BB Tamil 9: "எதுக்கு என் மனைவிய இங்க இழுக்குற திவ்யா"- ஆக்ரோசமான விக்ரம்
BB Tamil 9 Day 83: அமித் எவிக்ஷன் - பாரு, சான்ட்ராவின் நட்புதான் காரணமா?
‘டேமேஜ் கண்ட்ரோல்’ செய்கிறேன் பேர்வழி என்று மேலும் தன்னை எக்ஸ்போஸ் செய்து கொள்வதில் பாரு திறமைசாலியாக இருக்கிறார். இந்த எபிசோடில் நிகழ்ந்ததும் அதுவே.
பாரு வேலை செய்யாமல் டபாய்க்கிறார் என்பது ஐநா சபை வரைக்கும் தெரிந்த விஷயம். என்றாலும் அதை பூசி மெழுகி ஏன் இன்னமும் பெயரை கூடுதலாக கெடுத்துக் கொள்ள வேண்டும்?!

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 83
‘இந்தக் கட்டுரைத் தொடரில் பெரும்பாலும் பாருவைப் பற்றித்தான் இருக்கிறது. ஏன் தலைப்பிலும் கூட பாருவின் பெயர்தான் அதிகமாக வருகிறது, இப்போதாவது புரிகிறதா, அவர்தான் இந்த சீசனின் முக்கியமான போட்டியாளர்.. அவரை மையமாக வைத்துதான் இந்த சீசன் நடக்கிறது. அவரை வைத்துதான் பிக் பாஸ் விமர்சனங்களும் நடக்கின்றன என்பது தெரிகிறதா?’ என்று பாருவின் ரசிகர்கள் கேட்கிறார்கள்.
யெஸ். அது உண்மைதான். இந்த சீசனின் கன்டென்ட் அட்சயப்பாத்திரம் என்றால் அது பாருதான். அவரால்தான் வீட்டில் நிறைய கலகங்கள் நடக்கின்றன. காமிராக்களுக்கு வயிறார தீனி கிடைக்கிறது என்பதில் மறுப்பே இல்லை.
ஆனால் பாருங்கள் நண்பர்களே.. என்னதான் ஒரு திரைப்படத்தில் வில்லனின் பாத்திரம் வலிமையாக இருந்தாலும், அந்த கேரக்டரை நாம் நிறைய ரசித்தாலும் இறுதியில் ஹீரோதான் வெல்வான். வில்லன் ஜெயிப்பதாக கதைகள் எழுதப்படாது. எழுதப்படவும் கூடாது. ‘பாருதான் டைட்டில் வின்னர்’ என்று ஒருவர் ஆசைப்படுகிறார் என்றால் உலகத்தில் அநீதி வெல்ல வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார் என்றுதான் பொருள்.
பாருவின் நெகட்டிவ் ஸ்ட்ராட்டஜி ரசிக்குபடி இருக்கிறதா?
பிக் பாஸ் ஆட்டம் என்பதின் அடிப்படையே, ஓர் அடைபட்ட சூழலில் அந்நிய மனிதர்களை சகிப்புத்தன்மையுடன் எதிர்கொண்டு தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வெற்றி பெறுவதுதான். கோபம், ஆத்திரம், வன்மம், புறணி, பழிவாங்கல் போன்ற மனிதர்கள் வெற்றி பெற்றால் அவை தவறான முன்னுதாரணமாக ஆகி விடும்.
நெகட்டிவிட்டி என்பது தூர நின்று பார்ப்பதற்கு ஜாலியான வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் நம் மீதே அது பாயும் போதுதான் வலியைத் தரும். தெருவில் சண்டை நடக்கும் போது ஆவலாகச் சென்று வேடிக்கை பார்ப்பது மனித இயல்பு. ஆனால் அத்தகைய தெருச்சண்டையிலேயே ஒருவர் காலத்தைக் கழிப்பார் என்றால் அத்தகைய பொறுக்கித்தனத்தை நாம் மதிப்போமா?

பாருவிடம் அடிப்படையில் ஒரு திறமை இருக்கிறது. ஆனால் அதை அவர் பெரும்பாலும் கவன ஈர்ப்பிற்காகவும் கலகத்தை உருவாக்கி தன்னை முன்னிறுத்திக் கொள்வதிலும் புறணி பேசுவதிலும்தான் செலவழிக்கிறார். ஒரு நல்ல சமூகம் இத்தகைய மனிதர்களை ரசிப்பதில்லை.
