முதல்வர் விஜய்: முதல் சட்டமன்றக் கூட்டம்... எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி!...
12 ஆண்டுகள் காத்திருந்த பெண்.... ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்!
தம்பதிக்கு எத்தனை வசதிகள், செல்வங்கள் இருந்தாலும் குழந்தை இல்லை என்றால் அது ஒரு மிகப்பெரிய வருத்தமாகவே இருக்கும். எதியோப்பியாவில் ஒரு பெண் திருமணமாகி கடந்த 12 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்தார். ஆனாலும் அவர் நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து கடவுளை வேண்டிக்கொண்டார். சமீபத்தில் அப்பெண் கர்ப்பம் அடைந்தார். அவர் டாக்டரிடம் பரிசோதனைக்கு சென்ற போது ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தொடர்ந்து டாக்டரிடம் பரிசோதனை செய்து கொண்டார். எதியோப்பியாவில் உள்ள ஹராரே என்ற இடத்தை சேர்ந்த பெட்ரியா என்ற அப்பெண் குழந்தையே இல்லாமல் இருந்த தனக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தார்.
அவர் பிரசவத்திற்காக அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிசேரியன் மூலம் பிரசவம் பார்க்கப்பட்டது.

டாக்டர்கள் முதலில் 4 குழந்தைகள் இருப்பதாக கணித்து இருந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக கர்ப்பப்பையில் 5 குழந்தைகள் இருந்தது. அதில் 4 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் ஆகும். அனைத்து குழந்தைகளும் ஒரு கிலோவிற்கு மேல் இருந்தது. வழக்கமாக பிரசவத்தின் போது ஒரு கிலோவிற்கு அதிகமாக இருக்கும் குழந்தைகள் உயிர் பிழைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்திருப்பது பெட்ரியா மற்றும் அவரது கணவருக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது. தற்போது தாயும், குழந்தைகளும் நலமாக இருக்கின்றனர். அவர்கள் தொடர்ந்து மருத்துவமனையில் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இது குறித்து 5 குழந்தைகளின் தாயான பெட்ரியா கூறுகையில்,''நானும், எனது கணவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எங்களது மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகளே இல்லை.
கடந்த பல ஆண்டுகளாக கவலையில் வாழ்ந்து வந்தோம். நான் ஒரு குழந்தைக்காக கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். ஆனால் கடவுள் எங்களுக்கு 5 குழந்தைகளை கொடுத்து இருக்கிறார். இந்த தருணத்திற்காக பல ஆண்டுகளாக காத்திருந்தோம். வழக்கமாக எனது கணவர் என்னை சமாதானப்படுத்துவார். அவருக்கு இரண்டாவது மனைவி மூலம் ஒரு குழந்தை இருக்கிறது. அதனை சுட்டிக்காட்டி கவலைப்படாதே என்று சொல்வார். ஆனால் எனது மனதிற்குள் வருத்தம் இருந்து கொண்டே இருந்தது. கிராமத்தினர் அடிக்கடி குழந்தை இல்லையா என்று கேட்டுக்கொண்டிருந்தனர்.
குழந்தை கனவு தொலைதூரக்கனவு போன்று மாறியது. ஆனால் இப்போது அதனை நினைத்துக்கூட பார்க்க விரும்பவில்லை. 12 ஆண்டுகளை நான் வேதனையில் கழித்தேன். எந்த நிகழ்ச்சிக்கும் செல்லாமல் என்னை மறைத்துக்கொண்டு, இடைவிடாமல் குழந்தைகளுக்காகப் பிரார்த்தித்து வந்தேன். இறுதியாக, அல்லாஹ் என் பிரார்த்தனைகளைக் நிறைவேற்றி இருக்கிறார்," என்று அவர் கூறினாள்.

















