Stephen: "ஒரு Shortfilm-ல ஆரம்பிச்ச கதை தான் Stephen" - Gomathi Shankar & Mithun...
DMK : 'வார்த்தைக்கு வார்த்தை சாதிப் பெருமிதம்' - இதுதான் உங்க சமூக நீதியா துணை முதல்வரே?
ஈரோட்டின் எழுமாத்தூரில் புதிய திராவிட கழகம் கட்சியின் சார்பில் `வெல்லட்டும் சமூக நீதி' என ஒரு மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ.30) நடத்தப்பட்டிருக்கிறது. மாநாட்டின் பெயர் வெல்லட்டும் சமூக நீதி, ஆனால், அதை நடத்தியவரின் பெயர் 'ராஜ் கவுண்டர்'. அந்த மாநாட்டில் கலந்துகொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வார்த்தைக்கு வார்த்தை 'ராஜ் கவுண்டர்...ராஜ் கவுண்டர்...' என விளித்து அந்த நபரை புல்லரிக்க வைத்தார்.

மூச்சுக்கு மூச்சு சமூக நீதி பேசும் திமுகவின் வருங்காலமாக அடையாளம் காட்டப்படும் உதயநிதி இப்படி சாதியை பிரதானப்படுத்தும் ஒரு கட்சியின் மாநாட்டில் கலந்துகொண்டது மிகப்பெரிய முரண்.
மாநாட்டை நடத்திய அந்த ராஜ் மேம்போக்கான நுனிப்புல் மேயும் அரசியல் புரிதலை கொண்டிருப்பவர். 'சாதி சான்றிதழை ஏன் ஸ்கூல்லயே கேட்குறீங்க. சாதி சான்றிதழை முதல்ல ஒழியுங்க. அப்போதான் சாதி ஒழியும்.' என வாட்ஸ் அப் பார்வர்ட் புரட்சிகளை பல பேட்டிகளில் பேசியிருக்கிறார். அதே நபர்தான், 'எல்லாருக்கும் ஒரு அடையாளம் உண்டு. எங்களோட அடையாளத்தை நாங்க பெருமையா சொல்லிக்கிறோம்.' என மீசையையும் முறுக்குகிறார். 'ஆண்ட பரம்பரை மீண்டும் ஆளப்போகிறோம்.' என இதே கட்சியின் கடந்த மாநாட்டில் இளைஞர்கள் மத்தியில் சாதிய உணர்வைத் தூண்டிவிடும் வகையில் பேசுகிறார்.

இதே ராஜ் என்கிற நபர் நடத்திய முந்தைய மாநாடுகளில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களும் மேடையேறி பேசியிருக்கின்றனர். தேர்தல் அரசியலில் சாதிய வாக்குகளை குறிவைத்தல் ஒரு உத்தி. ஆனால், அதற்காக நேற்று பேசியதற்கே முரணாக இன்றைக்கு பேசக்கூடாதல்லவா? அதைத்தான் திமுகவும் உதயநிதியும் செய்திருக்கிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த அந்த மாநாட்டில் உதயநிதியை வைத்துக்கொண்டே, 'பவானிசாகர் தொகுதி தனித்தொகுதியாக மாற்றப்பட்டதிலிருந்து எங்கள் சமூகம் முற்றிலுமாக அரசியலிலிருந்து புறக்கணிக்கப்பட்டுவிட்டது.' என பு.தி.க கட்சியின் தலைவர் ராஜ் பேசுகிறார். சமூக நீதி உதட்டளவில் மட்டுமே உச்சரித்துவிட்டு அரைகுறையாக அரசியலை புரிந்திருப்பவர் மட்டுமே பேசும் பேச்சு இது. சாதியக் கட்டமைப்புகளில் இறுகிப் போய் காலங்காலமாக ஒடுக்கப்படுவதிலிருந்து வெளி கொண்டு அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கான ஜனநாயக வழிதான் தனித் தொகுதிகள்.

