செய்திகள் :

`AI தனித்து இயங்கும் துறையல்ல' - AI படித்தவர்களுக்கு வேலை கிடைக்குமா? | Detailed Analysis

post image

2020-ல் ஆரம்பித்தது இந்த AI ஃபீவர். எல்லா மாணவர்களும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பக்கமிருந்து AI பக்கம் திரும்பினார்கள். 2022-ல் இது உச்சமானது. அந்தாண்டு கவுன்சிலிங்கிற்கு மொத்தம் 2,11,115 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில் ஐந்தில் ஒரு மாணவர் AI மற்றும் அது சார்ந்த துறைகளைத் தேர்வு செய்திருந்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமானது. கவுன்சிலிங்கில் கிடைக்கவில்லை என 15 லட்சம் வரை டொனேஷன் கொடுத்து மேனேஜ்மெண்ட் கோட்டாவில் AI  படிப்பில் சேர்ந்தவர்கள் அதிகம்.

2022-ல் AI படிப்பில் சேர்ந்தவர்கள் பொறியாளர்களாகி இந்தாண்டு வெளியே வருகிறார்கள். இவர்களுக்கான வேலை வாய்ப்பு எப்படியிருக்கப்போகிறது..?

"ஏ.ஐ என்பது வளர்ந்து வரும் தொழில்நுட்பம். அது ஒரு துறையல்ல. நாளுக்கு நாள் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கிறது. ஆனால் நம் பொறியியல் கல்லூரிகள், வெறும் பாடப்புத்தகங்களை மட்டும் கற்றுக்கொடுத்து மாணவர்களை வெளியே அனுப்பியிருக்கின்றன. வேலைக்கான தேடல் அவர்களுக்கு மிகவும் சிரமமானதாகவே இருக்கும்" என்கிறார் வேலை மற்றும் கல்வி ஆலோசர் ஸ்ரீனிவாஸ் சம்பந்தம்.

ஸ்ரீனிவாஸ் சம்பந்தம்

"மற்ற பிரிவுகளை படித்தவர்களுக்கு  ஐ.டி கம்பெனிகள் தான் ஆபத்பாந்தவனாக இருக்கின்றன. அதுதான் AI படித்தவர்களுக்கும். ஆனால் இன்றைக்கு ஐ.டி துறையே மிகவும் சிக்கலான சூழலில் இருக்கிறது. நான் இந்தியா முழுவதும் சுற்றுகிறவன், பல நிறுவனங்களுக்குச் செல்கிறேன். முன்னணியில் இருக்கிற நான்கைந்து நிறுவனங்கள் தவிர பெரும்பாலானவை தேர்வு செய்த மாணவர்களுக்கே வேலை தர முடியாமல் தடுமாறுகின்றன. அதேபோல கல்வி நிறுவனங்களுக்கு நல்ல நிறுவனங்கள் கேம்பஸ் இண்டர்வியூ வருவது கணிசமாக குறைந்து விட்டது.


இன்னொரு பக்கம், AI  தொழில்நுட்பத்தில்  ஏற்பட்டுள்ள நவீன வளர்ச்சிக்கு ஏற்ப நம் ஆசிரியர்களின் திறன் வளர்க்கப்படவில்லை. பொதுவாகவே இந்தியாவில் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளே இல்லை. கடந்தாண்டு எம்.இ முடித்தவர்கள் இந்தாண்டு பி.இ மாணவர்களுக்கு வகுப்பெடுப்பார்கள். அதிலும் AI போன்ற நவீன தொழில்நுட்பங்களில் அவர்களுக்குப் போதிய தெளிவோ பயிற்சியோ இல்லை.

பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ்  ஆசிரியர்கள் தான் AI  பாடத்தையும் நடத்துகிறார்கள். அவர்கள் AI  பாடத்தை தங்கள் படிப்பில் ஒரு பேப்பராக படித்திருப்பார்கள், அவ்வளவு தான். அதைத்தாண்டி அதில் ஆய்வோ, ப்ராஜெக்டோ செய்து பயிற்சி பெற்றவர்கள் அல்ல. அவர்களால் பாடப்புத்தகத்தில் உள்ளதை படித்துக்காட்ட முடியுமே ஒழிய, மாணவர்களின் திறனை மேம்படுத்த முடியாது. இன்று, AI  என்றாலே சாட்ஜிபிடி, ஜெமினி தான். அதைத்தாண்டி பெரியளவில் மாணவர்களுக்கு கற்றல் இல்லை.


