2026 T20 WC-ல் ரோஹித்துக்கு சிறப்பு அங்கீகாரம்; ஒரே குழுவில் IND, PAK; வெளியானது...
2026 T20 WC-ல் ரோஹித்துக்கு சிறப்பு அங்கீகாரம்; ஒரே குழுவில் IND, PAK; வெளியானது போட்டி அட்டவணை!
டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை நடப்பு சாம்பியன் இந்தியாவும், முன்னாள் சாம்பியன் இலங்கையும் இணைந்து அடுத்தாண்டு (2026) டி20 உலகக் கோப்பைத் தொடரை நடத்துகின்றன.
இத்தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடும் நிகழ்ச்சி மும்பையில் இன்று நடைபெற்றது. இதில் ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷா உள்ளிட்ட ஐ.சி.சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும், கடந்த ஆண்டு இந்தியாவுக்கு டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, இந்த ஆண்டு மகளிர் உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், அடுத்தாண்டு டி20 உலகக் கோப்பையின் விளம்பர தூதராக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டார். சர்வதேச கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கும் ஒருவர் உலகக் கோப்பை தொடரின் விளம்பர தூதராக அறிவிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
A two-time @t20worldcup champion, a record-setter across T20 World Cups and now the tournament ambassador for ICC Men's #T20WorldCup 2026
— ICC (@ICC) November 25, 2025
The one and only Rohit Sharma pic.twitter.com/iAoBJKoAC0
அதைத்தொடர்ந்து வெளியிடப்பட்ட அட்டவணையின்படி இந்தியாவில் டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியம், கொல்கத்தா ஈடன் கார்டன் ஸ்டேடியம், மும்பை வான்கடே ஸ்டேடியம், சென்னை எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம், அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம் ஆகிய 5 மைதானங்களில் போட்டி நடைபெறும்.
இலங்கையில் கண்டி பல்லேகலே ஸ்டேடியம், கொழும்புவில் ஆர். பிரேமதாச ஸ்டேடியம் மற்றும் எஸ்.எஸ்.சி ஸ்டேடியம் ஆகிய மைதானங்களில் நடைபெறும்.
இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. குரூப் A-யில் இந்தியா, பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து, அமெரிக்கா (USA) ஆகிய அணிகள் இடம்பெற்றிருக்கின்றன.
இதில், மார்ச்சில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா தங்கள் நாட்டுக்கு வராததால் இனி இந்தியாவில் நடைபெறும் எந்தவொரு ஐ.சி.சி தொடரிலும் பங்கேற்க மாட்டோம் என்று பாகிஸ்தான் தெரிவித்துவிட்டதால், பாகிஸ்தான் ஆடும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் பட்டியலிடப்பட்டிருக்கிறது
குரூப் B-யில் இலங்கை, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமான், ஜிம்பாப்வே அணிகள் இடம்பெற்றிருக்கின்றன.
குரூப் C-யில் வங்காளதேசம், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இத்தாலி, நேபாளம் ஆகிய அணிகள் இடம்பெற்றிருக்கின்றன.
குரூப் D-யில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) அணிகள் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த நான்கு குழுக்களில் இடம்பெற்றிருக்கும் அணிகள் தங்கள் குழுவில் இடம்பெற்றிருக்கும் மற்ற அணிகளுடன் தலா ஒரு லீக் போட்டியில் ஆட வேண்டும்.
இந்த லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய 8 அணிகளும் தலா 4 அணிகள் என இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படும்.
அதில், லீக் சுற்றைப் போலவே ஒவ்வொரு அணியும் தங்களது குழுவில் இருக்கும் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் ஆட வேண்டும். சூப்பர் 8 சுற்று முடிவில் இரண்டு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்திருக்கும் 4 அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.
அரையிறுதிச் சுற்றுப் போட்டிகளில் வெற்றிபெற்ற இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறும் இத்தொடரில், லீக் சுற்று போட்டிகள் பிப்ரவரி 7 முதல் 20 வரையிலும், சூப்பர் 8 சுற்று போட்டிகள் பிப்ரவரி 21 முதல் மார்ச் 1 வரையிலும், அரையிறுதிப் போட்டிகள் மார்ச் 4, 5 ஆகிய தேதிகளிலும், இறுதிப் போட்டி மார்ச் 8-ம் தேதியும் நடைபெறும்.
மார்ச் 4-ம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அல்லது இலங்கை முன்னேறினால் அப்போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெறும்.
அவ்வாறு அந்த இரு அணிகளும் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை எனில் அப்போட்டி கொல்கத்தாவில் நடத்தப்படும். மார்ச் 5 அரையிறுதிப் போட்டி மும்பையில் நடத்தப்படும்.
அதேபோல், இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் முன்னேறும்பட்சத்தில் அப்போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெறும்.
பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லையெனில் அகமதாபாத்தில் இறுதிப் போட்டி நடைபெறும்.

லீக் சுற்றில் இந்தியா பிப்ரவரி 7-ம் தேதி அமெரிக்காவையும் (மும்பை), 12-ம் தேதி நமீபியாவையும் (டெல்லி), 15-ம் தேதி பாகிஸ்தானையும் (கொழும்பு ஆர். பிரேமதாச ஸ்டேடியம்), 18-ம் தேதி நெதர்லாந்தையும் (அகமதாபாத்) எதிர்கொள்கிறது.
லீக் சுற்றில் சென்னையில் இந்தியாவுக்கு ஒரு போட்டியும் இல்லை. ஆனால், லீக் சுற்றில் மொத்தமாக 6 போட்டிகள், சூப்பர் 8 சுற்றில் ஒரு போட்டி என மொத்தம் 7 போட்டிகள் சென்னையில் நடைபெறும்.
கடைசியாக 2016-ல் இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் தோனி தலைமையிலான இந்திய அணி அரையிறுதி வரை முன்னேறி அரையிறுதியில் வெஸ்ட் இன்டீஸிடம் தோல்வியடைந்ததும், இறுதிப் போட்டியில் வெஸ்ட் இன்டீஸ் சாம்பியன் பட்டம் வென்றதும் குறிப்பிடத்தக்கது.




















