150 அறைகள் கொண்ட கவடியார் அரண்மனை... ரூ.2 கோடி மதிப்புள்ள மதிப்புமிக்க நகைகள் கொ...
98th Oscars: ஆஸ்கர் வென்ற முதல் பெண் ஒளிப்பதிவாளர் - ஆஸ்கர் மேடையில் 'சின்னர்ஸ்' செய்த சம்பவங்கள்!
98வது ஆஸ்கர் விருதுகள் ஹாலிவுட்டிலுள்ள டால்பி தியேட்டரில் இன்று அதிகாலையில் (இந்திய நேரப்படி) தொடங்கி நடந்து முடிந்திருக்கிறது.
வருடந்தோறும் நடைபெறும் ஆஸ்கர் விருது விழாவில் பல்வேறு சுவாரஸ்யமான மற்றும் வரலாற்று நிகழ்வுகள் அரங்கேறும். அப்படி இந்த வருடமும் ஆஸ்கர் மேடையில் பல்வேறு சுவாரஸ்யங்களும், பல முக்கியமான நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன.
எப்போதுமே 23 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படும். ஆனால், இந்தாண்டு சிறந்த நடிகர் தேர்வு (Best Casting) என புதியதாகவும் ஒரு பிரிவைச் சேர்த்திருக்கிறார்கள்.

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் கோனன் ஓ'ப்ரையன் (Conan O'Brien) கடந்தாண்டைத் தொடர்ந்து இந்தாண்டும் ஆஸ்கர் விருது விழாவைத் தொகுத்து வழங்கியிருக்கிறார்.
நடிகை பிரியங்கா சோப்ரா இந்தாண்டு சர்வதேச சிறந்த திரைப்படத்திற்கான விருதை வழங்குவதற்காக வந்திருந்தார். கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவிலும் பிரியங்கா சோப்ரா விருது வழங்குவதற்காக பங்கேற்றிருந்தார்.
98வது ஆஸ்கர் விருது விழாவில் 'சின்னர்ஸ்' திரைப்படம் அதிகமான விருதுகளைத் தட்டிச் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. மொத்தமாக 16 பிரிவுகளில் நாமினேட் ஆகியிருந்த இத்திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த ஒரிஜினல் திரைக்கதை, சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு என நான்கு பிரிவுகளில் ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறது. இத்திரைப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதை ஆட்டம் டூரால்ட் ஆர்கபாவ் (Autumn Durald Arkapaw) என்பவர் பெற்றிருக்கிறார்.

இதன் மூலம், ஆஸ்கர் விருது வென்ற முதல் பெண் ஒளிப்பதிவாளர் என்கிற சாதனையையும் இவர் படைத்திருக்கிறார். மார்வெல் ஸ்டுடியோஸின் 'லோகி', 'ப்ளாக் பேந்தர் - வகண்டா பாரெவர்' உள்ளிட்ட சில படங்களுக்கும் இவர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இதுமட்டுமல்ல, IMAX ஃபிலிம் கேமராவின் உயர்ரக வகையைப் பயன்படுத்திய முதல் பெண் ஒளிப்பதிவாளர் இவர்தான் என்கிற பெருமையும் இவருக்கு இருக்கிறது.
ஆஸ்கர் விருது வென்ற பிறகு மேடையில் பேசிய ஆட்டம் டூரால்ட் ஆர்கபாவ், "இந்த அறையில் இருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். பெண்களாகிய நீங்கள் ஒருவருக்கொருவர் துணையாக நிற்க வேண்டும்.
உங்களின் ஆதரவு இல்லாமல் இது போன்ற தருணங்கள் சாத்தியமில்லை. உங்களின் அந்த ஆதரவால்தான் இது நடந்திருக்கிறது. அதற்காக உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படியொரு சாதனையைச் செய்ய ஒரு பெரிய கூட்டமே உழைக்க வேண்டும் என்பதை கடந்த சில மாதங்களில் நான் கற்றுக்கொண்டேன். ஆனால், இது இனி என்னைப் பற்றியது மட்டுமல்ல. இது அதையும் தாண்டிய மிகப்பெரிய விஷயம்.
இந்த அறையில் இருக்கும் அனைத்துப் பெண்களுக்காகவும், வீட்டில் பார்த்துக் கொண்டிருக்கும் அனைத்து சிறுமிகளுக்காகவும் இந்த விருதை வெல்ல வேண்டும் என நான் விரும்பினேன்." என்றார் நெகிழ்ச்சியுடன்.

இத்திரைப்படத்தின் மூலம் தன்னுடைய முதல் ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கிறார் இயக்குநர் ரையன் கூக்லர் (Ryan Coogler). 'ப்ளாக் பேந்தர்', 'ப்ளாக் பேந்தர் - வகண்டா பாரெவர்' போன்ற படங்களின் இயக்குநரும் இவர்தான். இப்போது, 'சின்னர்ஸ்' திரைப்படத்தின் மூலம் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் இவர் பெற்றிருக்கிறார். இதன் மூலம், ஆஸ்கர் விருது பெறும் இரண்டாவது ஆப்ரிக்க அமெரிக்க எழுத்தாளர் என்கிற பெருமையையும் இவர் பெற்றிருக்கிறார்.















