TASMAC: ``இது வெறும் 'எண்' துடைப்பு" - டாஸ்மாக் விவகாரத்தில் நயினார் நாகேந்திரன்...
`56' ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு அதிரடி!
தமிழகக் காவல்துறையில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் எஸ்.பி அந்தஸ்திலான 56 உயர் அதிகாரிகளை அதிரடியாக பணி இடமாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை இன்று (15.06.2026) உத்தரவிட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அரசாணையை அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் கே.மணிவாசன் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அரசாரணையின்படி, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வரும் 56 உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை மற்றும் திருச்சி ஆகிய மாநகரங்களின் துணை ஆணையர்கள் மற்றும் முக்கிய மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் (SP) இந்த உத்தரவின் மூலம் மாற்றலாகியுள்ளனர்.

முக்கிய மாற்றங்களாக, கட்டாயக் காத்திருப்பில் இருந்த டி.ஐ.ஜி இ.எஸ். உமா, சென்னை பெருநகர காவல் தலைமையக டி.ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை தி.நகர் துணை ஆணையராக இருந்த எஸ்.குதாலிங்கம், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (SP) மாற்றப்பட்டுள்ளார். சென்னை அடையார் துணை ஆணையர் ஏ.சி. கார்த்திகேயன் திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி-யாகவும், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி விவேகானந்த சுக்லா கடலூர் மாவட்ட எஸ்.பி-யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், விழுப்புரம் எஸ்.பி வி.வி.சாய் பிரணீத் திருவள்ளூர் மாவட்டத்திற்கும், கடலூர் எஸ்.பி எஸ். ஜெயக்குமார் திண்டுக்கல் மாவட்டத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் பல மாவட்ட எஸ்.பி-க்கள் மற்றும் மாநகர துணை ஆணையர்களும் புதிய இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி, சேலம் மாவட்ட எஸ்.பி கௌதம் கோயல் விருதுநகர் மாவட்டத்திற்கும், தர்மபுரி எஸ்.பி எஸ்.எஸ். மகேஸ்வரன் கோவை மாநகர போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி பி. தங்கதுரை கோவை மாநகர (வடக்கு) சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராகவும், திருப்பூர் மாவட்ட எஸ்.பி யாதவ் கிரீஷ் அசோக் நாமக்கல் மாவட்ட எஸ்.பி-யாகவும் மாற்றப்பட்டுள்ளனர். பெங்களூரு எல்லைக்கு அருகிலுள்ள கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி-யாக ஜி.எஸ். அனிதா நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகரக் காவல்துறையிலும் பல்வேறு முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB-III) துணை ஆணையராக இருந்த எஸ். ஆரோக்கியம், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஏ.ஐ.ஜி-யாக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை புளியந்தோப்பு துணை ஆணையர் கே. முத்துகுமார், சென்னை தெற்கு போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையர் சமே சிங் மீனா, சென்னை புளியந்தோப்பு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். கட்டாயக் காத்திருப்பில் இருந்த டாக்டர் கே. பிரபாகர், தாம்பரம் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

