நம் மாணவர்களுமேகூட ஒரு டிகிரி வேண்டும் என்பதற்காகவும் வேலைக்காகவும் தான் படிக்கிறார்கள். ப்ராஜெக்ட் செய்து தோல்விடயைந்து, வெற்றியடைந்து ஒரு விஷயத்தை நடைமுறையோடு பொருத்திப் பார்த்துப் புரிந்துகொள்ளும் ஆர்வம் பெரும்பாலான மாணவர்களுக்கு இல்லை. அதனால் பாடப்புத்தகத்தில் இருப்பதை மனப்பாடம் செய்து எழுதுகிறார்கள். இன்று படித்து வெளியே வரும் மாணவர்களில் 10% பேர் நேரடியாக AI  சார்ந்த வேலைகளுக்குள் போனாலே பெரிய விஷயம் தான்..." என்கிறார்   ஸ்ரீனிவாஸ் சம்பந்தம்.

தமிழகத்தில் 21 வகையான பி.காம் படிப்புகள் இருக்கின்றன. பேங்கிங், அட்வர்டைசிங், மார்க்கெட்டிங், இன்சூரன்ஸ் என பொதுவான பி.காம் படிப்பில் இருந்த பிரிவுகளை மட்டுமே எடுத்து தனிதனிப் படிப்பாக மாற்றினார்கள்.  பிரிவுகள் வாரியாக திறன்படைத்தவர்களை உருவாக்குகிறோம் என்று சொல்லித்தான் இந்தப் படிப்புகளை உருவாக்கினார்கள். ஆனால் உண்மையான காரணம் அதுவல்ல, பிகாம் படிப்பு மீது மக்களுக்கு பெரிய ஈர்ப்பு இருக்கிறது. ஒரு கல்லூரியில் அந்தப் படிப்பில் 60 மாணவர்களைத் தான் சேர்க்க முடியும். இப்படித் தனித்தனி பிரிவுகளை உருவாக்கினால் ஒவ்வொரு பிரிவிலும் 60 மாணவர்களைச் சேர்த்து காசு பார்க்கலாம். அதுதான் இப்படி தனித்தனி பிரிவுகள் உருவாக்கப்பட்டதன் உண்மையான நோக்கம்.

இப்படி தனித்தனிப் பிரிவுகளைப் படிக்கும்போது மாணவர்கள் தங்கள் வேலை வாய்ப்பை சுருக்கிக்கொள்கிறார்கள். பிகாம் அட்வர்டைசிங் என்றால் அட்வர்டைசிங் துறையைத் தாண்டி வேறெதிலும் அதைவைத்து வேலை வாய்ப்பைப் பெறமுடியாது. பொதுவாக இளநிலையில் ஜென்ரல் பி.காம் படித்து, முதுநிலையிலோ, டிப்ளமோவிலோ இதுமாதிரி சிறப்புப் பிரிவுகளை எடுத்துப் படிப்பதுதான் பாதுகாப்பானது. ஆனால் கல்வி நிறுவனங்கள்,  புதிது புதிதாக செய்திகளைக் கட்டமைத்து,  அதற்கான பாதையை அடைத்துவிடுகின்றன. இதுதான் AI  படிப்பிலும் நடந்திருக்கிறது.

பட்டம்


"AI என்பது சாட்ஜிபிடி, ஜெமினி,  க்ராக் மட்டுமல்ல. அது தனித்து இயங்கும் துறையல்ல. அது கம்ப்யூட்டர் சயின்ஸின் ஒரு கூறு. AI-ஐ மட்டுமே சிறப்பு நிலையில் எடுத்துப் படித்தவர்களுக்கான என்ட்ரி லெவல் வேலைகள் இன்னும் இந்தியாவில் அதிகரிக்கவில்லை. அதனால் இது கொஞ்சம் கஷ்டகாலம் தான். ஏ.ஐ முடித்து கடந்தாண்டு அப்பாய்ண்மெண்ட் வாங்கியவர்களைக்கூட இன்னும் நிறுவனங்கள் அழைக்கவில்லை என்பதுதான் எதார்த்தம்..." என்கிறார்  கல்வியாளர் ரமேஷ் பிரபா.

