செய்திகள் :

CPI: நூறாண்டைத் தொட்ட சிபிஐ; இந்தியாவில் வளர்ந்தது எப்படி? - வரலாறு சொல்லும் தகவல்!

post image

இந்தியாவில் பொதுவுடைமை சித்தாந்தம், என்னதான் 1800-களின் இறுதியில் நுழைந்திருந்தாலும், அதன்பின்னர் நிறைய கம்யூனிஸ்ட் கட்சிகள் தோன்றியிருந்தாலும், பொதுவுடைமையை இந்தியாவில் படரச் செய்ததில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு மிகவும் முக்கியமானது எனலாம். இந்திய அரசியல் வரலாற்றை கம்யூனிஸ்ட் கட்சியை நீக்கிவிட்டு எழுத முடியாது. இன்றுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI)யின் நீண்ட நெடிய, இத்தனை ஆண்டுக்கால இந்தியப் பயணத்தில் நிறைய ஒடுக்குமுறைகளைத் தாண்டியே மக்களிடம் பொதுவுடைமைக் கருத்துகளைக் கொண்டு சேர்த்தது. அதன் பயணத்தை விரிவாகப் பார்ப்போம்.

ரஷ்யப் புரட்சி
ரஷ்யப் புரட்சி

பிரெஞ்சுப் புரட்சி (1789) நெப்போலியன் போர்களுக்குப் (1796 - 1815) பிறகு, ஐரோப்பா முழுவதும் பழைய அரசர் ஆட்சியை ஆதரிக்கும் முடியாட்சிவாதிகள் - நவீன மாற்றங்களை விரும்பும் குடியரசுவாதிகள் என இரண்டாகப் பிளவுபட்டது. இதுதான் பின்னர் வலதுசாரி - இடதுசாரி என அழைக்கப்படுவதன் தொடக்கமாகும்.

இந்தக் காலக்கட்டங்களில் தொழில்மயமாதல் பொருளாதார ரீதியாக செழிப்பை உருவாக்கிய அதே வேளையில், அது ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த ஒரு சமத்துவமற்ற சமூகத்தையும் உருவாக்கியது. ஐரோப்பாவின் இந்த அரசியல் - பொருளாதாரச் சூழலில், இங்கிலாந்தில் குடியேறிய ஜெர்மானிய தத்துவஞானியான கார்ல் மார்க்ஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்காக ஒரு அறிக்கையைத் தயாரித்தார்.

அந்த அறிக்கையில், "ஐரோப்பாவைத் தலைமையிடமாகக் கொண்ட முதலாளித்துவ அமைப்பு, முரண்பாடுகளின் சுமையால் வீழ்ச்சியடையப் போகிறது. எனவே முழு மனித சமூகத்தையும் முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாற்றியமைக்கும் பணியை அந்த வீழ்ச்சி மேற்கொள்ளும். அதைத் தொடர்ந்து ஒரு நீதியான மற்றும் சிறந்த சோசலிச அமைப்பு உருவாகும். மேலும், இயற்கையாகவே, இந்த மாற்றம் முதலாளித்துவத்தின் கோட்டையான மேற்கு ஐரோப்பாவில் முதலில் நிகழும்" என அவர் கணித்திருந்தார்.

கார்ல் மார்க்ஸ்
கார்ல் மார்க்ஸ்

அதேநேரம், இந்தியாவின் அன்றைய பிரிட்டிஷ் காலனியாட்சியில், பல்வேறு பகுதிகளில் பல கம்யூனிச குழுக்கள் இரகசியமாக இயங்கி வந்தன. வங்கத்தில் அனுஷீலன் சமிதி, ஜுகந்தர், முசாபர் அகமது குழு முதலான குழுக்களும், மும்பையில் டாங்கே தலைமையிலான குழுவும், சென்னையில் சிங்காரவேலர் தலைமையிலான குழுவும், ஐக்கிய மாகாணத்தில் சௌகத் உஸ்மானி தலைமையிலான குழுவும், பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணத்தில் குலாம் உசைன் தலைமையிலான குழுவும் இயங்கி வந்தன.

