தருமபுரி: சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கு; குற்றவாளிக்கு இரட...
CM Vijay : 'தவெக அரசின் விஜய்யிஸ அரசியல்.!' - ஓர் விரிவான அலசல்!
தவெக முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்து முடிந்திருக்கிறது. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு முதல்வர் விஜய்யும் அவையில் பதிலளித்து முடித்திருக்கிறார். தவெக அரசு அமைந்து 40 நாட்களை நிறைவு செய்திருக்கிறது. 40 நாட்களின் இந்த அரசின் பாணி என்னவாக இருந்திருக்கிறது என்பதை இப்போது கொஞ்சம் அலசுவது சரியாக இருக்கும்.

முதல்வர் விஜய் அடிப்படையில் ஒரு சினிமா நடிகர். சற்றேறக்குறைய 35 ஆண்டுகளை சினிமாவில் கழித்திருக்கிறார். சினிமா புகழை முக்கிய முதலீடாக வைத்துதான் அரசியலுக்குள்ளும் நுழைந்தார். அதனால்தான் மற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் போன்று திட்டமிட்டு முறையாக பிரசாரம் செய்யாத போதும் கூட அவரால் தேர்தலில் வெல்ல முடிந்தது. அவர் செய்த கொஞ்ச பிரசாரம் கூட முழுக்க முழுக்க ஒரு சினிமா படத்துக்குரிய பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கியதாக மக்களை சினிமா வசன பாணியிலேயே ரசிக்க வைக்கக்கூடியதாக இருக்கும்.
இதை நாம் அவரது ரசிகர்களும் தொண்டர்களும் சொல்லும் பதத்தின்படியே 'விஜய்யிஸம்' என்ற வார்த்தையால் கூட அடையாளப்படுத்திக் கொள்ளலாம். அப்படி பார்க்கையில் கடந்த 40 நாட்கள் ஆட்சியுமே கூட 'விஜய்யிஸ' தன்மைகளை உள்ளடக்கியதாக இருப்பதாகவே பார்க்க முடிகிறது. எனினும் இதில் சரி தவறு எல்லாம் தனிப்பட்ட நபர்களின் பார்வைகளின் தான்.
மே 10 ஆம் தேதி அவர் முதல்வராக பதவியேற்ற நாளிலிருந்தே இந்தத் தன்மையை உணர முடியும். பதவிப் பிரமாண உறுதிமொழியை எந்த முதல்வரும் மனப்பாடமாக படித்து வந்து எடுத்ததே இல்லை. விஜய் அதை செய்தார். தன்னுடைய படத்தில் நீண்ட பஞ்ச் வசனத்தை பேசுவதைப் போலவே கைகளை வைத்துக் கொண்டு ஆவேசமாக சினிமா பாணியில் உறுதிமொழியை எடுத்திருப்பார்.

ஒரு பெரிய போரை சந்திக்கப் போகும் கதாநாயகன் அதற்கு முன்பாக தனது படைகளின் முன்பு நின்று நரம்பு புடைக்க பேசும் உந்துதல் கொடுக்கும் வீர உரையை போலத்தான் உறுதிமொழியை அணுகியிருப்பார். அதேமாதிரி, அந்த பிரமாண்ட மேடையிலேயே டேபிளை போட்டு அங்கேயே தனது முதல் கையெழுத்தையும் இட்டிருப்பார்.
இப்படியான காட்சிகளையெல்லாம் 'முதல்வன்' பாணியிலான படங்களில் மட்டுமே இதற்கு முன்பு பார்த்திருப்போம். சமீபத்திய வரலாற்றில் எந்த முதல்வரும் தன்னுடைய முதல் கையெழுத்தை அத்தனை ஆர்ப்பரிக்கும் கூட்டத்திற்கு முன்பாக இட்டிருக்க மாட்டார். விஜய் செய்யும் ஒவ்வொரு விஷயத்துக்குள்ளும் ஒரு சினிமாத்தன்மை இருந்து கொண்டேதான் இருக்கிறது. அது இதுவரையிலான மரபுகளை உடைக்கக்கூடியதாகவும் இருக்கிறது
அவரின் உடைத் தேர்வும் அப்படியானதாகத்தான் இருக்கிறது. இதுவரையில் அரசியல்வாதிகள் என்றால் கரைவேட்டிதான் நியாபகம் வரும். ஆனால், விஜய் அதை கோட் சூட்டாக மாற்றுகிறார். நவீனமாக மாறுகிறேன் என மற்ற கட்சித் தலைவர்கள் செய்த உடைமாற்றங்களை விட விஜய்யின் உடைமாற்றம் எளிதில் மக்கள் மனதில் பதிகிறது. முதல்வர் என்றால் கோட் சூட் போட்ட ஒரு சித்திரம் மக்கள் மனதில் நிழலாடும் நிலையை ஏற்படுத்திவிட்டார். வேட்டி கட்டும் அரசியல்வாதிகள் கட்டாயம் தங்களை அப்டேட் செய்தே ஆக வேண்டுமெனும் நிலைக்கு தள்ளிவிட்டார்.