நெகட்டிவிட்டிதான் மனிதர்களை உடனே கவரும் விஷயம் என்பதால் பிக் பாஸ் டீமும் பாரு சம்பந்தப்பட்ட காட்சிகளையே மெயின் எபிசோடில் அதிகம் சேர்க்கிறது. பிக் பாஸ் தொடர்பாக, சமூக வலைதளங்களில் வெளியாகும் காட்சித் துண்டுகளைக் கவனித்தால் பாருவைத் தாண்டி அந்த வீட்டில் எத்தனையோ சுவாரசியமான சம்பவங்கள் நிகழ்கின்றன. ஆனால் அவையெல்லாம் மெயின் எபிசோடில் வருவதில்லை. அதனால்தான் பாருவே இந்த சீசன் முழுமையும் நிரம்பியிருப்பது போன்ற பிரமை ஏற்படுகிறது. மட்டுமல்லாமல் எந்தவொரு உரையாடலிலும் தலையிட்டு உரத்த குரலில் கத்தி மற்றவர்களை விடவும் தன்னை முன்னே காட்டிக் கொள்வதில் பாரு விற்பன்னராக இருக்கிறார்.
ரகளையான எக்ஸ்பிரஷன்களை வாரி வழங்கும் பாரு
பாருவின் வழக்கமான கல்யாணக்குணங்களைத் தாண்டி அவரிடம் தன்னிச்சையாக படிந்துள்ள ஒரு விசித்திரமான, சுவாரசியமான குணத்தைக் காணமுடிகிறது. அவரால் தன் உணர்ச்சிகளை மறைத்து வைத்துக்கொள்ளவே முடிவதில்லை. ஒரு குழந்தை மாதிரி தன் உணர்ச்சிகளை அப்படியே முகத்தில் வெளிப்படுத்திவிடுகிறார். குறிப்பாக வாரஇறுதி எபிசோடுகளில் நீங்கள் இதை நன்றாக கவனிக்க முடியும். தன்னைப் பற்றிய துளி விமர்சனம் வந்தாலும் பாருவின் முகம் கோணுகிறது. அப்படி சொல்பவரைப் பார்த்து முகம் சுளிக்கிறார். உதட்டைக் கோணுகிறார். கண்களால் வெறுப்பைக் காட்டுகிறார். இப்படியாக விதம் விதமான எக்ஸ்பிரஷன்களையும் உடல்மொழியையும் தந்து கொண்டேயிருக்கிறார். விஜய் சேதுபதி பல முறை கண்டித்தாலும் அவரால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவே முடிவதில்லை.
இதை குழந்தைத்தனம் என்பதா, முதிர்ச்சியற்ற தன்மை என்பதா என்று தெரியவில்லை. ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்கிற பழமொழிக்கு சரியான உதாரணம் பாரு. ஆனால் இவரைப் போன்றவர்களை கையாள்வது எளிது. கண்ணாடி போல உடனுக்குடன் உள்ளிருக்கும் எண்ணங்கள் வெளியே பிரதிபலித்து விடுவதால் இவர் என்ன செய்வார் என்பது எதிராளிக்கு நன்றாக தெரிந்து விடும். விக்ரம் பாருவை அநாயசமாக கையாளும் ரகசியம் இதுதான்.
மாறாக இறுக்கமான முகத்துடன், உணர்ச்சிகளை வெளியே காட்டாமல் இருப்பவர்களைக் கையாள்வது சிரமம். இந்த நோக்கில் பாருவை விடவும் ரோபோ முகத்துடன் இருக்கும் சான்ட்ராவைக் கையாள்வது சிரமம். பாருவை விடவும் இவர்கள் ஆபத்தானவர்கள் என்று தோன்றுகிறது.

பாரு - கம்மு சண்டை - தலைவன் தலைவி படத்தின் மினி வெர்ஷன்?
மேடைக்கு வந்த விஜய் சேதுபதி, ‘உறவுகளின் அருமை பிரிவின் போதுதான் தெரிகிறது.. இல்லையா?” என்று ஃபேமிலி டாஸ்க்கைப் பற்றி சொல்லிவிட்டு “ஆனாலும் இவங்க மாறினதுபோல தெரியல. வாங்க வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைப் பார்ப்போம்” என்றார்.
