SRH Vs CSK:`So Close Yet So Far' என்ற ரீதியில் ஒரு வெற்றி வாய்ப்பைத் தாரை வார்த்திருக்கிறது சிஎஸ்கே
இரு அணிகளும் ஒரே புள்ளிகளில் இருந்ததால் சிஎஸ்கே வெற்றி பெறவும் புள்ளிப் பட்டியலில் ஏணி போட்டு மேலே ஏறவும் வாய்ப்பிருக்கிறது என ரசிகர்கள் நினைக்க, "வாய்ப்பில்ல ராஜா" டெம்ப்ளேட்டைக் கொண்டு பாம்பாக ரசிகர்களைக் கொத்தி கீழே இறக்கியிருக்கிறது சிஎஸ்கே.
`எதிர்பார்த்த விபத்து' போல்தான் இருந்தது சன்ரைசர்ஸின் பவர்பிளே. இடக்கை ஆட்டக்காரர்களுக்கான மேட்ச் அப்பாக (பார்ட் டைம்) ஆஃப் ஸ்பின்னரான மேத்யூ ஷார்டை என்ன தான் நினைச்சு எடுத்துட்டு வந்தாங்க தெரியல.

இரு ஓவர்கள்ல 13 ரன்கள் கொடுத்ததோட மேத்யூவுக்கு "தேங்க்யூ" சொல்லி அனுப்பாம பவர்பிளேல எக்ஸ்ட்ரா ஒரு ஓவர் கொடுத்ததற்கான பலன் 25 ரன்களாக சிஎஸ்கே தலைலயும் விழுந்துச்சு, 15 பந்துகள் அதிரடி அரைசதமா அபிஷேக் கணக்கிலும் சேர்ந்துச்சு.
இறுதியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்விக்கு முக்கிய காரணமாகவும் மாறுச்சு. முகேஷ் சௌத்ரிய ஹெட் சூறையாட பதிலுக்கு அவர் சூடாகி ஹெட் தலைய உருளவிட்டு, இஷானையும் இலவச இணைப்பா அனுப்பி வச்சது மட்டும்தான் பவர்பிளேல ஒரே ஆறுதல். பவர்பிளேலயே 75 ரன்கள்னு சிஎஸ்கேயை அவசர சிகிச்சை பிரிவுக்கு சன்ரைசர்ஸ் அனுப்பிடுச்சு.
பவர்பிளே தவறுகளை ஓவர்ரைட் பண்ற வேலைய ஓவர்டன் பண்ணாரு. கூட்டணி கட்சிகளோட ஓட்டுகளை எல்லாம் தன் பக்கம் இழுத்துக்குற சுயேச்சை வேட்பாளர் மாதிரி ஓவர்டன் எல்லா கவனத்தையும் தன் பக்கம் வாரிக்கிட்டாரு. 'ஓவர்'டன் னு பேரு வச்சதாலயோ என்னவோ இடைச்சொருகல் மாதிரி ஒற்றை ஓவர்களாக தரப்பட்ட மூன்று ஓவர்கள்லயும் ஓவருக்கொன்றாக மூன்று விக்கெட்டுகள்.
பெல்டர்னு விவரிக்கப்பட்ட களம் ஓவர்கள் நகர நகர கொஞ்சமா ஸ்லோ ஆக அதோட பல்ஸ் பார்த்த டாக்டர் மாதிரி பந்துவீச ஆரம்பிச்சாரு ஓவர்டன். மணிக்கு 140 கிமீ வேகத்துல முன்னேறிய பந்துகள், கடினமான லெந்த்களில் வீசப்பட்டு அடிக்க முடியாத மாதிரி பயம்காட்டுச்சு. சென்னை சூப்பர் கிங்ஸ கம்பேக் சூப்பர் கிங்ஸா (7 - 15 ஓவர்கள்ல வெறும் 79 ரன்கள்) மாத்துனதுக்கு முக்கிய காரணம் ஓவர்டன்னோட துல்லியமான பந்துவீச்சும் தொடர் இடைவெளில அவர் எடுத்துத் தந்த விக்கெட்டுகளும்தான்.