இந்த சூழலில் கார்ல் மார்க்ஸ் எதிர்பார்த்த முதல் புரட்சி ஏற்பட்டது. ஆனால் ஐரோப்பாவுக்கு பதிலாக முதல் வெற்றிகரமான சோசலிசப் புரட்சி 1917-ல் ரஷ்யப் பேரரசில் நிகழ்ந்தது. இந்தியாவில், அன்றைய பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்த பல்வேறு சக்திகளுக்கு ரஷ்யப் பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியின் வெற்றி, புதிய பார்வையையும் புதிய நம்பிக்கையையும் அளித்தது.

அதனால் பிரிட்டிஷ் காலனிய அரசு எல்லா வகையான கம்யூனிச குழுக்களையும் முற்றாகத் தடை செய்ததோடு, ரஷ்யாவின் லெனின் தலைமையிலான போல்ஷிவிக் (ரஷ்யப் புரட்சி) சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட கம்யூனிஸ்ட் குழுக்களை மிகத் தீவிரமாக ஒடுக்கியது.

விளாடிமிர் லெனின்
விளாடிமிர் லெனின்

ரஷ்யப் புரட்சி, இடைக்கால முடியாட்சி, நவீன முதலாளித்துவம், ஏகாதிபத்தியத்திற்கு எதிரானது. எனவே, ஏகாதிபத்திய ஆதிக்கத்தின் கீழ் துன்பப்பட்ட ஐரோப்பிய அல்லாத நாடுகளில் இந்தப் புரட்சி பெரும் ஈர்ப்பைப் பெற்றது மிக இயல்பானதே. ஐரோப்பிய அல்லாத நாடுகள் முழுவதும் சோவியத்துகளும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தோன்றின. அதன் அடிப்படையில்தான் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் ரஷ்யப் புரட்சி மற்றும் அதன் முக்கியத் தலைவரான விளாடிமிர் லெனினால் ஆழமாக ஈர்க்கப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உருவாக்கம் குறித்து இன்னும் விரிவாகப் பேசுவதானால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவாக நேரடியாக வழிவகுத்த மூன்று அரசியல் நீரோட்டங்கள் இருந்தன.

1. மார்க்சியப் புரட்சியாளரான எம். என். ராய்:

எம்.என்.ராய் முதல் உலகப் போரின் போது அமெரிக்கா, மெக்சிகோ, பெர்லின் பின்னர் சோவியத் யூனியனில் சில ஆண்டுகள் தங்கி, இந்தியாவின் விடுதலைக்காக நிதி மற்றும் ஆயுதங்கள் போன்ற வளங்களைத் திரட்ட முயன்றார்.

எம். என். ராய்
எம். என். ராய்

1920-ம் ஆண்டு சோவியத் தலைமையிலான கம்யூனிஸ்ட் இன்டர்நேஷனல் (கோமின்டர்ன் - Comintern) அமைப்பின் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் எம்.என்.ராய் இந்தியப் பிரதிநிதியாகத் தேர்வு செய்யப்பட்டார். அந்தக் கூட்டத்தில் காலனித்துவ நாடுகளில் நிலவும் ஒடுக்குமுறைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

மேலும், காலனித்துவ நாடுகளில் உள்ள கம்யூனிஸ்டுகள் முதலில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதற்காக அவர்கள் அனைத்து ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளுடனும் ஒரு தற்காலிகக் கூட்டணியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கோமின்டர்ன் அறிவுறுத்தியது. அடுத்த ஆசியப் பிரதிநிதிகளின் கூட்ட கூட்டம், சோவியத் துர்கிஸ்தானில் இருந்த தாஷ்கண்டில் ஏற்பாடு செய்யவும் கோமின்டர்ன் தீர்மானித்தது.

அதன் அடிப்படையில் வீரேந்திரநாத் சட்டோபாத்யாயா தலைமையில் பெர்லினிலும், ராஜா மகேந்திர பிரதாப் தலைமையில் காபூலிலும், புலம்பெயர்ந்த இந்தியப் புரட்சியாளர்களின் பிற குழுக்களும் செயல்பட்டு வந்தன.

2. இந்தியாவின் சில பகுதிகளில் சுதந்திர இடதுசாரி குழுக்கள் தோன்றின.