தமிழகத்தில் 46 SC/ST தனித்தொகுதிகள் இருக்கின்றன. இந்த தனித்தொகுதிகளைத் தவிர்த்து பொதுத் தொகுதிகளில் எத்தனை தலித்துகளை கட்சிகள் நிறுத்துகின்றன என்று பாருங்கள். சொற்ப அளவில்தான் இருக்கும். அப்படியே தனித்தொகுதிகளில் வென்று வருபவர்களுக்கு அமைச்சரவையில் மட்டும் உரிய பிரதிநிதித்துவம் இருக்கிறதா? அதுவும் கிடையாது. ஒரு கட்டாயமான விதிமுறையை ஏற்படுத்தியிருக்கும்போதே அதிகாரத்தை நோக்கி தலித்துகள் நகர்வது அத்தனை சிரமமாக இருக்கிறது. இன்னமும் பல தலித் ஊராட்சி மன்றத் தலைவர்களால் தங்களின் இருக்கையில்கூட அமர முடியாத நிலை இருப்பதை யாராலும் மறுக்கமுடியாது. இதெல்லாம் சமூகநீதி பேசும் திமுகவுக்கும் துணை முதல்வர் உதயநிதிக்கும் தெரியாதா என்ன?
ராஜ் பேசிய பிறகு மைக்கைப் பிடித்த உதயநிதி அவர் பேசியதிலுள்ள அரசியல் புரிதலற்றத் தன்மையை அங்கேயே சுட்டிக்காட்டியிருக்க வேண்டாமா? தேர்தல் வருகிறது. கொங்குப் பகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் இடைநிலை சாதியின் வாக்கு வங்கியில் ஓட்டை விழுந்து விடக்கூடாது என பம்முகிறீர்கள். சரி, அதுகூட இருக்கட்டும். ஆனால், அந்த மேடையில் உதயநிதி கிட்டத்தட்ட 25 நிமிடங்களுக்கு பேசியிருந்தார். அந்த 25 நிமிடத்தில் 19 முறை அத்தனை வாஞ்சையோடு 'ராஜ் கவுண்டர்...ராஜ் கவுண்டர்...' சாதிய பின்னொட்டோடு அவரை விளித்திருந்தார். இடையில் உதயநிதிக்கு ஒரு பெருமிதம் வேறு. அதாவது ராஜ் கவுண்டர் 2010 லிருந்து 2013 வரைக்கும் திமுக இளைஞரணி உறுப்பினராக இருந்தாராம். அதைவிடுங்கள், இப்படி கூறிவிட்டு அடுத்ததாக 'பெரியாரின் சமூக நீதி மண்ணான ஈரோட்டில் ராஜ் கவுண்டர் இந்த மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறார்' என புல்லரித்துப் போய் பேசியிருந்தார்.

இளைஞர் கூட்டத்துக்கு முன்பாக அவர்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் சாதிப் பெயரை அழுத்தி அழுத்தி அத்தனை முறை கூறுகிறோமே என்கிற உறுத்தல் உதயநிதிக்கு இல்லவே இல்லையா? எனில், எப்படி பெரியாரின் வழி சமூக நீதிக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறோம் என மேடைக்கு மேடை பேச முடிகிறது?
1929 இல் செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை இயக்க மாநாட்டில் பெரியார் உட்பட அந்த இயக்கத்தின் தலைவர்கள் பலரும் தங்கள் பெயருக்குப் பின்னால் உள்ள சாதிய பின்னொட்டைத் துறந்தனர். 'மக்களுடைய பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே அவர்களது குணம், அறிவு, தன்மை முதலியவை ஒன்றும் தெரியாமலே அவர்களை பிரித்து வேற்றுமையாய் நினைக்கத் தகுந்த மாதிரியில் அர்த்தமற்ற பிரிவினைகளைக் காட்டும் வித்தியாசங்கள் ஒழிந்தாலொழிய நமது நாட்டில் மக்கள் ஒன்றபட்டு ஒரே லட்சியத்திற்குழைத்து வாழ முடியாதாகையால் அவ்வித்தியாசங்களைக் காட்டும் பெயர்களும் குறிகளும் ஒழிக்கப்பட வேண்டும் என்பது ஒற்றுமையையும் சமத்துவத்தையும் விரும்பும் யாவராலும் ஒப்புக் கொள்ளப் படத்தக்கதேயாகும்.' என அந்த சுயமரியாதை இயக்க மாநாட்டைப் பற்றி குடி அரசு இதழில் வெளியான தலையங்கம் கூறுகிறது.

