செய்திகள் :

அட்சய திருதியை: வீட்டில் குபேரநிதி குவிந்திட நாம் செய்யவேண்டிய 6 வழிபாடுகள்... முழுமையான வழிகாட்டல்!

post image

குபேரனுக்கு நிதிக்குவியல் கிடைத்த அட்சய திருதியை!

அட்சய திருதியைக்குப் புராணச் சிறப்புகள் அதிகம் உண்டு. செல்வத்துக்கு அதிபதியான குபேரன், சங்கநிதி- பதுமநிதி எனும் ஐஸ்வரியக் கலசங்களைப் பெற்ற நாள் அட்சயதிருதியை. திருமகளின் எட்டு அவதாரங்களில் ஐஸ்வரிய லட்சுமி மற்றும் தான்யலட்சுமி தோன்றியது இந்தத் திருநாளில்தான்.

கிருத யுகத்தில், ஓர் அட்சய திருதியை தினத்தன்றுதான் பிரம்மா உலகைப் படைத்தார். இந்தப் புண்ணிய நாளில்தான் தசாவதாரங்களுள் ஒன்றான பரசுராம அவதாரம் நிகழ்ந்தது.

வனவாசத்தின்போது கடும் தவம் செய்த தர்மரின் முன்னால் காட்சி தந்த சூரிய பகவான், ‘அன்ன வளம் குன்றாத’ அட்சயப் பாத்திரத்தை அவருக்கு அளித்ததும் இந்த நாளில்தான்.

ஈஸ்வரன் பிட்சாடனர் திருக்கோலத்தில் வந்து அன்னபூரணியான அம்பிகையிடம் பிட்சை பெற்ற திருநாளும் இதுதான். அப்படி ஈஸ்வரனுக்கே அமுதளித்த அன்னபூரணி தேவிக்கும் மகத்தான அட்சய சக்திகள் கூடின. இந்தப் புராணச் சம்பவம் நிகழ்ந்த திருத் தலம் காசியம்பதி.

குபேரன்

ஏழ்மையில் வாடிய கண்ணனின் நண்பர் குசேலர், கொஞ்சம் அவலை எடுத்துத் தனது கிழிந்த மேலாடையில் முடிந்து எடுத்துக் கொண்டு கண்ணனைச் சந்திக்கச் சென்றார். அவரை வரவேற்று உபசரித்த கண்ணன், அந்த அவலில் ஒருபிடி எடுத்துச் சாப்பிட்டபடி, ‘‘அட்சயம்!’’ என்றார். உடனே, குசேலரின் குடிசை, மாளிகை ஆனது; குசேலர் ‘குபேர சம்பத்து’ பெற்றார். இங்ஙனம் குசேலருக்கு, கண்ணன் அருள்புரிந்தது ஓர் அட்சயத் திருதியை திருநாள் ஆகும்.

ஏழைப் பெண்ணின் வறுமையைப் போக்கிட, ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி, மகாலட்சுமி அருளால் பொன்மழை பெய்வித்த அற்புதம் நிகழ்ந்ததும் இந்த நாளில்தான்.

வேத வியாசர், விநாயகரின் துணையுடன் மகாபாரதம் எழுதத் துவங்கியதும் இந்தத் திருநாளில்தான். பரசுராமர் அவதரித்தது, பகீரதன் பிரயத்தனத்தால் கங்கை பூமிக்கு வந்தது, அரக்கர்களாகிய சும்ப- நிசும்பனை அம்பாள் வதம் செய்தது ஆகிய புராணச் சம்பவங்களும் அட்சயதிருதியை அன்றுதான் நிகழ்ந்தன.

ஜைன மதத்தைச் சேர்ந்த முதல் தீர்த்தங்கர் ரிஷபதேவ சுவாமி, தன் ஆறு மாத உபவாசம் முடிந்து, உணவு தேடி அலைந்து, ஏழு மாதமும் ஒன்பது நாளும் ஆனபிறகுதான் அவருக்கு உணவு கிடைத்ததாம். அவர் முதன்முதலாகக் கரும்புச்சாறு குடித்து விரதத்தைப் பூர்த்திசெய்தது இந்தத் திருநாளில்தான்.

இந்த நாளில் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய வழிபாடுகள் - நியதிகள் குறித்து ஞானநூல்கள் வழிகாட்டியுள்ளன.

அட்சயதிருதியை அன்று கட்டாயம் செய்யவேண்டியவை

1. புண்ணிய தீர்த்தமாடலும் தானமும்

மிகவும் புண்ணியமான அட்சய திருதியை நாளில் கங்கை முதலான புண்ணிய நதிகளில்-தீர்த்தங்களில் நீராடுவதும் தானம் வழங்குவதும் மிகவும் சிறப்பாகும்.

மகோதயம் என்ற நாட்டில் வியாபாரி ஒருவர் இருந்தார். நல்ல குணவான். தர்மவான். அவர் ஒவ்வொரு வருடமும் அட்சய திருதி யையின்போது எல்லாவித தானங்களையும் செய்து வந்தார். கங்கையில் நீராடி பிதுர்க்களுக்கு தர்ப்பணமும் செய்தார். அதனால் மறு பிறவியில் அரசராகப் பிறந்தார். அதன் பின்னரும் அட்சய திருதியை தர்மங்களை விடாது கடைப்பிடித்து அழியாத வைகுண்டத்தை அடைந்தாராம்.

என்னென்ன தானம் வழங்கலாம்?: அரிசி, கோதுமை முதலான உணவு தானியங்கள், உப்பு, சத்து மாவு, பால், மோர், தயிர், பசு, தங்கம், பூமி, பானகம், நீர்மோர், விசிறி, செருப்பு, குடை போன்ற வற்றை தானம் தருவது - அழியாத பலனைக் கொடுக்கும்.

