உங்க ரூ.500, ரூ.1,000 கோடிகளாக மாற வேண்டுமா? உடனே ஃபாலோ செய்ய வேண்டிய சேமிப்பு, ...
190 குழந்தைகளின் மரணம்... மதவழிபாட்டின் பெயரில் கொடூரம்: தலைவருக்கு 200 ஆண்டுகள் சிறை!
கடவுளைச் சந்திக்க வேண்டும் என்பதற்காகப் பசியுடன் இருந்தால் சொர்க்கத்துக்குச் செல்லலாம் என்று கூறி, தன்னைப் பின்பற்றியவர்களையும் அவர்களின் குழந்தைகளையும் பட்டினி கிடக்கச் செய்த மதக்குழுத் தலைவருக்கு கென்ய நீதிமன்றம் 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கென்யாவைச் சேர்ந்த பால் மெக்கன்சி (Paul Mackenzie) என்பவர் 'Good News International Church' என்ற அமைப்பை நடத்தி வந்தார். உலகம் விரைவில் அழியப்போகிறது என்றும், அதற்கு முன்பாக இயேசுவைச் சந்திக்க வேண்டுமென்றால் உணவு உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும் என்றும் தனது ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார். இதை நம்பிய பல குடும்பங்கள், தங்களது குழந்தைகளையும் பட்டினி கிடக்கச் செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.

குழந்தைகளுக்கு முதலில் உணவு மறுக்கப்பட்டதாகவும், பின்னர் பெண்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட மற்றவர்களும் பட்டினி கிடக்க வற்புறுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. உத்தரவுகளைப் பின்பற்ற மறுத்தவர்களை அவருடன் இருந்தவர்கள் தாக்கியதாகவும், தப்பிச் செல்ல முடியாதபடி அடைத்து வைத்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
2023-ம் ஆண்டு கென்யாவின் ஷகஹோலா (Shakahola) வனப்பகுதியில் இருந்து உடல்கள் கண்டெடுக்கப்பட்டபோது இந்தச் சம்பவம் உலகையே அதிர்ச்சியடையச் செய்தது. இந்த வழக்கில் 190 குழந்தைகள் மற்றும் ஓர் வயது வந்தவர் என மொத்தம் 191 பேரின் மரணத்திற்காக மெக்கன்சி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

2026 நவம்பர் 6-ம் தேதி மொம்பாசா உயர் நீதிமன்றம் அவருக்கு பட்டினியால் ஏற்பட்ட கொலைகளுக்காக 100 ஆண்டுகளும், நேரடிக் கொலைகளுக்காக 100 ஆண்டுகளும் என மொத்தம் 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. அவருடன் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 28 பேருக்கும் வெவ்வேறு கால அளவுகளில் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் ஷகஹோலா வனப்பகுதியில் மட்டும் 448 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 52 மரணங்கள் தொடர்பாக மெக்கன்சி மீது தனியாக வழக்கும் நிலுவையில் உள்ளது.
மத நம்பிக்கையின் பெயரில் மக்களின் உயிரையும், குறிப்பாகக் குழந்தைகளின் பாதுகாப்பையும் பறிக்கும் செயல்களுக்கு எதிராக இந்தத் தீர்ப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.




















