும் தற்போது இலவசப் பேருந்து பயணத்திட்டம் உள்ளது. பிரிந்த குடும்பங்களை சேர்க்கும் வகையில் இலவசப் பயணத்திட்டத்தை அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இனிமேல் ஆண்கள் மனைவியோடும், காதலியோடும் இலவசப் பேருந்துகளில் பயணித்து சினிமாவிற்கு செல்லலாம். ஊர் சுற்றலாம்.

அ.தி.மு.க அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை அனைத்தும் அவரது சுய சிந்தனையில் உதித்த திட்டங்கள். யாரும் அவருக்கு ஆலோசனை வழங்கவில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆட்சியை அவரால் மட்டுமே தர முடியும். அ.தி.மு.க கூட்டணிக்கு ஏராளமானோர் வந்து கொண்டிருக்கிறார்கள். வரும் 23-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி பங்கேற்கும் மேடையில் கூட்டணியில் எத்தனை கட்சிகள் மேடை ஏறப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். எல்லோரும் துப்பாக்கி போல் ஓரணியில்தான் நிற்போம்” என்றார்.