"இளநிலையில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு  AI,   Data Science-ல்  முதுநிலையோ டிப்ளமோவோ படிக்கலாம். அதுதான் சரியான வழி. ஆனால் பொறியியல் கல்லூரிகள், தங்கள் வாழ்வாதாரத்துக்காக மக்களை தவறான பாதைக்குத் திசைதிருப்புகின்றன. அதற்கு ஏஐசிடிஇ போன்ற அமைப்புகளும் துணைபோகின்றன.

ஐந்தாறு வருடங்களுக்கு முன்புவரை ஒரு பொறியியல் கல்லூரி தொடங்கவேண்டுமென்றால், சிவில், இ.சி.இ, மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற படிப்புகள் இருக்கவேண்டும் என்பது ஏஐசிடிஇ விதி. ஆனால் 2025-26 கல்வியாண்டில்  6 பிரிவுகளும் கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகளை மட்டுமே எடுத்துக்கொள்ளலாம் என்று ஏஐசிடிஇ விதிமுறையை மாற்றிவிட்டது. சிவில், மெக்கானிக்கல், இசிஇ இல்லாமலே இன்று இன்ஜினியரிங் கல்லூரிகள் நடத்தலாம். மேலும் கம்ப்யூட்டர் பிரிவுகளில் இடங்களை அதிகப்படுத்துவதற்கான நடைமுறைகளையும் எளிமைப்படுத்தி விட்டார்கள்.

ரமேஷ் பிரபா

 

கம்ப்யூட்டர் சயின்ஸ் என்று பெயர் வைத்தால் 60 மாணவர்களை மட்டும்தான் சேர்க்கமுடியும்.  Artificial Intelligence and Data Science என்று பெயரை வைத்து 60 அட்மிஷன்,  AI  Machine Learning  என்று பெயரை வைத்து 60 அடிமிஷன், AI Cyber Security என்று பெயரை வைத்து 60 அட்மிஷன், AI Internet of Things  என்று பெயரைவைத்து 60 அட்மிஷன், Computer Science and Business Systems என்று பெயரை வைத்து 60  அட்மிஷன்
என அட்மிஷனைக் குவித்து காசு பார்க்கிறார்கள். இந்தப் பெயர்களில் மயங்கி பெற்றோரும் தங்கள் பிள்ளைகளைக் கொண்டுபோய் தள்ளுகிறார்கள். ஏஐசிடிஇயும் இதற்கு துணைபோகிறது..." என்கிறார் ரமேஷ் பிரபா.



புதிது புதிதாக எத்தனை பெயர் வைத்தாலும் எல்லோருக்கும் பாடம் நடத்தப்போவது என்னவோ கம்ப்யூட்டர் சயின்ஸ்க்கான ஆசிரியர்கள் தான். ஏற்கெனவே பொறியியல் கல்லூரிகளில் தகுதியான ஆசிரியர்கள் இல்லை என்று புகார் இருக்கிறது. அறப்போர் இயக்கம், ஒரு பேராசிரியர் பல கல்லூரிகளின் பே ரோலில் இருந்ததை அம்பலப்படுத்தியது. படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக களத்துக்கு வரும்போதுதான் மாணவர்களும் பெற்றோரும் எதார்த்த நிலையை உணர்கிறார்கள். அதற்குள் காலம் கடந்து விடுகிறது.

"இன்ஜினியரிங் படிப்பைப் பொறுத்தவரை இளநிலையில் கோர் படிப்புகள் தான் பாதுகாப்பானவை. என்றைக்குமே தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி குறையப்போவதில்லை. தகுதி வாய்ந்த பொறியாளர்கள் ஏராளம் அங்கே தேவையிருக்கிறது. உலகெங்குமே உள்கட்டமைப்பு பெருமளவு வளர்ந்துகொண்டே தான் இருக்கப்போகிறது. தரமாக சிவில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு உத்தரவாதமான வேலைவாய்ப்பு இருக்கிறது. இந்தத் துறைகள் எல்லாம் வளர்ந்துகொண்டே தான் இருக்கப்போகின்றன. எல்லாவற்றையும் கம்ப்யூட்டரோடும் AI-யோடும் ஒப்பிட்டு மாயையில் சிக்கி விடுகிறார்கள். அதனால் தான் AI படிப்புகளில் பல லட்சங்களை நன்கொடையாகத் தந்தும் சேரத் துடிக்கிறார்கள். இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு இது நல்வாய்ப்பாக அமைந்து விடுகிறது.

