சென்னை: அதிமுக பகுதிச் செயலாளர் தற்கொலை - கடன் தொல்லையால் விபரீத முடிவா?
`8'-இல் `2' தொகுதிகள்; உதயநிதியின் டார்கெட் - களமிறக்கப்படும் இளைஞரணி?பரபரக்கும் திருப்பூர் திமுக!
திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 8 தொகுதிகளில் அவிநாசி மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகள் தனித்தொகுதிகளாகும். மீதமுள்ள திருப்பூர் வடக்கு, தெற்கு, காங்கேயம், பல்லடம், உடுமலைப்பேட்டை,மடத்துக்குளம் ஆகிய 6 தொகுதிகள் பொதுத் தொகுதிகளாக உள்ளன. இந்த 8 தொகுதிகளில் திருப்பூர் தெற்கு, காங்கேயம், தாராபுரம் ஆகிய மூன்று தொகுதிகள் மட்டும் திமுக வசம் உள்ளன. பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், திருப்பூர் வடக்கு, அவிநாசி ஆகிய 5 தொகுதிகள் அ.தி.மு.க. வசம் உள்ளன. 2026 தேர்தலில் கைவிட்ட 5 தொகுதிகளைக் கைப்பற்றிவிட வேண்டும் என திமுக முனைப்பு காட்டி வருகிறது. அதேநேரத்தில், உடுமலைப்பேட்டை, திருப்பூர் வடக்கு அல்லது தெற்கு தொகுதிகள் இளைஞரணிக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக பேச்சு எழுந்துள்ளது, திருப்பூர் தி.மு.க வட்டாரத்தை பரபரப்பாக்கி உள்ளது.

இளைஞரணிக்கு முக்கியத்துவம்
இது தொடர்பாக கட்சியின் சீனியர்கள் சிலர் பேசுகையில், "கடந்த மக்களவைத் தேர்தலின்போது இளைஞரணிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென உதயநிதி தலைமையிடம் தொடர்ந்து வலியுறுத்தினார். ஆனால், அந்த தேர்தலில் உதயநிதி எதிர்பார்த்ததுபோல் இளைஞரணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. உதயநிதியை சமாதானப்படுத்தும் விதமாக மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த இளைஞரணி துணைச் செயலாளரான பிரகாஷுக்கு மட்டும் ஈரோடு மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், அண்மையில் திருவண்ணாமலையில் நடைபெற்ற இளைஞரணி மாநாட்டில், உதயநிதி பேசும்போது, `2026 தேர்தலில் இளைஞரணிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்' என்று மாநாட்டில் வெளிப்படையாகவே பேசினார். வருவாய் மாவட்டத்துக்கு ஒரு தொகுதி என குறைந்தது 40 தொகுதிகளையாவது இளைஞரணிக்கு பெற்றுவிட வேண்டுமென உதயநிதி திட்டமிட்டு வருகிறார். மேலும், தவெக-வுக்கு இளைஞர்கள், இளம்பெண்கள் அதிகமாக செல்வதையும் உதயநிதி உன்னிப்பாக கவனித்து வருகிறார். குறிப்பாக மேற்கு மண்டலத்தில் ஏற்கெனவே திமுக வீக்காக உள்ளதால், இந்த முறை அதை சரிகட்ட இளைஞரணியை களமிறக்க திட்டமிட்டுள்ளார் உதயநிதி. அதை உறுதிப்படுத்தும் வகையில்தான் திமுக-வில் எந்தக் காலத்திலும் இல்லாத நடைமுறையாக பொங்கல் பண்டிகையையொட்டி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களை அண்மையில் சென்னைக்கு அழைத்த உதயநிதி அவர்களிடம் இளைஞரணி நிர்வாகிகளுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. நம்பிக்கையுடன் தேர்தல் பணியாற்றுங்கள் என்று கூறி, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பெரும் தொகையை வழங்கி உள்ளார். குறிப்பாக மேற்கு மண்டல நிர்வாகிகளிடம் தொகுதிப் பணிகளில் அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தி உள்ளார்" என்றனர் விரிவாக...

உடுமலையை குறிவைக்கும் உதயநிதி
தொடந்து பேசிய அவர்கள், "திருப்பூர் மாவட்டத்தில், உடுமலைப்பேட்டை தொகுதி முன்னாள் அமைச்சர் சாதிக்பாட்சா காலத்தில் திமுக-வின் கோட்டையாக இருந்தாலும், சரியான வேட்பாளர்கள் இல்லாதது மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது, உள்ளூர் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு தராதது போன்ற காரணங்களால், கடந்த 2001 தேர்தலில் இருந்து 2021 தேர்தல் வரை 5 தேர்தல்களில் திமுக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த முறை எப்படியாவது உடுமலைப்பேட்டையை கைப்பற்றிவிட வேண்டுமென திமுக தலைமை எண்ணுகிறது. உடுமலைப்பேட்டை நகரச் செயலாளர் வேலுசாமி, தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார், ஒன்றியச் செயலாளர் அடிவள்ளி முரளி, செயற்குழு உறுப்பினர் ஷியாம் பிரசாத், முன்னாள் மாணவரணி நிர்வாகி சுரேஷ் ஆகியோர் பெயர் வேட்பாளர் லிஸ்டில் பலமாக அடிபட்டாலும், உடுமலைப்பேட்டை தொகுதியை இளைஞரணிக்கு ஒதுக்க வேண்டுமென உதயநிதி தலைமையிடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு மிக முக்கியக் காரணம் உடுமலைப்பேட்டை தொகுதியில் வலுவாக இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சரான உடுமலை ராதாகிருஷ்ணனை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மூலம் திமுக-வுக்கு இழுக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அமைச்சர் பதவி வேண்டும் என்று ராதாகிருஷ்ணன் விடாப்பிடியாக இருந்ததால் அதை திமுக தலைமை ஏற்கவில்லை. இதனால், ராதாகிருஷ்ணனை வீழ்த்தியாக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு திமுக தலைமை சென்றுள்ளது. அதற்கு, புதுமுகம் மட்டுமின்றி ஒரு இளைஞரை நிறுத்த வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. தற்போது திமுக நகரச் செயலாளர் வேலுச்சாமி 70 வயதைக் கடந்துள்ளதுடன், உட்கட்சியிலேயே அவருக்கு எதிர்ப்பு அதிகமாக உள்ளது. அடிவள்ளி முரளி மீது அதிமுக-வில் இருந்து வந்தவர் என்ற பிம்பம் உள்ளது. ஷியாம் பிரசாத்,சுரேஷ் ஆகியோருக்கு கட்சிக்காரர்கள் மத்தியில் பெரிய அறிமுகம் இல்லை. இறுதியாக தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார்தான் உதயநிதியின் சாய்ஸாகவும், தலைமையின் சாய்ஸாகவும் இருக்க அதிக வாய்ப்புள்ளது.