இறுதி நான்கு ஓவர்கள்ல அன்ஸுல் கம்போஜ்தான் ஹீரோ. அதுல ரெண்டு ஓவர்கள் வீசி ஒன்பது ரன்கள் மட்டுமே கொடுத்து மூணு விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெறும் 34 ரன்களை மட்டுமே அந்த நான்கு ஓவர்கள்ல சன்ரைசர்ஸ் அடிக்கக் காரணமானாரு. இது எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்ததுன்னா இம்பேக்ட் பிளேயராக லிவிங்ஸ்டனை களமிறக்கி ஒரு பௌலருக்கான ஸ்லாட்டை சன்ரைசர்ஸ் வீணடித்துக் கொள்ளுமளவு எடுத்துச் சென்றது.
பவர்பிளேயில் 12.5 என்று இருந்த ரன்ரேட்டை இறுதியில் 9.7-ல் கொண்டு வந்து நிறுத்தியதும், 200-ஐ எட்ட விடாமல் சன்ரைசர்ஸை தடுத்ததுமே தடம் புரளும் நிலையிலிருந்து சிஎஸ்கே மீண்டு வந்து தடம் பதித்ததற்கான சாட்சி. குறிப்பாக அழகிய யார்க்கர்களால் அதற்கான வாழ்த்துப் பாவும் பாடியிருந்தது சிஎஸ்கே.
கெய்க்வாட் போட்டிக்கு முன்பாக, "எங்களது பேட்டிங்கும் பௌலிங்கும் நன்றாக உள்ளது, ஃபீல்டிங்தான் 50:50 ஆக உள்ளது", என்று கூறியிருந்தார். சிவம் துபே விட்ட கேட்சுகளை மட்டுமே மனதில் வைத்து சொன்னால் அது 10:90 என தலைகீழ் விகிதமாக இருந்திருக்கும். பந்தும் வீசுவதில்லை, ஃபீல்டிங்கும் சிறப்பாக இல்லை எனும் பட்சத்தில் அவரை சப்ஸ்ட்யூட்டாக வெளியே வைக்கும் முடிவை சிஎஸ்கே நிஜமாகவே பரிசீலிக்க வேண்டும்.
சிஎஸ்கே இறுதியில் இறுக்கிப்பிடித்த போதும் கிளாசிக்கான கிளாசனின் இன்னிங்க்ஸ் ரன்கள் வந்து கொண்டே இருப்பதை இறுதி வரை உறுதி செய்தது. 195 எட்டக்கூடிய இலக்கு என்று தோன்றினாலும் அனுமானித்ததைப் போல பக்கா பேட்டிங் பிட்சும் இல்லை, சன்ரைசர்ஸ் பந்துவீச்சும் சோடை போகாது, பனிப்பொழிவும் ஸ்பாய்லர் கேம் ஆடும் என்பது இரண்டாவது பாதியை சுவாரஸ்யமாக்கியது.