எதார்த்தம் என்னவென்றால், AI தொழில்நுட்பத்தைத் தவிர்க்க முடியாது. அது எல்லாவற்றிலும் இருக்கிறது. ஆனால் அது தனித்து இயங்கும் துறையல்ல. AI இன் மெக்கானிக்கல், AI இன் ஆட்டோமொபைல். AI இன் ஏரோநாட்டிக்கல், AI இன் சிவில் என்றுதான் இருக்கமுடியுமே தவிர AI என்று ஒன்று தனித்து இருக்கமுடியாது.

ஒரு கார் தயாரிப்பில் AI பயன்படும். ஒரு கட்டிடத்தை எழுப்புவதில் ஏ.ஐ பயன்படும். அதனால் இதுபோன்ற கோர் படிப்புகளை முடித்துவிட்டு AI-ஐ சிறப்புப் படிப்பாக படிக்கலாமே தவிர, அதையே பிரதானமாகப் படிக்கும்போது வேலை வாய்ப்பில் பிரச்னை வரும். AI என்பது ஒரு டூல். அது ஒரு துறை கிடையாது. இதைப் புரிந்துகொள்ள வேண்டும். இன்னும் ஒரு சில ஆண்டுகளிலேயே AI மீதான மோகம் குறைந்துவிடும் என்பது என் புரிதல்..." என்கிறார் ரமேஷ் பிரபா.  

சைபர் செக்யூரிட்டி நிபுணரும் எழுத்தாளருமான ஹரிஹர சுதனின் கருத்தும் அதுவாகவே இருக்கிறது.

"AI படிப்புக்கான முழுமையான உள்கட்டமைப்பு அப்படிப்பை வழங்கும் பெரும்பாலான கல்லூரிகளில் இல்லை. சில கல்லூரிகள் சிறப்பாகவே அதை செய்கின்றன. ஒரு கல்லூரி ஃபேஸ்புக் நிறுவனத்தோடு சேர்ந்து  AI Simulator Lab ஒன்றை உருவாக்கியிருந்தது. அப்படியான வாய்ப்புகள் மாணவர்களுக்கு புதிய தேடலை உருவாக்கும். பொறியியல் படிப்பு என்பது பாடப்புத்தகங்களைப் படித்து அறிவை வளர்த்துக்கொள்ளும் படிப்பல்ல. அதைத்தாண்டிய தேடலும் செயல் பயிற்சிகளும் தேவை. ஆனால் இப்போது வரைக்குமே  AI படித்த மாணவர்கள் எந்த செய்முறைப் பயிற்சியும் இல்லாமல்தான் வருகிறார்கள்.  தமிழகத்தில் பெரும்பாலான கல்லூரிகளில் பெயரளவில்தான் ஏ.ஐ படிப்புகளை வைத்திருக்கிறார்கள். மாணவர்களும் வழக்கமான ஒரு படிப்பாகவே இகை அணுகுகிறார்கள்.

அரசு, இந்த விஷயத்தை சீரியஸாக அணுக வேண்டும். மாணவர்களுக்கு நிறைய ஹேக்கத்தான்களை நடத்தவேண்டும். ஏ.ஐ இந்தியா அமைப்புக்கு 10,000 கோடிக்கு மேல் ஒதுக்கியிருக்கிறார்கள். அதை மாணவர்களோடு இணைக்க வேண்டும். முக்கியமான கல்லூரி ஆசிரியர்களுக்கு முழுமையான பயிற்சி தேவை. அவர்களை  ஆராய்ச்சிப்பணிகளிலும் ஈடுபடுத்தவேண்டும். அதற்கான நிதி ஒதுக்கீடுகளை அரசு செய்யவேண்டும். பொறியியல் கல்லூரிகள் முழுமையாக தணிக்கை செய்யப்பட வேண்டும்..." என்கிறார் ஹரிஹரசுதன்.

AI மீதான மோகம் ஏற்படுத்திய இன்னொரு மோசமான விளைவு, பல கல்லூரிகளில் "மாணவர்கள் சேரவில்லை" என்று மெக்கானிக்கல், சிவில் படிப்புகளை மூடிக்கொண்டிருக்கிறார்கள். மிக விரைவிலேயே அதன் விளைவுகளை நாடு எதிர்கொள்ளும் என்கிறார்கள் கல்வியாளர்கள். அரசு இது தொடர்பான விரிவான விழிப்புணர்வை உருவாக்கவேண்டும்!