அந்த வெள்ளிக்கிழமை நிகழ்வு முழுக்க பாரு - கம்ருதீன் சண்டையாகவே இருந்தது. விசே, நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ படத்தின் மினி வெர்ஷன் போலவே இருந்தது. அந்தப் படத்திலாவது அவர்களுக்குள் இருக்கும் ஆதாரமான அன்புதான், சண்டையாக வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும்.
ஆனால் பாரு -கம்மு ரொமான்ஸில் டாக்ஸிக்தனம்தான் வெளிப்படுகிறது. பாருவின் செயற்பாடுகளில்தான் நச்சுத்தன்மை இருக்கிறது என்றால், அவரது ரொமான்ஸிலும் டாக்ஸிக்த்தான் இருக்கிறது. புலி பாய்ந்து பதுங்குவது போல அடங்குவது போல பாவனை செய்யும் கம்ருதீன் மீண்டும் திடீரென பாயத் தொடங்குகிறார். மற்றவர்கள் அனைவரையும் தன் அடாவடித்தனத்தால் ஜெயிக்க முயலும் பாருவோ, கம்முவின் ரொமான்ஸ் முன்னால் அப்படியே பம்முகிறார்.
விடாக் கொண்டன், கொடாக் கொண்டன் மாதிரி இருவருமே தங்களின் அகங்காரமும் சுயநலமும் மட்டுமே முக்கியம் என்பது மாதிரி மோதுகிறார்கள். ஆனால் உண்மையான காதலின் அடையாளமே, விட்டுத்தருதல்தான். காதலையே இழந்தால் கூட தன்னால் நேசிக்கப்பட்டவளுக்கு சிறு துன்பம் கூட நிகழக்கூடாது என்று நினைப்பதுதான் உண்மையான காதல். மாறாக ஒரு சிறிய பிரேக் அப்பில் கூட “உன்னை செய்யறேன் பாரு.. “ என்று வன்மத்தைக் கக்குவதின் பெயர் நிச்சயம் காதல் அல்ல.
பாரு -கம்மு - காதலா அல்லது சர்வைவல் நாடகமா?
பாருவிற்கும் கம்முவிற்கும் இடையில் நடக்கும் காரசாரமான உரையாடல்களைப் பார்க்கும் போது ‘இது உருப்படாத ரொமான்ஸ்’ என்பது நமக்கே உறைக்கும்போது அவர்களுக்கு தெரியாதா என்ன? பிக் பாஸ் வீட்டின் சர்வைவலுக்காக இந்த லவ் கன்டென்ட்டை அவர்கள் இழுபறியாகக்கொண்டு செல்கிறார்களா? இந்த ஷோ முடிந்தவுடன் பாரு - கம்மு ரொமான்ஸூம் புட்டுக் கொண்டு விடும் என்பது நம்மை விடவும் அவர்களுக்கு நன்றாக தெரியும். என்றாலும் ஏன் இந்த மோசமான டிராமா? பிக் பாஸ் டீமும் இதையே காட்டி வெறுப்பேற்றுகிறது.
ஏற்கெனவே சொன்னது மாதிரி, உணர்ச்சிகளைக் கண்ணாடிபோல வெளிப்படுத்தும் பாருவை நம்பி விடலாம். ஆனால் திருந்தியது போல் நடித்து, கோபம் வந்து விட்டால் அனைத்து வன்மங்களையும் கக்கும் கம்ருதீன் ஆபத்தானவராக தெரிகிறார். அது பாருவாக இருந்தாலும் சரி, அரோராவாக இருந்தாலும் சரி, தக்க சமயத்தில் போட்டுக் கொடுத்து பழி தீர்த்துக் கொள்கிறார். இருவரையுமே அவர் நேசிக்கிறார் என்றால், இந்த வன்மமா அன்பின் அடையாளம்?!
