China: உலகின் மிகபெரிய தங்கச் சுரங்கம் - தங்க சந்தையில் ஓங்கும் சீனாவின் கை!
சீனாவின் மையப் பிரதேசத்தில் பெரிய அளவிலான தங்க இருப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் தோராய 10000 மெட்ரிக் டன் அளவு உயர் தர தங்கம் இருக்கும் என கணிக்கின்றனர்.
சீன ஊடகத்தின் செய்திப்படி, இதன் மதிப்பு 83 பில்லியன் டாலர்கள்.
தற்போதுவரை உலகின்மிகப் பெரிய தங்க வயலாக கருதப்பட்ட தென்னாப்பிரிக்காவின் சௌத் டீப் சுரங்கத்தை பின்னுக்குத்தள்ளியிருக்கிறது. சௌத் டீ வயலில் 900 மெட்ரிக் டன் தங்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் ஹூனான் மாகாணம், பிங்ஜியாங் மாவட்டத்தில் இந்த தங்க இருப்பு உள்ளது. இங்கு 2 கிலோமீட்டர்வரை ஆழமான தங்க வரிகள் (தங்க நரம்புகள் - Gold Vein) கண்டறியப்பட்டுள்ளன.
இதுபோன்ற தங்க வயல்கள் பல்வேறு காரணிகளால் உருவாகின்றன. மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தங்கம் பாறைகள் வழியாக உருகி படிவது குறிப்பிடத்தக்க வழிமுறை.
பாறைகள் ஊடாக வரி வரியாக செல்லும் தங்கத்தை தங்க நரம்புகள் என்கின்றனர். பிங்ஜியாங்கில் காண்டறியப்பட்ட தங்க நரம்புகளில் மட்டும் 300 மெட்ரிக் டன் தங்கம் இருக்கலாம் என்கின்றனர்.
3 கிலோமீட்டர் வரை ஆழமாக சென்றால் அதிக தங்கம் கிடைக்கலாம் என நவீன 3டி மாடலிங் கணிக்கிறது.
ஏற்கெனவே உலக அளவில் தங்கம் எடுப்பதில் சீனா 10% வரை பங்களிக்கிறது. இந்தநிலையில் புதிய தங்க இருப்பு சீன தங்க தொழில்துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. உலக அளவிலான தங்கச் சந்தையில் சீனாவின் கை மேலும் ஓங்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
புவியின் மேற்பரப்பில் இருக்கும் தங்கத்தில் பெரும்பாலானவை எடுக்கப்பட்டாகிவிட்டது. இதுபோல உலகம் முழுவதும் இன்னும் தங்க இருப்புகள் கண்டறியப்படுமா என்ற கேள்வியில் நிபுணர்கள் வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர்.