அறநிலையத்துறை அமைச்சர் மீதான விமர்சனங்கள்; `சாதி பார்த்து யாரையும் முன்நிறுத்தவி...
8-ம் வகுப்பு முதல் ரசிகர்; விஜய்யைக் கவர்ந்த பேச்சு திறமை - அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் பின்னணி!
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க சார்பில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கி, வெற்றி பெற்றவர் ரமேஷ். இதனைத் தொடர்ந்து, அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில், ரமேஷின் பின்னணி குறித்து விசாரித்தோம்.
சென்னையில் தற்போது வசித்தாலும் அவரது பூர்வீகம் கும்பகோணம் என்கிறார்கள். அதுவும், ஶ்ரீரங்கம் அவரது பாட்டி வழி பூர்வீகம். பிரசாரத்தின் போதுகூட, 'எனது குடும்பமே டெல்டா பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பம்' என்று பேசி வாக்கு சேகரித்தார். 31 வயது நிரம்பிய இவர், பட்டப்படிப்பை முடித்து தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். எட்டாவது படிக்கும் காலத்தில் இருந்து விஜய்யின் தீவிர ரசிகராக இருந்து வந்திருக்கிறார். 2016 முதல் விஜய் மக்கள் இயக்கத்தில் ஒரு சமூக சேவகராகத் தன்னை இணைத்துக்கொண்டு இன்று மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். சட்டமன்ற உறுப்பினராகி, அமைச்சராகவும் ஆகிவிட்டார். கடந்த 10 ஆண்டுகளில் ரத்த தான முகாம்கள், மருத்துவ முகாம்கள், கல்வி உதவிகள், ஏழை எளிய குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள், முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள், ஒவ்வொரு மாதமும் தொழு நோயாளிகள் இல்லம், சிறப்பு குழந்தைகள் பள்ளி, சாலையோர மக்களுக்கு அன்னதானம் வழங்குவது எனப் பல்வேறு நல உதவிகளை செய்து வந்திருக்கிறார்.

இவரது, தாயும், தந்தையும் எளிய சமையல் தொழிலாளிகள். இவர் அமைச்சராக பதவியேற்ற நாளில்கூட அவரது தாய் சமையல் வேலையாக சென்றதால், மகன் அமைச்சராக பொறுப்பேற்பதை பார்க்க முடியாமல் போனதாகச் சொல்லப்பட்டது. அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்பு வரை படித்து, அதன் பிறகு முதல் தலைமுறை பட்டதாரியானவர். விஜய் மக்கள் இயக்கத்திலிருந்து பேச்சாளராக இருந்த இவரை, செய்தித் தொடர்பாளராக முதலில் நியமித்து தற்போது ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணியின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமித்தார் விஜய். இவரது பேச்சுத்திறமை முதல்வர் விஜய்க்கு மிகவும் பிடித்துப்போய், இந்த பொறுப்பை வழங்கினாராம். அவர் சார்ந்த சமூகம் மற்றும் அவருக்கு ஒதுக்கப்பட்ட துறை சார்ந்து சமூக வலைதளங்களில் சர்ச்சையான பதிவுகள் போடப்படுகின்றன. இருந்தாலும், தன்னை எளிய மக்களுக்கான பிரதிநிதியாக காட்டிக்கொள்ளவே ரமேஷ் விரும்புகிறார்.














