Ram Charan: ``நான் கண்டிப்பான தந்தைதான்!" - குழந்தைகள் பற்றி ராம் சரண்
Doctor Vikatan: மலிவு விலை மருந்தகங்களில் மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடலாமா?
Doctor Vikatan: என் வயது 62. ரத்தச் சர்க்கரை அளவு 290 இருக்கிறது. மாத்திரைகளும் இன்சுலினும் உபயோகித்துக் கொண்டிருக்கிறேன். மாத்திரைகளுக்குச் செலவு செய்ய முடியவில்லை. இந்நிலையில் நான் மலிவு விலை மருந்தகங்களில் மாத்திரை வாங்கிச் சாப்பிடலாமா... அதனால் பக்க விளைவுகள் வருமா? எனக்கு ஹீமோகுளோபின் அளவு 9ஆக உள்ளது சிகிச்சை தேவையா.... குழந்தைகள் அதிகமாகச் சத்தம் போட்டாலும் சண்டை போட்டாலும் ஒருவித படபடப்பு வருகிறது. இதற்கு என்ன செய்வது? எத்தனை மாதங்களுக்கொரு முறை சுகர் டெஸ்ட் செய்ய வேண்டும்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்.

மலிவு விலை மருந்தகங்களில் மாத்திரை, மருந்துகள் வாங்கிச் சாப்பிடலாம். அதில் எந்தப் பிரச்னையும் வராது. வசதியானவர்களேகூட இன்று மலிவு விலை மருந்தகங்களில் மாத்திரைகள் வாங்கிப் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். ஆனால், அப்படிச் சாப்பிடும்போது, அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என்றால், அதற்கேற்ப மருந்துகளின் அளவை அதிகரிக்க வேண்டியிருக்கும்.
ஹீமோகுளோபின் அளவு 9 இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இது மிதமான ரத்தச்சோகை (அனீமியா) பாதிப்பைக் குறிக்கும். அந்த அளவானது 8-க்குக் கீழ் குறைந்தால் அது தீவிர ரத்தச்சோகை பிரச்னை என அர்த்தம். எனவே, இந்தப் பிரச்னைக்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்காவது இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக்கொள்ளுங்கள். இரும்புச்சத்துள்ள உணவுப்பழக்கமும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். உதாரணத்துக்கு, பேரீச்சம்பழம், உலர் திராட்சை, கீரை வகைகள், புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, கறிவேப்பிலை சட்னி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அடர் பச்சை நிறத்தில் உள்ள கோவக்காய், பாகற்காய், குடமிளகாய் போன்ற காய்கறிகளில் இரும்புச்சத்து அதிகமிருக்கும். அசைவத்தில் ஈரல், இதயம், சிறுநீரகங்களில் இரும்புச்சத்து அதிகம் என்பதால் அவற்றைச் சாப்பிடலாம். குழந்தைகள் சத்தம் போட்டாலும் சண்டை போட்டாலும் ஏற்படுகிற படபடப்பு ஒருவித பதற்றத்தால் வருவதுதான். அதைப் பழகிக் கொள்வதுதான் ஒரே வழி. ஒருவேளை இதயத்துடிப்பு மிகவும் அதிகரிப்பது போல உணர்ந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனையும் சிகிச்சையும் பெறலாம்.
சர்க்கரை நோயைப் பொறுத்தவரை மாதந்தோறும் டெஸ்ட் செய்து கொள்வது அவசியம். போஸ்ட் பிராண்டியல் (Postprandial) எனப்படும் சாப்பாட்டுக்குப் பிறகான டெஸ்ட் மட்டுமேகூட போதுமானது. அது 200-க்குக் கீழ் இருந்தால் மருத்துவரைப் பார்க்க வேண்டாம். 200-க்கு மேல் போனால் மருத்துவ ஆலோசனை அவசியம். 3 மாதங்களுக்கொரு முறை செய்யப்படும் ஹெச்பிஏ1சி டெஸ்ட்டையும் (HbA1c test) தவறாமல் எடுத்துப் பார்க்க வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



