அதிகாரப்பூர்வமாக கம்யூனிஸ்ட் கட்சிகள் செயல்படவில்லை என்றாலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கம்யூனிஸ்ட் ஒரு அமைப்பாக செயல்பட்டது. குலாம் ஹுசைன் தலைமையில் லாகூரிலும், எஸ். ஏ. டாங்கே தலைமையில் மும்பையிலும், முசாபர் அகமது தலைமையில் கொல்கத்தாவிலும், சிங்காரவேலு எம். செட்டியார் தலைமையில் மெட்ராஸிலும் புலம்பெயர்ந்த இந்தியப் புரட்சியாளர்களின் குழு செயல்பட்டன. மிகவும் திறமையான அரசியல் பணிக்காக ஒருவருக்கொருவர் ஒருங்கிணைப்பை வளர்த்துக்கொள்ள வாய்ப்பைத் தேடிக்கொண்டிருந்தனர்.

ஏஐடியுசி
ஏஐடியுசி

3. 1920-களுக்கு முன்பே தொழிலாளர் மற்றும் விவசாயிகளுக்கான அமைப்புகள் உருவாகியிருந்தன.

1920-ல் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (ஏஐடியுசி) என்ற அமைப்பு லாலா லஜபதி ராய் தலைமையில் உருவாக்கப்பட்டது.

இந்த மூன்று அரசியல் நீரோட்டங்களும் இறுதியில் சங்கமித்த இடம்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவாகக் காரணமாக அமைந்தது.

கோமின்டர்ன் கூட்டத்தில் முடிவு செய்தபடி ஆசியப் பிரதிநிதிகளின் கூட்டத்தைத் தாஷ்கண்டில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. அப்துல் ரப், திருமல் ஆச்சார்யா ஆகிய இரண்டு இந்தியப் புரட்சியாளர்கள் ஏற்கனவே மத்திய ஆசியாவில் செயல்பட்டு வந்தனர். அவர்கள், ராஜா மகேந்திர பிரதாப் மற்றும் எம். என். ராய் ஆகியோருடன் இணைந்து, 1920-ல் தாஷ்கண்டில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை அமைக்க முடிவு செய்தனர். அதற்கான ஒப்புதலையும் கோமின்டர்னின் அமைப்பிடம் பெற்றிருந்தனர்.

சிங்காரவேலர்
சிங்காரவேலர்

இந்த வெளிநாட்டில் உருவாக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து இந்தியாவை விடுவிக்கவும், சோசலிசத்திற்கான சூழலை உருவாக்கவும் தீர்மானித்தது. இருப்பினும், தாஷ்கண்டில் அமைக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐரோப்பாவில் செயல்பட்டு வந்த மற்ற இந்தியப் புரட்சிக் குழுக்களின் ஆதரவு கிடைக்கவில்லை. மேலும், இந்தியாவில் செயல்பட்டு வந்த புரட்சிக் குழுக்களுடனும் அந்தக் கட்சிக்கு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை.

இதற்கிடையில், 1923-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகப் பிரிட்டிஷ் அரசு 'கான்பூர் போல்ஷிவிக் சதி' வழக்கைத் தொடர்ந்தது. பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிராகச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, எஸ். வி. காடே, எஸ். ஏ. டாங்கே, முசாபர் அகமது ஆகிய மூன்று கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில்தான், லாகூர், மும்பை, கொல்கத்தா, மெட்ராஸில் செயல்பட்டு வந்த இந்திய கம்யூனிச குழுக்கள், இன்றைய உத்தரப் பிரதேசத்தில் உள்ள கான்பூரில் டிசம்பர் 26, 1925-ல் சந்தித்து ஒரு தேசிய மாநாட்டை ஏற்பாடு செய்ய முடிவு செய்தன. அந்த கான்பூர் மாநாட்டில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

காங்கிரஸ் (Congress)
காங்கிரஸ் (Congress)

மேலும், அந்த மாநாட்டில் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் குடியரசை உருவாக்குவதும், பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து இந்தியாவை விடுவிப்பது மற்றும் உற்பத்தி மற்றும் விநியோகச் சாதனங்களைச் சமூகமயமாக்குவது ஆகியவைதான் இந்தக் கட்சியின் முக்கிய நோக்கங்களாகப் பட்டியலிட்டனர்.