“நீ வேலையே பார்க்கறதில்லை. வில்லனிக் பெர்சன், அசிங்கமா கேப்பேன், பெரிய இவளா நீ.. என்னை மட்டும் தப்பா காட்ட கேம் ஆடறே.. நீ சேஃப் கேம் ஆட டிரை பண்றே.. இனிமே நாம தனியா ஆடலாம். உன் சகவாசமே வேணாம். மாத்தி மாத்தி பேசற. என்னை வெளியே அனுப்ப டிரை பண்றே.. உனக்காக யாரை வேண்டுமானலும் போட்டுத் தள்ள தயங்க மாட்டே” என்றெல்லாம் பாருவின் மீது கடுமையான புகார்களை துப்பிக் கொண்டேயிருந்தார் கம்ருதீன்.

‘பாரு போகக்கூடாது’ - அந்தர் பல்டியத்த கம்ருதீன்
இதே விஷயங்களை விசாரணை நாள் சபையிலும் திறமையாக பதிவு செய்தார் கம்ருதீன். ஆனால் எவிக்ஷன் சமயத்தில் “எந்த ரெண்டு பேரை நீங்க காப்பாத்தணும்ன்னு நெனக்கறீங்க?” என்று விசே கேட்ட போது ‘பாரு’ என்று என்று சொன்னதை எந்த விதத்தில் புரிந்துகொள்வது என்று தெரியவில்லை. விக்ரம் உட்பட அனைவருமே சிரிப்புடன் தலையில் கை வைத்துக்கொண்டனர்.
போலவே பாருவும் கம்முவிற்கு தக்க பதிலடி தந்து புகார்களை சபையில் பதிவு செய்து விட்டு, கம்ருதீன் தன் பெயரைச் சொன்னவுடன் இளித்துக் கொண்டே பக்கத்தில் சென்று உரசி அமர்ந்து கொண்டார். இதையும் எப்படி புரிந்துகொள்வது என்று தெரியவில்லை. இருவருமே சிறந்த நடிகர்களாக வருவார்கள் என்பது மட்டும் தெரிகிறது.
இந்த எபிசோடில் பாருவை பல முறை பங்கம் செய்து கொண்டேயிருந்தார் விசே. “ஒரு பைக்கை விக்க முடியலை. ஆனா என்னை கன்வின்ஸ் செய்ய டிரை பண்றீங்க. அது செல்லுபடியாகாது. அப்படியெல்லாம் முறைக்காதீங்க.. பாரு.. “ என்று ஆரம்பமே களைகட்டியது. வழக்கம் போல் ‘சார்.. என்ன சார்..நீங்க?” என்று சிணுங்கினார் பாரு. அவருடைய மைண்ட் வாய்ஸ் அப்போது ஸ்பீக்கரில் ஒலித்திருந்தால், விசே அதிர்ச்சியாகி இருப்பார்.
‘எனக்கு யாரும் வரமாட்டாங்க’ என்று கலங்கிய அரோவிற்கு, இந்தச் சமயத்தில் விசே ஆறுதல் சொன்னது சிறப்பான விஷயம். அவருடைய குடும்பத்தில் இருந்து ஒருவராவது வந்திருக்கலாம்.
‘போட்டியாளர்களுக்குப் பதிலாக அவர்களின் விருந்தினர்களே உள்ளே வந்திருக்கலாம்’ என்கிற கேள்விக்கு, “வினோத்திற்குப் பதில் பாக்யா வந்திருக்கலாம். அவ்ளோ தெளிவா இருக்காங்க” என்றார் சான்ட்ரா. “பாருவின் அம்மா வந்திருக்கலாம்” என்றார் சபரி. “ஸ்ரீரஞ்சனி வந்திருக்கலாம்” என்று திவ்யா சொன்னது உண்மை.
டேமேஜ் கண்ட்ரோலில் ஈடுபட்டிருக்கிறாரா, பார்வதி?
“அமித்தோட பொண்ணு வேதா வந்திருக்கலாம். குழந்தையா இருந்தாலும் பயங்கர மூளை” என்று பாராட்டினார் கம்மு. “அவங்க பார்வதிக்கு ஒரு பட்டம் கொடுத்தாங்களே.. அது என்ன?” என்று விசே குறும்பாக போட்டுக் கொடுக்க “சீட்டிங் பார்வதி” என்று பார்வையாளர்கள் உற்சாகமாக குரல் கொடுக்க எரிச்சலை சிரிப்பால் மூடிக் கொண்டார் பாரு. “குழந்தையும் தெய்வமும் ஒண்ணுன்னு சொல்வாங்க பாரு” என்று பாருவை இன்னமும் புண்படுத்தினார் விசே.