பெயருக்குப் பின்னால் சாதியப் பின்னொட்டை சேர்க்காமல் இருப்பது தமிழகத்தின் பெருமை. ஒடுக்கப்பட்டவர்களின் மேம்பாட்டுக்கும் சாதியற்ற சமநிலையை நோக்கிய நீண்ட பயணத்துக்குமாக நம்பிக்கையோடு தமிழகமே எடுத்து வைத்திருக்கும் ஓரடி. அந்த ராஜ் தன்னை ஆண்ட பரம்பரை என்கிறார். சாதிய ஆதிக்கத்தோடு பேசுகிறார். அவரால் தன்னுடைய சாதிப் பெயரை தன்னுடைய பெயருக்கு பின்னால் சேர்த்து கொள்ளமுடியும். துணை முதல்வரும் அதை அங்கீகரித்து பேச முடியும். ஆனால், காலங்காலமாக சாதியின் பெயரால் ஒடுக்கப்படுகிற ஒரு மக்கள் கூட்டம் இங்கே இருக்கிறதே? அவர்களால் தங்களின் சாதிப் பெயரை பெயருக்குப் பின்னால் சேர்த்துக் கொள்ள முடியுமா?
அப்படி போட்டுக் கொண்டால் அவர்களை மீண்டும் அதே சாதியின் பெயரால் இந்த சமூகம் ஒடுக்குமே. இதையெல்லாம் பேசித்தானே திராவிட இயக்கங்கள் சமூக நீதியை வளர்த்தன. நூறாண்டுகளாக ஒவ்வொரு அடியாக முன்னிழுத்து செல்லப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த சமூக நீதித் தேரை திராவிட இயக்கத்தின் வருங்காலம் எனப் போற்றப்படும் உதயநிதியே பின்னிழுத்து செல்ல முயல்வது பெருங்கொடுமை.

முழுக்க முழுக்க தேர்தல் லாபத்துக்காக மட்டுமே திமுகவும் உதயநிதியும் இப்படி ஒரு அரசியலைக் கையிலெடுக்கிறார்கள் என்பதை மறுக்கவே முடியாது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் உள்ள 57 தொகுதிகளில் 17 தொகுதிகளில் மட்டுமே திமுக கூட்டணி வென்றிருந்தது. கோவை, ஈரோடு, சேலம் என கொங்கு மண்டலத்தின் பெரும்பாலான பகுதிகள் அதிமுக வசமே இருந்தது. ஐந்தாண்டுகள் ஆட்சி செய்து விட்டு மக்கள் மத்தியில் 'Anti incumbency' மனநிலையில் தேர்தலுக்குச் செல்கையில், ஆட்சியை தக்கவைக்க திமுகவுக்கு கொங்கு மண்டலம் ரொம்பவே முக்கியம். 'உடன்பிறப்பே வா...' என முதல்வர் நடத்தி வரும் ஒன் டு ஒன் நிர்வாகிகள் சந்திப்பில் கொங்கு மண்டலத்தில் பெரும் வெற்றியை பெற்றுத்தர வேண்டுமென செந்தில் பாலாஜிக்கு முக்கிய அசைன்மென்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த சந்திப்பு நடந்த சில நாட்களிலேயே உதயநிதியை இப்படியொரு மாநாட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் செந்தில் பாலாஜி.
எந்தவொரு சமூகத்துக்கும் அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தை கேட்க அத்தனை உரிமையும் இருக்கிறது. ஆனால், அதை சாதியப் பெருமிதமாக முன்னிலைப்படுத்தி இளைஞர்களுக்கு கொம்பு சீவி விடுவதை ஏற்கவே முடியாது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு, 'சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அனைத்து மக்களுக்குமான உரிய பிரதிநிதித்துவத்தை வழங்க முயற்சி செய்வோம்.' என துணை முதல்வர் பேசியிருந்தால் அது ஆரோக்கியமானதாக இருந்திருக்கும்.

சனாதனம் பற்றிப் பேசி இந்தியாவின் பல பகுதிகளில் வழக்கை எதிர்கொண்டவரிடமும் கட்சியின் இளைஞரணிக்காக அறிவுத்திருவிழா நடத்தியவரிடமும் அதைத்தான் மக்கள் எதிர்பார்த்திருப்பர். அதை விட்டுவிட்டு சக சாதி சங்கத் தலைவர் இன்னொரு சாதி சங்கத் தலைவரை விளிப்பதைப் போல வார்த்தைக்கு வார்த்தைக்கு சாதிப் பெயரைச் சொல்லி அழைத்து, சாதிய மனநிலைக்கு மேலும் தூபம் போட்டது சமூக நீதிக்கு நேர்ந்த இழுக்கு.


