தயிர்சாதம் தானம் செய்தால் - ஆயுள் பெருகும். இனிப்புப் பொருட்கள் தானம் தந்தால் - திருமணத் தடை அகலும். உணவு தானியங்களை தானம் செய்தால் - விபத்துகள், அகால மரணம் போன்றவை சம்பவிக்காது. கால்நடைகளுக்கு தீவனம் அளித்தால் வாழ்வு வளம் பெறும்.

பெருமாள்

2. முன்னோர் வழிபாடு

அன்றைய தினம் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்யவேண்டும். நாம் பித்ருக்களுக்கு செய்யும் தர்ப்பணத்தை அவர்களிடம் சேர்ப்பவர் சூரிய பகவான். அட்சய திருதியை திருநாளில் இவர் மிகுந்த ஒளியுடன் பிரகாசிப்பார். எனவே, இந்த நாளில் செய்யப் படும் பித்ரு கடன்கள், முதல் தலைமுறை பித்ருக்களுக்கு மட்டுமன்றி, அதற்கும் முந்தைய தலைமுறையினருக்கும் போய்ச் சேருமாம்!

3. மகாவிஷ்ணுவுக்கு நாணயம் வைத்து வழிபாடு

இந்த நன்னாளில் சிவ-பார்வதி, மந் நாராயணன், லட்சுமி ஆகியோரைப் பூஜித்தால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும். அட்சயதிருதியை அன்று சிலர் தங்கள் இல்லங்களில் மகா விஷ்ணுவை நினைத்து ஒரு பூஜை செய்வார்கள். அதாவது, ஒரு படியில் (நாழியில்) அரிசி நிரப்பி அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு, புதிய வஸ்திரம் சுற்றி அலங்கரித்து, உச்சியில் தங்கக் காசு ஒன்றை வைத்து, வாசனை மலர்களால் அர்ச்சித்து பூஜிப்பார்கள். இதனால், அந்த ஆண்டு முழுவதும் இல்லத்தில் எந்த விதக் குறையுமின்றி தங்கம் கொழிக்கும் என்பது ஐதீகம்.

4. கண்ணன் வழிபாடு

இந்த நாளில் கண்ணன் திருநாமங்களைச் சொல்லி வணங்குவ தால், நம் வீட்டில் சுபிட்சம் பெருகும். அஸ்தினாபுரம் அவையில் திரெளபதி துகிலுரியப்பட்டாள்.

அப்போது அவள் `சங்கும் சக்கரமும் ஏந்தியவனே, துவாரகாவில் நிலையாக வசிப்பவனே, கோவிந்தா, தாமரைக் கண்களை உடையவனே காப்பாற்று... சரணடைந்தேன் உன்னையே’ என்று பொருள்படும் ஸ்லோகத்தைச் சொல்லி கண்ணனை வழிபட்டாள்.

கண்ணனின் அருளால் மானம் காக்கப்பெற்றாள். இந்த நிகழ்வு நிகழ்ந்த தினம் அட்சய திரிதியை. அன்று, கண்ணனின் நாமத்தை உச்சரித்து வழிபாடு செய்தால் நமது இல்லத்திலும் கண்ணனின் திருவருள் பெருகும்.

கோவிந்தா போற்றி

கோபாலா போற்றி

அச்சுதா போற்றி

வாசுதேவா போற்றி

பார்த்த சாரதியே போற்றி

மாதவா போற்றி

ஶ்ரீதரா போற்றி

ஜனார்த்தனா போற்றி - என்று போற்றிச் சொல்லி துளசியார் அர்ச்சித்து வழிபடுவது விசேஷம்.

கௌரி விரதம்

5. புதுக் கணக்கு - புது முயற்சிகள் செய்யலாம்

அட்சயம் என்றால், ‘வளருதல்’ என்று பொருள். இந்த நாளில் எந்தப் பொருள் வாங்கினாலும், புதுமுயற்சிகளைத் தொடங்கினாலும் சிறப்புதான். அன்று புதுக்கணக்கு ஆரம்பம், கல்வித் துவக்கம், விரதம், தெய்வ வழிபாடு ஆகியவற்றை மேற்கொள்வது உத்தமம்.

6. கெளரி வழிபாடு

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெண்கள் அட்சய திருதியை அன்று சுவர்ண கௌரி என்ற விரதம் கடைப் பிடிக்கிறார்கள்.அன்று, கௌரி எனப்படும் பார்வதி தேவி தனது பிறந்த வீட்டுக்கு வருவ தாகவும், மறு நாள் அன்னைக்குப் பாதுகாப்பாக விநாயகர் வருவதாகவும் ஐதிகம். திருமணமான பெண்கள், இந்த நாளில் சுமங்கலி பூஜை செய்து, மற்றவர்களுக்கு ஆடை வழங்குவது வழக்கம்.

`48 நாள்கள் படித்தால் நினைத்தது நடக்கும்' வாசகியின் வாழ்வை மாற்றிய குமாரஸ்தவம் துதிப்பாடல்!

காஞ்சி குமரக்கோட்டம் கோயில்ல பெரியவர் ஒருவர் தந்த சின்ன வழிபாட்டுப் புத்தகமும் அதிலிருந்த துதிப்பாட்டும் என் வாழ்க்கையையே மாற்றின! கடந்த வருடம் என் வாழ்வில் நிகழ்ந்த அந்த அற்புதச் சம்பவத்தை வாசக நண்பர... மேலும் பார்க்க