"நீட் ஆட்கொல்லி தேர்வுக்கு இன்னும் எத்தனை குழந்தைகளை இழப்பது?" - உதயநிதி காட்டம்
Doctor Vikatan: இரும்புச்சத்து மாத்திரைகள் சாப்பிட்டால் மலச்சிக்கல் வருவது ஏன்?
Doctor Vikatan: இரும்புச்சத்து மாத்திரைகள் அல்லது சிரப்புகள் (சப்ளிமென்ட்ஸ்) எடுத்துக்கொள்ளும்போது மலச்சிக்கல் பிரச்னை வருவதைத் தவிர்க்க முடிவதில்லை. இதற்கு என்ன காரணம்... இதைத் தவிர்க்க வழியே கிடையாதா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது, ரோபோட்டிக் மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மருத்துவர் சார்லஸ் மனோ சைலஸ்.

இரும்புச்சத்து மாத்திரைகள் (Iron supplements) பொதுவாக மலச்சிக்கலை (Constipation) உண்டாக்கும். ஏனெனில், வாய்வழியாக உட்கொள்ளப்படும் பெரும்பாலான இரும்புச்சத்து உடலால் முழுமையாக உறிஞ்சப்படுவதில்லை.
உறிஞ்சப்படாத இரும்புச்சத்து, குடலின் உட்புறச் சுவரில் (Intestinal lining) எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். மேலும், இது குடலில் உள்ள நுண்ணுயிரிகளின் சமநிலையை (Gut microbiome) மாற்றி, குடல் இயக்கத்தை (Bowel movements) மந்தமாக்குகிறது. இதன் காரணமாகவே பெரும்பாலான நேரங்களில் சம்பந்தப்பட்ட நபருக்கு மலச்சிக்கல் ஏற்படுகிறது.
இரும்புச்சத்து மாத்திரைகள் எடுக்கும்போது ஏற்படும் மலச்சிக்கலைத் தவிர்க்கவும், ரத்தச் சோகையைச் சிறப்பாகக் குணப்படுத்தவும் சில பயனுள்ள வழிமுறைகள் உள்ளன. அவற்றைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.
காய்கறிகள், கீரைகள், பழங்கள், முழுத் தானியங்கள் மற்றும் பயறு வகைகளை உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது குடல் இயக்கத்தைச் சீராக்க உதவும். மிதமான நடைப்பயிற்சி மற்றும் தினசரி உடற்பயிற்சிகள் செரிமான மண்டலத்தைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.
மலச்சிக்கல் தீவிரமாக இருந்தால், இரும்புச்சத்தின் அளவை (Dosage) மாற்றுவது அல்லது திரவ வடிவிலான (Syrup) இரும்புச்சத்து மருந்துகளைப் பயன்படுத்துவது குறித்து மருத்துவரிடம் ஆலோசிக்கலாம்.

இரும்புச் சத்து சிறப்பாக உறிஞ்சப்படவும் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு அல்லது தக்காளி போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளுடன் மாத்திரையை எடுக்கும்போது இரும்புச்சத்து உடலில் விரைவாக உறிஞ்சப்படும்.
மாத்திரை சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் குறைந்தது 1 முதல் 2 மணி நேரத்திற்கு டீ, காபி, பால் மற்றும் தயிர் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இவை இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதைத் தடுக்கும்.
இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும்போது மலம் கறுப்பு நிறமாக வெளியேறுவது இயல்பான ஒன்றுதான். அதற்குப் பயப்படத் தேவையில்லை.
டாக்டர் சார்லஸ் மனோ சைலஸ்:
சென்னை வானகரம் அப்போலோ மருத்துவமனையில் பொது, ரோபோட்டிக் மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மருத்துவராகப் பணிபுரிகிறார். இத்துறையில் 12 வருடங்களுக்கும் மேலான அனுபவம் உள்ளவர்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.




