“விருந்தினர்கள் வந்து போனப்புறம் யார் கிட்ட மாற்றம் தெரியுது” என்கிற கேள்விக்கு சான்ட்ரா என்று பலரும் சொன்னது உண்மை. ஒப்பாரிப் பாடல் பாடிக் கொண்டிருந்த சான்ட்ரா, ஸ்விட்ச் போட்டது போல் மாறி இப்போதெல்லாம் புன்னகை அரசியாக வலம் வருகிறார். (எது உண்மை, எது நடிப்பு என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை)
“பாரு கிட்ட நிறைய மாற்றம் தெரியுது சார். இப்பல்லாம் சிஐடி, ஜேம்ஸ்பாண்ட் மாதிரி நிறைய கேள்வி கேக்கறாங்க. நான் இப்பத்தான் பெண்மையா உணர்றேன்னு சொல்றாங்க. அவங்க அலப்பறை தாங்காம நான்தான் இப்ப டவுன் ஆகிட்டேன்” என்கிற மாதிரி கம்ருதீன் போட்டுக் கொடுக்க பாருவின் முகம் அஷ்ட கோணலாகியது. “கம்மு இப்பல்லாம் உண்மையா ஸாரி கேட்கறார்” என்று சான்றிதழ் தந்தார் திவ்யா.

கம்ருதீன், வினோத், பாரு .. மூணு பேருமே டேமேஜ் கண்ட்ரோல்ல ஈடுபட்டிருக்காங்கன்னு தோணுது. ஸ்விட்ச் போட்ட மாதிரி மார்றது செயற்கையா இருக்கு” என்று பகிரங்கமான குற்றச்சாட்டை வைத்தார் அரேரா. ‘சனியன் பிடிச்சவ. நாசமா போவ’ என்று பாருவின் மைண்ட்வாய்ஸை நம்மாலேயே கேட்க முடிந்தது. பாருவிடமிருந்து அப்படியொரு எக்ஸ்பிரஷன்.
பதிலுக்கு கம்ருதீனை போட்டுக்கொடுத்தார் பாரு. “தன் மேல தவறான பிம்பம் விழுந்துடக்கூடாதுன்னு ஜாக்கிரதையா இருக்கார். காமிரா கான்ஷியஸா இருக்கார். அதுக்காக சில விஷயங்களை பதிவு பண்றார். நீ வேலை செய்யலைன்னு சொல்றார்” என்பது பாருவின் பதில் மொய்.
பாரு பற்றிய அரோராவின் கருத்தை சுபிக்ஷாவும் வழிமொழிந்தார். “அவங்க வில்லன் குணம் திடீர்ன்னு மாறினது செயற்கையா இருக்கு” என்று சுபிக்ஷா சொல்ல, பாருவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
தன்னை டிஃபெண்ட் செய்வதற்காக கம்மு கையை உயர்த்த ‘யப்பா சாமிகளா.. நீங்களே பேசிக்கங்க” என்று பிரேக்கில் சென்றார் விசே.
பாருவிற்கு கம்முவிற்கும் நடந்த சண்டையைப் பார்த்து “ஒரு பிரேக் அப் பார்த்த மாதிரி இருக்குல்ல?” என்கிற கிண்டலுடன் உள்ளே வந்தார்.
“நான் வேலை செய்யறேன். அது இந்த உலகத்திற்கு தெரியல’ -பாருவின் அபாண்டமான புளுகல்
“கம்முவோட கேப்டன்சி எப்படியிருந்தது?” என்பது அடுத்த கேள்வி. ஆனால் இதில் பாருதான் தொக்காக சிக்கிக் கொண்டார். “பாருவோட வேலையை தல செஞ்சாரு. பாரு கிட்ட வேலை வாங்கறது ரொம்ப கஷ்டம்” என்று போட்டுக் கொடுத்தார் வினோத்.
“ஆக்சுவலி.. காலை நேரத்துல பாத்திரம் துலக்கற வேலை என்னுது. அப்ப பாத்திரம் கம்மியா இருந்தது. பாரு அத பார்த்துட்டு ‘இப்ப நான் பண்ணிடறேன்’னு சொன்னாங்க. ஆனா அதுக்கு அப்புறம் பாத்திரம் நிறைய விழுந்தவுடனே எரிச்சல் ஆயிட்டாங்க. இப்படி கணக்கு பார்த்து வேலை செய்யறாங்க” என்று பாருவை போட்டுக் கொடுத்தார் சுபிக்ஷா. (பத்து பாத்திரம் தேய்த்தல் என்பதை எண்ணிக்கையின் அடிப்படையில் பாரு புரிந்து கொண்டிருக்கிறார் போல!)
