"மாணவர்கள் அனைவரும் சமம்!" - பள்ளி ID கார்டுகளில் சாதி பெயர் சர்ச்சை குறித்து செ...
Bhagyaraj: "எப்படிச் சுயமா போராடி வந்தேனோ அதே மாதிரி வரட்டும்னு எம்.ஜி.ஆர் சொன்னார்" - பாக்யராஜ்
இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் இன்று மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவருடைய மறைவுக்குத் தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
பாக்யராஜை, எம்.ஜி.ஆர் தன்னுடைய கலையுலக வாரிசு எனக் குறிப்பிட்டிருக்கிறார், எம்.ஜி.ஆருடனும் நெருக்கமாக பயணித்திருக்கிறார் பாக்யராஜ்.

ஆனந்த விகடனின் 'குரு சிஷ்யன்' தொடருக்காக இயக்குநர் மற்றும் நடிகர் பாண்டியராஜன், அவருடைய குரு பாக்யராஜைப் பேட்டி கண்டார்.
அந்தப் பேட்டியில், "மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சார் எப்போதெல்லாம் உங்க வீட்டுக்கு வருவார், எப்படியெல்லாம் உங்ககிட்ட பேசுவார்னு உங்க அசிஸ்டென்ட்டான எனக்கு நல்லாவே தெரியும். உங்களுக்கு, எம்.ஜி.ஆரிடம் ஏதாவது கேட்கணும்னு நினைத்து, கடைசிவரை கேட்க முடியாமற்போன கேள்வி ஏதாவது இருக்குதா?” எனக் கேட்டார்.
இதற்கு பாக்யராஜ், "தலைவருக்குத் திடீரென்று உடல்நிலை சரியில்லாமற்போனவுடனேயே முதலில் சென்னை அப்போலோவில் அட்மிட் பண்ணியிருந்தோம். விஷயம் தெரிந்து பிரதமர் இந்திரா காந்தி நேரடியாக ஆஸ்பத்திரிக்கே வந்துட்டாங்க. வெளிநாட்டுக்கு உடனே சிகிச்சைக்கு அனுப்பச் சொல்லி மத்திய அரசாங்கச் செலவிலேயே தலைவரோட மொத்த ட்ரீட்மென்ட்டையும் பார்த்துக்கிட்டாங்க.
அமெரிக்காவிலிருந்து தலைவர் குணமாகி வர்றதுக்கு முன்னாடியே இந்திரா காந்தியம்மாவைச் சுட்டுக் கொன்னுட்டாங்க. தலைவர் சென்னை திரும்பியதும் இந்திரா காந்தி உதவி செய்த விஷயத்தைச் சொன்னோம். அப்போதான் குணமாகி வந்திருக்காரேன்னு இந்திரா அம்மா இறந்ததைப்பற்றி மட்டும் சொல்லலை.
இந்திரா காந்தி எடுத்துக்கிட்ட மெனக்கெடல்களுக்காக நன்றி சொல்லணும்னு தலைவர் விரும்பினார். என்னிடம் இந்திரா காந்திக்கு ஃபோன் போடச்சொல்லி வற்புறுத்திக்கிட்டே இருந்தார்.
ஒரு கட்டத்துல சமாளிக்க முடியாம இந்திரா காந்தி இறந்த விஷயத்தைப் பொறுமையாக எடுத்துச் சொல்லிட்டேன். அடுத்த நிமிஷமே நொறுங்கிட்டார். அதன்பிறகு ரெண்டு நாளா சரியா தூங்காம, சாப்பிடாம அந்த அம்மா இறந்த துக்கத்திலேயேதான் இருந்தார்.
புரட்சித்தலைவர் வழக்கமாக ஜிப்பா, குல்லா, கூலிங்கிளாஸ் சகிதமான தோற்றத்தோடுதான் எல்லாரையுமே சந்திச்சுப் பேசுவார். அவர் இறப்பதற்கு முன்னாடி ஒருமுறை தோட்டத்துக்குத் தலைவரைப் பார்க்கப் போயிருந்தேன். மாடியில் பெட்ரூமில் படுத்திருந்தவர்கிட்ட தகவல் சொன்னதும் என்னை மாடிக்கு வரச்சொன்னார்.

உள்ளே போனதும் தொப்பி அணியாம, கண்ணாடி போடாம, சில்க் ஜிப்பா இல்லாம, பனியன் போட்டு, கைலி கட்டிக்கிட்டு படுத்துட்டிருந்தார். எதிரே இருந்த சேரில் உட்காரப்போன என்னை தன் பெட்டுக்குப் பக்கத்துல வந்து உட்காரச் சொன்னார். தலைவரோட காலைப் பார்த்ததும் எனக்கு அதிர்ச்சி.
“தலைவரே... கால் ரொம்ப வீங்கியிருக்கு. ஏன் எல்லா வேலையையும் நீங்களே இழுத்துப்போட்டுச் செய்யுறீங்க. நம்பிக்கையான ஒருத்தரை வெச்சிக்கிட்டு அவருகிட்ட பொறுப்பை ஒப்படைக்க வேண்டியதுதானே”ன்னு உரிமையா கேட்டேன். `என் வேலையை நான்தான் பார்க்கணும், வேற யார் இருக்காங்க சொல்லுங்க?’ன்னு திருப்பிக் கேட்டார்.
பதில் சொல்ல முடியாம திணறிப் போயிட்டேன். ‘நான் இருக்கேன் தலைவரே’ன்னு அப்ப நான் ஏன் சொல்லலைன்னு இப்பவும் நினைக்கிறதுண்டு. அப்போ ஆர்.எம்.வீரப்பன், ஜெயலலிதான்னு ரெண்டு பேருக்கும் அ.தி.மு.க-வில் கடுமையான போட்டி இருந்துச்சு.
நான் தலைவரிடம் ‘நீங்க யாரையாவது ஒருத்தரை அடையாளம் காட்டலாமே’ன்னேன். “நான் எப்படிச் சுயமா போராடி வந்தேனோ அதே மாதிரி அவங்களும் வரட்டும். நான் யாரையுமே அடையாளம் காட்ட மாட்டேன்’னு சொல்லிட்டார்," என பதிலளித்திருந்தார்.