விஜய்யின் வெற்றியில் முக்கிய பங்கு அவரை சுற்றி வகுக்கப்பட்ட வியூகத்திலும் இருக்கிறது. விஜய்யை ஒரு 'தெய்வம்' போல முன்நிறுத்தினர். அவர் அடிக்கடி வெளியில் வந்து காட்சி கொடுக்கமாட்டார். எல்லாராலும் எளிதில் அணுக முடியாது. அவராக யாரையாவது பார்க்க நினைத்தால் மட்டும்தான் பார்க்க முடியும். அதே தன்மையை இப்போதும் கையாள்கிறார்.
முதல்வர் ஆன பிறகும் அவர் மக்கள் முன்பு அதிகம் தென்படுவதில்லை. ஒரு அரசு ஊழியரை போல கான்வாயை கிளப்பிக் கொண்டு தலைமைச் செயலகம் செல்கிறார். அலுவல்ரீதியாக அவர் வேலையை பார்க்கிறார், கிளம்பிவிடுகிறார். இந்த 40 நாட்களில் அரசு நிகழ்ச்சியென விஜய் தமிழகத்தை தாண்டவில்லை. இடையில் திருச்சி கிழக்குக்கு மட்டும் நன்றி சொல்ல சென்றார். அங்கும் பிரசார பாணிதான்.
வாரத்திற்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை மட்டும் மக்கள் முன்பு காட்சியளிக்க வேண்டும். அந்தவகையில் இந்த மாதத்துக்கான கூட்டம் திருச்சி கிழக்கு கூட்டம். அடுத்த மாதம் இதேமாதிரி ஒரே ஒரு கூட்டத்தில் மட்டும் வெளியில் தலைகாட்டி மக்களிடம் பேசுவார். முதல்வரின் நட்சத்திரத்தன்மையும் அவர் மீதான ஈர்ப்பும் குறைந்துவிடக்கூடாது என்பதில் அவரின் வியூக தரப்பு கவனமாக இருக்கிறது. அதனால்தான் மாற்றுக்கட்சியிலிருந்து இணைபவர்களை கூட விஜய் நேரில் சந்திப்பதில்லை. விஜய் நம்மை விட மேலான ஒரு இடத்தில் இருப்பவர். அவரை நாம் நினைத்த மாத்திரத்திலெல்லாம் பார்த்துவிட முடியாது என்கிற வழிபாட்டு மனநிலையை கட்சிக்குள் புதிதாக வருபவர்களுக்கும் முதல் பாடமாக கற்றுக் கொடுக்கிறார்கள்.