“சார்.. நான் வேலை செய்யறேன் சார்.. நான் முரண்டு பிடிப்பவள்தான். ஆனாலும் செஞ்சிடறேன்.” என்று வீட்டு வேலை என்னும் கடமையை ஏதோ சலுகை செய்வது போல பாரு பேச, விசே வறுத்தெடுத்து விட்டார்.

“எப்படி இதை ஈஸியா கடந்து போறீங்க.. நீங்க அடம்பிடிக்கறத மத்தவங்க ஏன் பொறுத்துக்கணும். 12 வாரம் ஆயிடுச்சு.. ஒவ்வொரு வாரமும் இதையேதான் சொல்றீங்க. உங்க அம்மா கூட சொல்லிட்டுப் போயிருக்காங்க.. அப்பவும் செய்ய மாட்டேன்றீங்க.. மத்தவங்க வேலையை நீங்க செய்வீங்களா.. எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாம இதை கடக்கறீங்க..” என்று விசே கொதித்தெழ “நான் பேசறததான் இவங்க பார்க்கறாங்க.. வேலை செய்யறத பார்க்கலை” என்று மோசமாக சமாளித்தார் பாரு.
“டேய்.. டேய்.. உன்னை எனக்குத் தெரியுண்டா.. எனக்கு மட்டுமில்ல.. ஊருக்கே தெரியும்.. மக்களுக்கே தெரியும்” என்கிற மாதிரி விசே கேள்விகளை வைக்க, விடாமல் பாரு சமாளிக்க “இதெல்லாம் உங்களுக்கே நியாயமா தெரியுதா.. இப்படி சமாளிக்கும் ஒவ்வொரு முறையும் உங்களுக்கு வெற்றி கிடைக்கலை. இன்னும் மோசமா தோத்துதான் போறீங்க.. உக்காருங்க” என்று எரிச்சலானார் விசே.
ஒரு சின்ன வேலையைக் கூட மனமார செய்யாமல் பாரு எப்படியெல்லாம் டபாயக்கிறார் என்பதை நாமே பலமுறை பார்க்கிறோம். இத்தனை காமிராக்கள் பதிவு செய்கின்றன. ஆனால் ஒரு முழு எபிசோடை ஒரேயொரு பிரேமில் மறைக்க முயல்வது மாதிரி பாருவால் எப்படி அப்பட்டமாக புளுக முடிகிறது என்பது ஆச்சரியம்.
“கம்மு.. இந்தக் கேள்வியெல்லாம் நீங்க கேட்டிருக்கணும்.. நான் கேட்க வேண்டியிருக்கு. நியாயமா பார்த்தா உங்க சம்பளத்தை எனக்கு தரணும்” என்கிற கிண்டலோடு அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்தார் விசே.
அரோவை பழிவாங்க முயன்ற கம்முவிற்கு விசே வைத்த குட்டு
“இவங்க ஆட்டம் முடிஞ்சிருச்சி. வெளியே போகலாம்’ என்கிற கேள்வியை அடுத்து விசே முன்வைக்க ‘சான்ட்ராவின் பெயர் பலமுறை சொல்லப்பட்டது சரியான விஷயம். அழுகையின் போதும் சரி, சிரிப்பின் போதும் சரி, அவரால் இந்த வீட்டுக்கு என்ன பங்களிப்பு இருக்கிறது என்பது மர்மமாகவே இருக்கிறது.
விக்ரம் திவ்யாவின் பெயரைச் சொல்ல, பதிலுக்கு விக்ரமின் பெயரைச் சொன்ன திவ்யா, வழக்கம் போல் மூச்சு விடாமல் அதற்கு காரணங்களை அடுக்க ‘போதும்மா. காது ரொம்பிடுச்சு” என்று விசே சைகை காட்ட திவ்யாவே அடக்க முடியாமல் சிரித்து விட்டார்.