இந்த வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1920-ல் தாஷ்கண்டில் உருவாக்கப்பட்டதா? அல்லது 1925-ல் கான்பூரில் உருவாக்கப்பட்டதா? என்ற குழப்பம் நீடிக்கிறது.

1964-ம் ஆண்டு காங்கிரஸ் ஆதரவு - எதிர்ப்பு, சீன சோவியத் எதிர்ப்பு - ஆதரவு என்ற கருத்து வேறுபாடு காரணமாகக் கம்யூனிஸ்ட் கட்சி 'இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)' என்றும், 'மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ (எம்))' என்றும் இரண்டாகப் பிளவுபட்டது. இந்தப் பிளவுக்குப் பிறகுதான் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்கம் எது என இரு கட்சிகளுக்குள்ளும் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.

சிபிஐ (எம்) கோமின்டர்னின் ஒப்புதலுடன் 1920-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தாஷ்கண்ட் கூட்டத்தை வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்கப் புள்ளியாகக் கருதுகிறது.

சிபிஐ(எம்)

சிபிஐ 1925-ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட கான்பூர் மாநாடு முற்றிலும் புதிய முயற்சி என்றும், அதற்குச் சித்தாந்தம் தாண்டி வெளியிலிருந்து பெரிய அளவில் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் வாதிடுகிறது. மேலும் இந்தியாவில் அப்போது வளர்ந்து வந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்துடன் பெரிதும் தொடர்புடையதாக இருக்கிறது என்றும், எனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்கப் புள்ளி 1925-தான் எனவும் உறுதியாக தெரிவிக்கிறது.

1925 - 28 காலகட்டத்தில், கம்யூனிஸ்டுகள் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் கட்சிகளை (WPPs) உருவாக்குவதில் தீவிரமாகச் செயல்பட்டனர். ஆனால், காங்கிரஸை எவ்வாறு கையாள்வது என்ற தீர்க்கப்படாத கேள்வியால் குழப்பமான சூழல் நிலவியது.

காங்கிரஸுடன் இருந்துகொண்டே அதன் பயணத்தை சோசலிசத் திசையில் மாற்றுவதற்கு முயற்சி செய்வதா? அல்லது அதற்கு மாற்றாக மக்கள் முன்னணியை உருவாக்குவதா? என்ற குழப்பம் நிலவியது. மாற்றத்திற்கான அரசியல் அல்லது மாற்றுக்கான அரசியல் இதில் எதைத் தேர்வு செய்வது என்பதில் வந்து சிக்கினர் கம்யூனிஸ்ட் தலைவர்கள்.

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம்
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம்

1929-ல், கம்யூனிசத் தலைவர்கள் மீரட் சதி வழக்கில் கைது செய்யப்பட்டனர். அப்போதே கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டதுடன், அதன் தலைவர்கள் பலர் நீண்ட கால சிறைத்தண்டனை, நாடு கடத்தல் போன்ற தண்டனைக்கு ஆளானார்கள்.

அதற்குப் பிறகுதான் 1930-களில், கம்யூனிஸ்டுகள் காங்கிரஸுக்குள் நுழைந்தனர். அதைத் தொடர்ந்து, 1934-ல் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி (CSP) மற்றும் பிற ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளுடன் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கினர். இருப்பினும், இந்த ஐக்கிய முன்னணி முயற்சி 1939-ல் முறிந்தது.

1945-க்குப் பிந்தைய காலகட்டத்தில், கம்யூனிஸ்டுகள் முக்கியமான விவசாயப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினர். வங்காளத்தில் விவசாய விளைச்சலில் பயிரிடுவோருக்கு அதிக பங்கு கோரி நடைபெற்ற தெபாகா இயக்கம், ஹைதராபாத் சமஸ்தானத்தில் பயிரிடுவோருக்கு நிலத்தை மறுபகிர்வு செய்யக் கோரி நடைபெற்ற தெலுங்கானா போராட்டம் ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பொதுமக்களின் தன்னிச்சையான போராட்டங்களுக்கும் அவர்கள் ஆதரவளித்தனர்.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

