AC: ஏசிக்கு பழகிவிட்ட உடல்... குளிர்காலத்தில் ஏசி அறையில் உறங்குவது சரியா?
AC: ஏ.சி-யால் ஆபத்து நேராமல் இருக்க... இதையெல்லாம் நிச்சயம் செய்துவிடுங்கள்!
வீடுகளில் பயன்படுத்தும் ஏ.சி, திடீரெனத் தீப்பிடிக்கும் சம்பவங்கள் பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறோம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், `மெக்கானிக் மூலமாகத்தான் ஏ.சி மெஷினை முறையாகப் பொருத்துகிறோம். இருந்தும் எதனால் தீப்பிடிக்கிறது?' என்கிற கேள்வி எழுந்துகொண்டே இருக்கும். கேள்வியோடு நின்றுவிடாமல், அதற்கான பதிலையும் தெரிந்து கொண்டால்தான் நமது வீட்டில் அப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழாமல் தடுக்கமுடியும்.
இங்கே, ஏ.சி தீப்பிடிப்பதற்கான காரணம் மற்றும் தீர்வுகளைக் கூறுகிறார், திருவண்ணாமலையைச் சேர்ந்த ஏ.சி மெக்கானிக் சின்னண்ணன்.

``குறைந்த மின்னழுத்தத்தின் (short circuit) காரணமாகத்தான் பெரும்பாலும் ஏ.சி தீப்பிடிக்கிறது. குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முதன்மையானது, சரியான வயரிங் செய்யப்படாததுதான். ஏ.சி மெக்கானிக்கைவிட எலெக்ட்ரீஷியனுக்குத்தான் இதில் அதிக பொறுப்பிருக்கிறது. வீட்டின் ஒவ்வோர் அறையின் தேவைக்குமேற்ப மின் விநியோகம் செய்வதற்குத் தகுந்தபடியாக வயரிங் செய்வது அவசியம். அப்படிச் செய்யப்படாத நிலையில்தான் ஏ.சி தீப்பிடிப்பது போன்ற அசம்பாவிதங்கள் நடக்கின்றன.

சில ஏ.சி நிறுவனங்கள், ஸ்டெபிலைஸர் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்துகின்றன. ஸ்டெபிலைஸரின் வேலை, தேவையான அளவு மின்சாரத்தைச் சீராக அனுப்புவதுதானே தவிர, அது மின்னழுத்தத்தைக் கட்டுப்படுத்தாது. ஒவ்வொரு ஏ.சி-க்குமெனத் தனி சர்க்யூட் வைக்க வேண்டும். 1 டன், 1.5 டன், 2 டன் என ஏ.சி மெஷினுக்கேற்ற மின்சாரத்தை கிலோ வாட் அடிப்படையில் பிரிப்பார்கள். அப்படியாக மணிக்கு இத்தனை கிலோ வாட் மின்சாரத்தைப் பயன்படுத்தும் ஏ.சி-க்கு, போதுமான மின்சாரம் தடையின்றிக் கிடைக்கவேண்டும். இதை எலெக்ட்ரீஷியன்கள் திட்டமிட வேண்டும். இப்போதெல்லாம் வீடு கட்டுகிறவர்கள், முன்கூட்டியே ஏ.சி-க்கும் திட்டமிட்டுத்தான் வயரிங் வேலைகளைச் செய்கிறார்கள் என்பதால், பிரச்னை இல்லை. அப்படித் திட்டமிடப்படாத வீடுகள் என்றால், பிரச்னை வரலாம்.
ஏ.சி-யில் இரு யூனிட்கள் இருக்கின்றன. அறைக்குள் நாம் பொருத்தியிருப்பது எவாப்பரேட்டிங் யூனிட் (Evaporating Unit). வீட்டுக்கு வெளியே வெப்பத்தைக் காற்றாடி மூலம் புறந்தள்ளுவது கண்டன்சேஷன் யூனிட் (Condensation Unit). இவை இரண்டையும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்வது அவசியம். ஏனென்றால், இவற்றில் அழுக்குப் படியும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. குறிப்பாக, கண்டன்சேஷன் யூனிட்டை நாம் வெளியில் வைத்திருப்பதால் கட்டாயம் தூசி படிந்துவிடும். காற்றாடி முழுவதும் தூசி படிந்துவிட்டால் அது இயங்குவதற்கு அதிகப்படியான மின்சாரத்தை இழுக்கும். அதிக மின்னோட்டத்தின் விளைவாக வயர்களில் அதிக வெப்பம் பரவி ஷார்ட் சர்க்யூட் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இதன் விளைவாகவும் ஏ.சி தீப்பிடிக்கிறது. பல்லி, அணில் ஆகியவை எவாப்ரேட்டிங் யூனிட்டுக்குள் செல்வதால் குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டுத் தீப்பிடித்த சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது. தற்போது, இது போன்ற விபத்துகளைத் தடுக்கும்படியாக ஏ.சி தயாரிப்பு நிறுவனங்கள், தங்கள் தயாரிப்பினை மேம்படுத்திவருகின்றன. ஏ.சி-யில் இருக்கும் கேஸ் கசிவதால்தான் தீ விபத்து நிகழ்கிறது என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. அது தவறான நம்பிக்கை.

என்னதான் தீர்வு?
தேவையான அளவு மின்சாரம் கிடைக்கும்படியான வயரிங் முக்கியம். கட்டாயம் 6 மாதங்களுக்கு ஒருமுறை ஏ.சி-யின் இரண்டு யூனிட்களையும் சர்வீஸ் செய்யவேண்டும். ஏ.சி பயன்படுத்துகிற அனைவருமே சர்க்யூட் பிரேக்கர் (Circuit Breaker) வாங்கிப் பயன்படுத்தலாம். வழக்கத்தைவிட அதிகமாக மின்சாரத்தை இழுப்பதன் விளைவாகத்தான் அதிக வெப்பம் ஏற்பட்டு ஷார்ட் சர்க்யூட் ஆகிறது. சர்க்யூட் பிரேக்கர் பொருத்தினால், அளவுக்கு அதிகப்படியாக மின்சாரத்தை இழுக்கும்போது, ஷார்ட் சர்க்யூட் ஏற்படாமல் தடுத்துவிடும்.”
ஏ.சி விபத்தைத் தவிர்ப்பது நம் கையிலும் கவனத்திலும்தான் இருக்கிறது!



