அரோவின் பெயரைச் சொன்ன கம்மு, சந்தடி சாக்கில் “துஷார் வெளியே போனதுக்கு அரோ காரணம்” என்கிற பழைய பழியை மீண்டும் தூக்கி வந்து போட்டார். “இந்தக் குற்றச்சாட்டை இன்னமும் எத்தனை நாளுக்கு சொல்லப் போறீங்க?” என்று விசே ஏற்கெனவே சொல்லியும் கம்மு மாறவில்லை. “துஷார் வெளியேற்றத்திற்கு அரோரா காரணம் கிடையாது” என்று தெள்ளத் தெளிவாக விசே சொல்ல, அரோவிற்கு கண்ணீர் பெருகியது. “இந்தக் காரணத்தைச் வெச்சு நீங்களும் அழுதுட்டே இருந்தா உங்க கேம் பாதிக்கும்” என்ற அரோவிற்கும் வார்னிங் தந்தார் விசே.
எவிக்ஷன் நேரம். கம்முவைத் தவிர மற்ற அனைவரும் பலி பீடத்தில் இருந்தார்கள். “பாரு போகக்கூடாது’ என்று சொல்லி அனைவருக்கும் விசித்திர அதிர்ச்சியைத் தந்தார் கம்மு. அதுவரை கோபத்தைக் கொட்டிய பாருவும், சிரித்துக் கொண்டே வந்து பக்கத்தில் அமர்ந்தார். (என்ன கொடுமை சரவணன்?!)
அமித் எவிக்ஷன் - பாரு, சான்ட்ராவின் சகவாசம் காரணமா?
விசே எவிக்ஷன் கார்டை நீட்ட அதில் ‘அமித்’ என்று இருந்தது. ‘கிச்சன் ஏரியா ஏன் சுத்தமாக இல்லை?’ என்கிற விசாரணையில் “என் தப்புதான் சார்” என்று சரணாகதி அடைந்தார் அமித். “அப்படியா.. உக்காருங்க” என்று விசேவின் முகத்தில் அப்போதே ஒரு மாற்றம் தெரிந்தது. எவிக்ட் ஆகி போகப் போகிற ஆசாமியை ஏன் வறுத்தெடுக்க வேண்டும் என்று விட்டு விட்டார் போலிருக்கிறது.
எதிர்மறை குணாதிசயம் இல்லாத நல்ல போட்டியாளர்களுள் ஒருவர் அமித். இனிமையாகப் பழகுபவர். பாட்டு பாடுபவர். ஆனால் எப்போது சான்ட்ரா மற்றும் பாரு பக்கத்தில் அமர்ந்து பேச ஆரம்பித்தாரோ, அப்போது பிடித்தது சனி. தாமரை இலை நீர் மாதிரி பிக் பாஸ் வீட்டில் இருந்ததும், அவரது வெளியேற்றத்திற்கு காரணமாக இருக்கலாம்.

அமித்திற்கு சண்டையும் ஒழுங்காக போடத் தெரியாது. சற்று கோபப்பட்டு விட்டு சில நிமிடங்களுக்குள் தடாலென்று ‘ஸாரி’ சொல்லி விடுவார். அதை வைத்து மைலேஜ் தேற்றத் தெரியாது. பிறகென்ன? இவரிடம் என்ன சுவாரசியம் இருக்க முடியும்?! (பாரு ரசிகர்கள் இதை உடனே ஒப்புக் கொள்வார்கள்!)
அமித் வெளியேற்றத்திற்கு சான்ட்ரா குலுங்கி குலுங்கி அழுததுதான் ஆச்சரியம். அமித்தை நாமினேட் செய்தவர்களில் ஒருவர் சான்ட்ரா. ஒருவேளை குற்றவுணர்வில் அழுதாரோ?!
அமித் எவிக்ஷனுக்குப் பிறகு மீண்டும் பாருவும் கம்முவும் தங்களின் காரசார மோதலை ஆரம்பித்தார்கள். “ஏண்டா.. எல்லாத்தையும் வீக்கெண்ட் ஷோல சொல்றே?” என்று பாரு ஆரம்பிக்க மீண்டும் கம்மு கோபமாக.. அடப் போங்கப்பா.. போரடிக்குது!
பாரு - கம்ருதீனுக்கு இடையில் நிகழும் இந்த டிராமா பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?




