சுதந்திரத்திற்குப் பிறகு, கம்யூனிச இயக்கத்தின் ஆற்றல்கள் இரண்டாகப் பிரிந்தன. ஒரு பிரிவு தலைமறைவான, வன்முறைப் புரட்சிப் பாதையைத் தேர்ந்தெடுத்தது. மற்றொரு பிரிவு தேர்தல் பாதை வழியாக அரசு அதிகாரத்தைக் கைப்பற்ற நாடாளுமன்ற ஜனநாயகப் பாதையைத் தேர்ந்தெடுத்தது. அதன் பலனாக கேரளா, மேற்கு வங்கம், திரிபுராவில் அரசுகளையும் அமைத்தது. அவ்வப்போது மத்தியிலும் மற்ற முக்கிய கட்சிகளுடனும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

கம்யூனிஸம் ஒரு தோல்வியடைந்த சித்தாந்தம், அல்லது காலத்து ஏற்றதல்ல, நடைமுறை சாத்தியமற்றது என பல்வேறு குற்றச்சாட்டுகள் கம்யூனிசம் மீது இருந்தாலும், இப்போதும் கம்யூனிஸத்தை ஓரங்கட்டமுடியாது என்பதுதான் யதார்த்தம். அதற்கு காரணமும் இருக்கிறது.

இந்த நவீன உலகம் அழுத்தமானக் கோடால் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. பயன் அனுபவிப்பவர்கள் கோட்டிற்கு மேலேயும், பாதிக்கப்பட்டவர்கள் கீழேயும் அமைந்துள்ளனர் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

கம்யூனிஸம் என்றப் பொதுவுடைமை கொள்கை, சமூகப் படிநிலையில் பின்தங்கியிருப்பவர்களின் பக்கம் நிற்கிறது. அது சலுகை மறுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக, ஒரு சிறந்த தத்துவார்த்த தலையீடாக போராடுகிறது. இந்த ஒரு காரணமே இந்த காலாத்துக்கும் கம்யூனிஸ்ட் கட்சி பொருத்தமான கட்சி என்பதற்கு போதும்.

திருவனந்தபுரம்: மேயரானார் பாஜக-வின் ராஜேஷ் - முன்னாள் பெண் டிஜிபி-க்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்?

கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 9 மற்றும் 11-ம் தேதிகளில் நடைபெற்றது. கடந்த 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதில் கேரளாவில் மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் 4-ல் காங்கிரஸ் கூட்டணியும், ஒ... மேலும் பார்க்க

"திமுக அரசின் துரோகப் பட்டியல் நீள்கிறது"- ஆசிரியர்கள் கைதுக்கு அன்புமணி கண்டனம்

சென்னையில் போராட்டம் நடத்திய ஆசிரியர்களைக் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் பல மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பள்ளிக்கல்வித் த... மேலும் பார்க்க

சேலம்: `பாமக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு அன்புமணியால் அச்சுறுத்தல்!' - ராமதாஸ் தரப்பு புகார்

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில், கட்சியின் சிறப்பு செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சேலம் மாவட்டத்தில் வரும் 29ம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என ... மேலும் பார்க்க

தமிழ்ச் சமூக பாட்டாளி வர்க்கத்தின் நூற்றாண்டு ஒளி! - தோழர் நல்லகண்ணு பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!

'அதிகாரம் கொடியது!'இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலம் அது. நல்லகண்ணு உட்பட கட்சியின் தோழர்கள் அத்தனை பேரும் தலைமறைவாக இருந்தார்கள். கிராமம் கிராமமாக பதுங்கி நடந்து நடந்தே விரல்கள் கொ... மேலும் பார்க்க

``தமிழ்நாடு சிறந்த மாநிலம்தான்... மேடையில் விஜய் செய்த செயல்..." - ஆற்காடு நவாப் பேட்டி

தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் திமுக ஆட்சியைக் கடுமையாக விமர்சிக்கிறார். குறிப்பாக தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மாறியிருக்கிறது என்று கடுமையாகச் சாடுகி... மேலும் பார்க்க

6000 டன் எடை கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்; 3,500 கி.மீ. பாயும் K-4 ஏவுகணை|சோதனை நடத்திய இந்தியா

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து தாக்கும் வகையில் k - 4 எனும் ஏவுகணையை இந்திய பாதுகாப்புத்துறை வடிவமைத்திருக்கிறது.அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான 'ஐ.என்.எஸ். அரிகாட்'டில் (INS Arighat) இருந்த... மேலும் பார்க்க