அவள் விருதுகள்: இந்த ஆண்டிற்கான அவள் விகடன் விருதினை பெறவிருக்கும் சாதனையாளர்கள்...
100% இயற்கை முறையில் சமைக்கத் தேவையில்லாத 'மேஜிக் அரிசி' - தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி சாதனை!
மாறிவரும் பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் சவால்களுக்கு மத்தியில், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் 50 ஏக்கர் நிலத்தில் 100 சதவீத இயற்கை முறையில் சீராக சம்பா நெல் சாகுபடியை மேற்கொண்டு புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர். இதன் ஒரு முக்கியப் பகுதியாக, 2 ஏக்கர் நிலத்தில் சமைக்கத் தேவையில்லாத சிறப்பு வாய்ந்த 'மேஜிக் அரிசி'யை (Magic Rice) வெற்றிகரமாக சாகுபடி செய்து அசத்தியுள்ளனர்.
வேளாண் கல்வியை வெறும் வகுப்பறையோடு சுருக்கிக்கொள்ளாமல், நேரடி களப்பயிற்சியாக (Learning by doing) மாணவர்கள் மேற்கொண்டுள்ளனர். நிலத்தை உழுவது, நாற்றங்கால் அமைப்பது, நடவு செய்வது, களை எடுப்பது, இயற்கை உரங்கள் தெளிப்பது முதல் அறுவடை செய்வது வரை அனைத்தையும் மாணவர்களே தங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகப் முழுப் பொறுப்பேற்றுச் செய்து வருகின்றனர்.
அசாம் மாநிலத்தின் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில் உள்ள சிவசாகர் பகுதியில் பழங்குடியின மக்களால் பயிரிடப்படும் பாரம்பரிய நெல் ரகமான 'கோமல் சால்' இங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒரு அடிக்கு ஒரு அடி என்ற இடைவெளியில் நடவு செய்யப்பட்டுள்ள இந்த ரகத்தின் சாகுபடி காலம் 150 நாட்கள் ஆகும். முந்தைய காலங்களில் போர்வீரர்களின் முக்கிய உணவாக இந்த அரிசி பயன்பாட்டில் இருந்துள்ளது.
மற்ற அரிசிகளைப் போல இதனை நெருப்பில் வைத்துச் சமைக்க வேண்டியதில்லை. வெதுவெதுப்பான நீரில் 30 முதல் 40 நிமிடங்கள் ஊற வைத்தால் மட்டும் போதும், தானாகவே சாப்பிடத் தயார் நிலைக்கு (Ready-to-eat) மாறிவிடும். அதிக வெப்பத்தில் சமைக்கப்படாததால், இதில் உள்ள வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் வீணாகாமல் முழுமையாகப் பாதுகாக்கப்படுகின்றன. சாதாரண வெள்ளை அரிசியை விட இதில் நார்ச்சத்து (Fiber) பல மடங்கு அதிகமாக உள்ளதால், செரிமான ஆரோக்கியத்திற்கும், உடலுக்குத் தேவையான ஆற்றலுக்கும் இது சிறந்த தேர்வாக அமைகிறது.

இந்த 50 ஏக்கர் பண்ணையில் ரசாயன உரங்கள் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளன. பயிர்களைப் பாதுகாக்கவும், மண்ணின் வளத்தை மேம்படுத்தவும் கல்லூரியிலேயே தயாரிக்கப்பட்ட இயற்கை உரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. பண்ணையிலேயே தயாரிக்கப்படும் நுண்ணுயிர் உரம், நாற்று நட்டதில் இருந்து 90 நாட்கள் வரை ஒவ்வொரு 10 நாட்களுக்கும் ஒருமுறை பயிர்களுக்கு வழங்கப்படுகிறது. இது வேர் வளர்ச்சி மற்றும் மண் வளத்தை அபரிமிதமாக அதிகரிக்கிறது. இயற்கை நைட்ரஜன் உரமான இதுவும் வளாகத்திலேயே தயாரிக்கப்பட்டு, நெற்கதிர்கள் பூக்கும் பருவம் வரை தொடர்ந்து தெளிக்கப்படுகிறது.
கர்நாடகா பொன்னி, ஆந்திரா பொன்னி, பி.பி.டி போன்ற பிற நெல் ரகங்களுக்கு உரம் மற்றும் மருந்துகளுக்காக 100 ரூபாய் செலவாகிறது என்றால், இந்த மேஜிக் அரிசிக்கு 20 ரூபாய் மட்டுமே செலவாகிறது. பொதுவாக நெற்பயிர்களைத் தாக்கும் கருகல் நோய் மற்றும் தண்டுத் துளைப்பான் போன்ற நோய்களைத் தாங்கி, இயற்கைச் சூழலுக்கு ஏற்ப தகவமைத்து வளரக்கூடியது இதன் தனிச்சிறப்பாகும்.
ரசாயனமற்ற பெரிய அளவிலான இயற்கை விவசாயத்துடன், 'கோமல் சால்' போன்ற எதிர்காலத்திற்குத் தேவையான சிறப்பு ரகங்களை இணைப்பதன் மூலம், பாரம்பரிய சூழலியல் அறிவையும் நவீன உணவுத் தேவைகளையும் ஒருங்கிணைக்க முடியும் என்பதை இக்கல்லூரி மாணவர்கள் நிரூபித்துள்ளனர். இதன் மூலம் தூய்மையான, ஆரோக்கியமான மற்றும் வளமான விவசாய எதிர்காலத்திற்கான அடித்தளம் பெரம்பலூரில் வெற்றிகரமாக அமைக்கப்பட்டுள்ளது.

















