AI மீது 'மாயக் காதல்': அமெரிக்கத் தொழிலதிபர் தற்கொலை - கூகுள் மீது வழக்கு
``பிரதமர் மோடிக்கு இது இறுதி எச்சரிக்கை" - முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் வீடியோ
நாளை மறுநாள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா குறித்து விவாதிக்கப்படும் எனக் கூறப்பட்டது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட வேண்டுமென்றால், தொகுதி மறுவரையறை நடத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``தேர்தல் பிரசாரப் பணிகளுக்கு இடையிலும், தமிழகத்திற்கு வரவிருக்கும் ஒரு மிகப்பெரிய பேராபத்து குறித்து எச்சரிக்க வேண்டியது எனது கடமை. ஏப்ரல் 16-ம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வலுக்கட்டாயமாகக் கூட்டப்படுகிறது.
தமிழகம் மற்றும் மேற்கு வங்கத் தேர்தல்கள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், 'தொகுதி மறுவரையறை' தொடர்பான அரசியல் சட்டத் திருத்தத்தை 'புல்டோசர்' வேகத்தில் நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துங்கள் என்று ஒன்றிய அரசு சொன்னதை ஏற்று, அதைக் கட்டுக்கோப்பாகச் செயல்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. ஆனால், சொன்னதைச் சரியாகச் செய்ததற்காகவே இன்று தமிழகத்தின் அரசியல் வலிமையைக் குறைத்து தண்டனை வழங்க ஒன்றிய அரசு துடிக்கிறது.
தென்மாநிலங்கள் இதனால் பாதிக்கப்படாது எனப் பிரதமர் நாடாளுமன்றத்தில் இதுவரை உத்தரவாதம் அளிக்கவில்லை. இது குறித்து முறையிட நேரம் கேட்ட தமிழக எம்.பி-க்களுக்குப் பிரதமரைச் சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை. சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களின் கேள்விகளுக்கும் பதிலே இல்லை. மறைமுகமாகத் திட்டமிடப்படும் இந்தச் சட்டத் திருத்தம் மாநில உரிமைகளைப் படுகொலை செய்யும் செயல் மட்டுமன்றி, அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயலாகும். ஒன்றிய பா.ஜ.க அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் இந்த நேரத்தில் ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன்.
Hon’ble Prime Minister, this is Tamil Nadu’s final warning.
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 14, 2026
மாண்புமிகு பிரதமர் அவர்களே, இது தமிழ்நாட்டின் இறுதி எச்சரிக்கை!#TNwillFightTNwillWinpic.twitter.com/v9wkYYM6MO
தமிழகத்தைப் பாதிக்கும் வகையிலோ அல்லது வட மாநிலங்களுக்குப் கூடுதல் அரசியல் வலிமையை வாரி வழங்கும் வகையிலோ ஏதேனும் நடந்தால், தமிழகம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. தமிழ்நாடு ஸ்தம்பிக்கும்; ஒவ்வொரு குடும்பமும் வீதிக்கு வந்து போராடும். தமிழக முதலமைச்சராக எனது தலைமையிலேயே மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும். தேர்தல் நேரம் என்பதால் எங்களது கவனம் திரும்பாது என நினைக்க வேண்டாம். இது வெறும் மிரட்டல் அல்ல. தமிழ்நாட்டின் எச்சரிக்கை.
திராவிட முன்னேற்ற கழகம் என்பது வெறும் தேர்தல் கட்சி அல்ல, அது ஒரு கொள்கை இயக்கம். மாநில உரிமைகளைப் பறிக்க நினைத்தால், 50 மற்றும் 60-களிலிருந்த பழைய ஆவேசமான தி.மு.க-வை இந்தியா மீண்டும் பார்க்க வேண்டி இருக்கும். சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் அவர் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன், தமிழகம் பாதிக்கப்பட்டால் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைப்போம். இது பிரதமர் மோடிக்குத் தமிழ்நாட்டிலிருந்து விடுக்கப்படும் இறுதி எச்சரிக்கை. தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.













