தாமதமாகும் நெல் கொள்முதல் : முளைத்த நெல்லை கையில் ஏந்தி கண்ணீர் வடிக்கும் விவசாய...
கம்போடியாவில் இருந்து மும்பை பெண்ணை டிஜிட்டலில் கைது என்று சொல்லி ரூ.60 லட்சம் பறிப்பு: 4 பேர் கைது
பெண்கள் மற்றும் முதியவர்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த சம்பவங்களில் ஏராளமானோர் கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். புதிதாக மும்பையை சேர்ந்த கணவனை இழந்த பெண் ஒருவரை மகாராஷ்டிராவை சேர்ந்த நபர் கம்போடியாவில் இருந்து கொண்டு டிஜிட்டல் முறையில் கைது செய்து ரூ.60 லட்சத்தை பறித்துள்ளார்.
மும்பை ஜோகேஸ்வரியை சேர்ந்த 58 வயது பெண்ணிற்கு மர்ம நபர் ஒருவர் போன்செய்து தன்னை மும்பை துணை போலீஸ் கமிஷனர் என்று கூறி வீடியோ காலில் பேசினார். அப்பெண்ணின் சிம்கார்டை பயன்படுத்தி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக அப்பெண் மீது நடவடிக்கை எடுக்க கோர்ட் உத்தரவிட்டு இருப்பதாக அப்பெண்ணிடம் தெரிவித்தார்.
அதோடு அப்பெண்ணிடம் உங்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து இருப்பதாகவும், எப்போதும் தங்களது கண்காணிப்பில் இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அப்பெண்ணும் அதன்படி நடந்து கொண்டார்.

பணமோசடி என்பதால் உங்களிடம் இருக்கும் பணத்தை தங்களிடம் கொடுக்கும்படியும் விசாரணை முடிந்தபிறகு பணத்தை திரும்ப கொடுத்துவிடுவதாக போலி துணை போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.
இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் புருத்ஷோத்தம் கூறுகையில்,''சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு கடந்த ஆண்டு டிஜிபி என்று கூறிக்கொண்டு மர்ம நபர் வீடியோ காலில் பேசி இருக்கிறார். பணத்தை தனது வங்கிக்கணக்கில் பெற முதலில் அந்த நபர் முடிவு செய்தார். ஆனால் அவர் தனது முடிவை மாற்றிக்கொண்டு அப்பணத்தை ரொக்கமாக கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். அப்பெண் தனது கணவரின் கடனை அடைக்க தனது சொத்து மற்றும் தங்க நகைகளை விற்பனை செய்து பணம் வைத்திருந்தார்.
மர்ம நபர்கள் அப்பெண்ணின் வீட்டிற்கு இரண்டு முறை கார்களில் வந்து ஒரு முறை ரூ.35 லட்சத்தையும், மறுமுறை ரூ.25 லட்சத்தையும் வாங்கிச்சென்றுள்ளனர். விசாரணையில் கம்போடியா வாட்ஸ்ஆப் நம்பர் பயன்படுத்தப்பட்டு இருந்தது. அந்த நம்பருக்கு அடிக்கடி யார் போன் செய்தது என்பதை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் ஜல்காவ் பகுதியை சேர்ந்த மகாஜன், காலே, ஜெயேஷ் மற்றும் வினோத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபர் கம்போடியாவில் இருக்கிறார். அவர் 2023ம் ஆண்டு கம்போடியாவில் கால் சென்டர் வேலைக்காக சென்றார். அங்கிருந்து கொண்டு இந்தியாவை சேர்ந்தவர்களுக்கு போன் செய்து பணம் பறிப்பதை வழக்கமாக கொண்டுள்ளான். அவ்வாறு கிடைக்கும் பணத்தில் கம்போடியாவில் அவன் தனது காதலியுடன் ஹோட்டலில் சொகுசு வாழ்க்கை வாழ்கிறான்'' என்று தெரிவித்தார். பணத்தை வாங்கிச்சென்ற நபர்கள் அதன் பிறகு தொடர்பை துண்டித்துக்கொண்ட பிறகுதான் அப்பெண்ணிற்கு தான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது. அதன்பிறகுதான் இது குறித்து போலீஸில் புகார் செய்தார்.
76 வயது பெண்ணிடம் ரூ.1.4 கோடி பறிப்பு
இதே போன்று டெல்லியை சேர்ந்த 76 வயது பெண்ணை 14 நாட்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்து 24 மணி நேரமும் கண்காணித்து ரூ.1.4 கோடியை அபகரித்துள்ளனர். அப்பெண்ணிடம் உங்களது வங்கிக்கணக்கு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு ஆயுதங்கள் வாங்க பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மும்பை போலீஸ் அதிகாரி என்று கூறிக்கொண்டு அப்பெண்ணை வீடியோ கால் மூலம் 24 மணி நேரமும் கண்காணித்துள்ளனர்.
அதோடு அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அவர்களின் மிரட்டல்களுக்கு பயந்து தனது வங்கிக்கணக்கில் இருந்த ரூ.1.4 கோடியை அவர்கள் சொன்ன வங்கிக்கணக்கிற்கு மாற்றியுள்ளார். அப்பெண்ணின் இரண்டு பிள்ளைகள் வெளிநாட்டில் இருந்தனர். அவர்களிடமும் சொல்லவில்லை. முழு பணமும் காலியான பிறகுதான் அப்பெண் இது குறித்து தனது உறவினர் ஒருவரிடம் தெரிவித்தார். அதன்பிறகுதான் இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது.



















