Delimitation: "நாங்கள் நடத்த விடமாட்டோம்" - தொகுதி மறுவரையறைக்கு எதிராக குரல் கொ...
Doctor Vikatan: ஆரோக்கியமான உடல்வாகு; ஆனாலும், அடிக்கடி சிறுநீர் வெளியேற்றம்; சாதாரணமானதா?
Doctor Vikatan: எனக்கு 43 வயதாகிறது. உடல் அளவில் மிகவும் ஆரோக்கியமாகவே இருக்கிறேன். ஆனாலும் எனக்கு சிறிதுநேரம் கூட சிறுநீரை அடக்க முடியாது. வெளியிடங்களுக்குச் சென்றாலும் என்னால் நீண்ட நேரத்துக்கு சிறுநீரை அடக்க முடியாது.
இயல்பிலேயே நான் நிறைய தண்ணீர் குடிக்கும் வழக்கம் கொண்டவள். இப்படி அடிக்கடி சிறுநீர் கழிப்பது சாதாரணமானதுதானா அல்லது ஏதேனும் பிரச்னையின் அறிகுறியாகஇருக்குமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பெண்களுக்கான சிறுநீரகவியல் சிகிச்சை மருத்துவர் நிவேதிதா.

அடிக்கடி சிறுநீர் கழிப்பது நல்லது என்றே பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் எவ்வளவு சிறுநீரை வெளியேற்றுகிறீர்கள் என்பது முக்கியம். துளித்துளியாக வெளியேற்றுவதோ, மிகக் குறைந்த அளவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதோ சரியானதல்ல.
நீங்கள் சிறுநீர் கழிக்க எவ்வளவு நேரம் கழிவறையில் செலவிடுகிறீர்கள், சிறுநீர் கழிக்கும்போது முக்குகிறீர்களா, வலி அல்லது எரிச்சலை உணர்கிறீர்களா என்பதெல்லாமும் கவனிக்கப்பட வேண்டும்.
தூக்கத்தில்கூட அடிக்கடி விழித்துக்கொண்டு சிறுநீர் கழிக்க முனைகிறீர்களா... பயணம் செய்யும்போதும் அடிக்கடி சிறுநீர் கழிக்க இடம் தேடுகிறீர்களா... இப்படியெல்லாம் இருந்தால் இதைச் சாதாரணம் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். எனவே, முதலில் மருத்துவரை அணுகி, அடிப்படையான சில பரிசோதனைகளைச் செய்து பார்க்க வேண்டும்.
நீரிழிவு இருக்கிறதா என்பதையும் பாருங்கள். ஒருவேளை உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டால் அதற்கான காரணம் அறிந்து சிகிச்சை பரிந்துரைக்கப்படும். மருந்துகள், உடற்பயிற்சிகள், வாழ்வியல் மாற்றங்கள் என இதற்குப் பல தீர்வுகள் உள்ளன.

'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பார்கள். அது தண்ணீருக்கும் பொருந்தும். அதிலும் இதயநோய் அல்லது சிறுநீரக நோய்கள் இருப்பவர்கள் தண்ணீர் குடிக்கும் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
சிறுநீரகம் தொடர்பான சில பாதிப்புகள் ஏற்பட்ட நிலையிலும் சிறுநீர் வெளியேறும் அளவு குறைவாக இருக்கும். அந்தப் பாதிப்பின் காரணமாக சிறுநீரகத்தால் போதுமான அளவு சிறுநீரை உற்பத்தி செய்ய முடியாமல் போகலாம். சிறுநீர் குறைவாக வெளியேறுகிறது... எனவே, தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும் என நினைத்து அதிகம் குடிப்பார்கள். அது பாதிப்பை இன்னும் தீவிரமாக்கும்.
தண்ணீர் நிறைய குடித்தால் சிறுநீரகக் கற்கள் வராது என நினைத்து சிலர் அளவுக்கதிகமாகக் குடிப்பார்கள். அதுவும் தவறு. நீங்கள் வெளியேற்றும் சிறுநீரின் நிறத்தைப் பொறுத்தே நீங்கள் போதுமான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்கிறீர்களா இல்லையா என்று தெரிந்துகொள்ளலாம். போதுமான அளவு நீர் அருந்தாதவர்களுக்கு சிறுநீர் அடர் நிறத்தில் வெளியேறும். தண்ணீரின் நிறத்திலேயே வெளியேறினால் பிரச்னையில்லை.
ஒருநாளைக்கு பகலில் 5-6 முறை சிறுநீர் கழிக்கலாம். இரவில் வயதானவர்கள் என்றால் ஒன்றிரண்டு முறை சிறுநீர் கழிக்கலாம். அதைவிட அதிகரிக்கும்போது கவனிக்க வேண்டும். சிறுநீர் வெளியேற்றம் தொடர்பான பிரச்னையை அலட்சியப்படுத்தவே கூடாது. அது சிறுநீரகத் தொற்று, சிறுநீரகச் செயலிழப்புவரை பல பிரச்னைகளுக்குக் காரணமாகலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



