சேட்டன் வழக்கம்போல் "இன்றாவது கொஞ்ச நேரம் இருந்தால் என்ன?" என ரசிகர்களைப் பாட வைக்காத குறையாக ஆரம்பத்திலேயே ஆட்டமிழக்க, ஆயுஷ் மாத்ரேயின் கேட்ச் மட்டும் ஆரம்பத்திலேயே விடப்படாமல் இருந்திருந்தால் சிஎஸ்கேவுக்கு முன்னுரையே முடிவுரை ஆகியிருக்கும். அது நடக்காமல் போனதால் 3 ஓவர்களிலேயே 47 ரன்களை அடித்து தனது ரசிகர்களை ஒருமுறை கிள்ளிப் பார்த்துக்கொள்ள வைத்தனர்.
பக்கத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ரசிகர்களையும் சேர்த்தே கிள்ளும்படி சன்ரைசர்ஸின் பவர்பிளேயையே தூக்கிச் சாப்பிடுமளவு பவர்பிளேயில் 76 ரன்களும் வந்தாகிவிட்டது. அப்படியே நீடித்திருந்தால் 84 பந்துகளில் 119 தேவை என கூப்பிடும் தூரத்தில் தான் இலக்கு கட்டில் போட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. ஒருவேளை ஆயுஸ் மாத்ரேவுக்கு காயம் ஏற்பட்டு அவர் ஓட முடியாது தடுமாறாமல் இருந்திருந்தால், அவரது விக்கெட் விழாமல் இருந்திருந்தால் இலக்கு இன்னமும் நெருக்கமாக சிஎஸ்கே கூடாரத்தில் முகாமிட்டிருக்கும்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிவால்ட் ப்ரூவிஸ் ஷிவாங்க் குமாரின் கூக்ளிக்கு பலியானது கூட நடக்கக்கூடியது தான், புரிந்துகொளளக்கூடியது தான். ஆனால் ஓப்பனிங் இறங்கி பழக்கப்பட்ட ஷார்ட்டை பின்வரிசையில் இறக்கி வெள்ளோட்டம் பார்ப்பது, ஸ்பின் பந்துகளை தெறிக்க விடும் சிவம் துபேவை சாவகாசமாக அனுப்புவது என "ரோல் கிளாரிட்டியின் விலை என்ன?!" என்ற குழப்பம் ஒருசில சந்தர்ப்பங்களில் போட்டியின் முடிவையே மாற்றி விடக்கூடியது.

சிஎஸ்கே விஷயத்திலும் இதுதான் நடந்தேறியது. தோனியால் தற்போது ஆக்ரமிக்கப்படாத ஃபினிஷர் ரோல் சிஎஸ்கே ரசிகர்களை கண்கள் வேர்க்க வைக்கிறது. சன்ரைசர்ஸின் பந்துவீச்சும் பவர்பிளேவுக்குப் பின் மேம்பட்டிருந்தது. 15 வொய்டுகள் கொடுக்கப்பட்டதில் மட்டுமே பிசிறு தட்டினாலும் ஏசன் மலிங்கா, ஷிவாங் குமார், நித்தீஷ் உள்ளிட்ட எல்லோருமே தங்களது பங்கினை சிறப்பாக வகித்திருந்தனர்.
பெருங்குற்றம் என கைகாட்டும்படி எந்த ஓவரையும் இவர்கள் வீசவில்லை. 10 பந்துகளுக்கு அதிகமாக சந்தித்த சிஎஸ்கே பேட்ஸ்மேன்களில் ஆயுஷ் மாத்ரேவைத் தவிர வேறு யாருடைய ஸ்ட்ரைக்ரேட்டும் 150-ஐ கூட தாண்டவில்லை என்பதே சொல்லும் Intent என்ற வார்த்தையை சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் தங்களது அகராதியில் இருந்து நீக்கி விட்டார்கள் என்பதனை...

ரசிகர்களின் தற்போதைய கவலை இந்தப் போட்டியில் தோற்றது மட்டுமல்ல; ஆயுஷின் காயம்தான். அவர் ஆட்டமிழந்த பின் தேக்க நிலைக்குத் தள்ளப்பட்டது சிஎஸ்கேயின் இன்னிங்க்ஸ். ஒரு போட்டிக்கே இப்படி என்றால் காயம் காரணமாக அவரும் கலீல் போல் தொடரிலிருந்து விலகும் நிலை ஏற்பட்டால் சிஎஸ்கேயின் நிலை என்னவாகும் என்ற பீதி தான் அவர்களை தற்போது சூழ்ந்துள்ளது.



