கடந்த உள்ளாட்சித் தேர்தலில், உடுமலைப்பேட்டை நகராட்சித் தலைவர் வேட்பாளராக ஜெயக்குமாரை உதயநிதி நிறுத்தினார். ஆனால், உள்ளூர் அரசியல் காரணமாக ஜெயக்குமார் தேற்கடிக்கப்பட்டு, அப்போதைய திமுக நகரச் செயலாளரான மத்தின் நகராட்சித் தலைவரானார். இதனால், மத்தின் நகரச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். ஏற்கெனவே, அரசுக் கல்லூரி பணியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வந்தவர். நகராட்சித் தேர்தலில் தன்னால் நிறுத்தப்பட்டு உள்கட்சி அரசியலால் தோற்கடிக்கப்பட்டவர் என்ற சாஃப்ட் கார்னர் ஜெயக்குமார் மீது உதயநிதிக்கு உள்ளதால், உடுமலை தொகுதி அவருக்குத்தான் ஒதுக்க வாய்ப்புள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. உதயநிதியின் கேன்டிடேட் என்பதால், தெற்கு மாவட்டச் செயலாளரான எம்.பி.ஈஸ்வரசாமி ஏற்றுக் கொள்வார். ஆனால், களத்தில் அதிமுக-வைவிட திமுக-வின் உள்கட்சி அரசியலை ஜெயக்குமார் அதிகமாக எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். இதை சரிகட்டுவது கட்சித் தலைமை மற்றும் உதயநிதியின் கையில்தான் உள்ளது" என்றனர்.
மாவட்டச் செயலாளர்களின் மோதல்
இது குறித்து திருப்பூர் மாநகர திமுக-வினர் சிலர் பேசுகையில், "திருப்பூர் மாநகரத்தைப் பொறுத்தவரை மத்திய மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏ-வுமான செல்வராஜுக்கும், மேயரும் வடக்கு மாவட்டச் செயலாளருமான தினேஷ்குமாருக்கும் இடையே குப்பை மேலாண்மை பிரச்னை தொடங்கி அனைத்திலும் எலியும், பூனையுமாக உள்ளனர். இவர்களுக்கு இடையில் இருக்கும் ஈகோ மோதல் திருப்பூர் வடக்கு,தெற்கு, பல்லடம் மற்றும் அவிநாசி தொகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால், இவர்கள் இருவரும் இல்லாத ஒருவரை முன்னிருத்தி கட்சியை வலுப்படுத்த வேண்டுமென திமுக தலைமை யோசித்து வருகிறது. அப்படி இருக்கும்பட்சத்தில், திமுக தலைமை மற்றும் உதயநிதியின் தீவிர ஆதரவாளரான திருப்பூர் வடக்கு மாநகரச் செயலாளரான தங்கராஜ் சாய்ஸாக இருக்க வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே, நீண்டகாலம் திமுக இளைஞரணி அமைப்பாளராக இருந்த தங்கராஜுக்கு அண்மையில்தான் மாநகரச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இளைஞரணியில் பணியாற்றியபோது, கட்சி அளவிலும், பொதுமக்கள் அளவிலும் தங்கராஜுக்கு நல்ல அறிமுகம் இருப்பது பிளஸாக உள்ளது. திமுக வலுவாக உள்ள திருப்பூர் தெற்குத் தொகுதி அல்லது தங்கராஜின் சொந்த தொகுதியான திருப்பூர் வடக்கு ஆகிய இரண்டில் ஒன்று தங்கராஜுக்கு ஒதுக்க வேண்டுமென உதயநிதி திட்டமிட்டுள்ளார். கூடுதலாக மாவட்ட அமைச்சரான மு.பெ.சாமிநாதனின் ஆதரவு தங்கராஜுக்கு இருப்பதால் வரும் தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்க அதிகமான வாய்ப்புகள் உள்ளது. ஆனால், ஒருபுறம் வடக்கு மாவட்டச் செயலாளரான மேயர் தினேஷ்குமாரின் அரசியல், மறுபுறம் சீனியரும் எம்எல்ஏ-வும், மத்திய மாவட்டச் செயலாளரான செல்வராஜ் ஆகிய இருவரின் உள்கட்சி அரசியலை எதிர்த்து தங்கராஜ் களத்தில் நிற்பது மிகவும் சவாலானதாக இருக்கும்" என்றனர்.