முதல்வரின் விஜய்யிஸ பாணியை மற்ற அமைச்சர்களும் அதிகாரிகளும் கூட கடைபிடிக்க நினைப்பதைத்தான் இன்னும் உற்று கவனிக்க வேண்டும். சிங்கப்பெண் அரசு விழாவில் விஜய்யின் திரைப்பட பாடல்களை ஒலிக்கவிடுகின்றனர் காவல்துறையின் உயரதிகாரிகள். 'சிங்கப்பெண்...' 'ஆளப்போறான் தமிழன்...' என விஜய்யின் பாட்டை வாசித்து முதல்வரின் நாயக பிம்பத்துக்கு இன்னும் நெருப்பூட்டி அவரை கவர நினைக்கின்றனர் அதிகாரிகள்.
காவல்துறையின் உச்ச அதிகாரிகள் கலந்துகொள்ளும் விழாவில் இப்படியொரு நிலையெனும் போது, விஜய்யின் புகைப்படத்தை தூக்கிக் கொண்டு அரசுப் பள்ளிகளுக்கு போய் குழந்தைகளை சினிமா பாட்டு பாடவைக்கும் தவெகவின் நிர்வாகிகள் செய்யும் அடாவடி செயல் நமக்கு பெரிய ஆச்சர்யத்தை கொடுக்க வேண்டியதில்லை.
நிதியமைச்சர் வெள்ளை அறிக்கையில் விஜய் படங்களின் ஆடியோ லாஞ்ச் பாணியில் குட்டி ஸ்டோரி வாசிக்கிறார். அந்த உரையை உருவாக்கிய அதிகாரிகள் எந்த மனநிலையில் யாரை ஈர்க்க வெள்ளை அறிக்கையில் குட்டி ஸ்டோரியை சொருகினார்கள்? யார் இதையெல்லாம் அனுமதிப்பது? எல்லாம் விஜய்யிஸ பாணியில் தானாக நடக்கிறது.
இதோ, இன்று சட்டப்பேரவையில் மேகதாது அணை குறித்து முதல்வர் விஜய் ஒரு வார்த்தையை கூட தன்னுடைய உரையில் பேசவில்லை. அதிலும் ஓர் அரசியல். அவையிலும் திமுக உறுப்பினர்கள் முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த விமர்சனங்களுக்கு மட்டும்தான் முதல்வர் பதிலளித்திருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி உட்பட, தவெகவின் கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட்டுகள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்தும் பிரச்னைகள் குறித்தும் கூட முதல்வர் பேசவில்லை. இனியும் பேசமாட்டார். ஏனெனில், பேசினால் அவர் இருக்கும் நிலையிலிருந்து இறங்கிவிடுவார் என்று நினைக்கலாம்.

அவர் படங்களை போல அவருக்கு நிகரான எதிரிகள் என அவர் நினைப்பவரிடம் மட்டும்தான் மோத விரும்புகிறார்.
இவையெல்லாம்தான் விஜய்யிஸம். இதற்கு ஈடாக மற்ற எதிர்க்கட்சியனர் அரசியல் செய்வது அத்தனை எளிதல்ல. இன்றைய கூட்டத்தின் முடிவில் முதல்வர் விஜய் ஒரு ஆக்சனை செய்தார் பாருங்கள். தன்னுடைய படங்களின் இடைவேளையில் வில்லன்களுக்கு எதிராக விஜய் செய்யும் மேனரிசங்களை போல அத்தனை பெர்பக்ட்டாக இருந்தது அது.
அரசியல்வாதி ஆன பிறகும் சினிமா வழி தன்னிடம் இருக்கும் 'கமர்ஶியல் வேல்யூ'க்களை விஜய் விட்டுக் கொடுக்கவில்லை. இந்த கமர்ஷியல்த்தனத்தின் இன்னொரு பெயர்தான் விஜய்யிஸம். இந்த ஆட்சி அதை மையமாக வைத்தும் ஓடுகிறது. விஜய்யை மீறி அவரை தாண்டி ஒரு கமர்ஷியலான அரசியலை கைகொள்வது மற்ற அரசியலர்களுக்கு பெரும் சவாலான காரியமாகவே இருக்கும். ஆரோக்கியமோ இல்லையோ இன்றைக்கு இந்த விஜய்யிஸ அரசியல் மைய இடத்தை பிடித்திருக்கிறது. இதன் அரசியல் விளைவுகளை எப்படியானது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.!














