பாஜக பூத் கமிட்டி: "தமிழக பாஜக செயல்வீரர்களை எண்ணி பெருமைப்படுகிறேன்" - மோடி பார...
Doctor Vikatan: ஒரு வாரமாக மலம் கழிக்காத 4 வயதுக் குழந்தை; சிகிச்சை தேவையா?
Doctor Vikatan: என் பேத்திக்கு நான்கு வயதாகிறது. அவள் மலம் கழித்து ஒரு வாரமாகிறது. இதற்கு என்ன காரணம்... சிகிச்சை தேவையா?
பதில் சொல்கிறார், கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் எஸ். ஸ்ரீநிவாஸ்.

நான்கு வயது குழந்தை ஒரு வாரமாக மலம் கழிக்காமல் இருந்தால் உடனடியாக குழந்தைகள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். இது பெரும்பாலும் பழக்கம் (Habitual) சார்ந்த மற்றும் உணவு சார்ந்த மலச்சிக்கல் (functional constipation) பிரச்னைதான். சரியான நேரத்தில் கவனித்து சிகிச்சை எடுத்தால், சீக்கிரமே குணப்படுத்த முடியும்.
நார்ச்சத்து குறைவான உணவுப்பழக்கமே மலச்சிக்கலுக்கான முக்கிய காரணமாகும். வெள்ளை அரிசி, மைதா, பிஸ்கட், ஜங்க் உணவுகள் போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்வது, காய்கறி, பழங்கள் குறைவாகச் சாப்பிடுவது போன்றவை மலம் உருவாகும் அளவைக் குறைக்கிறது. இதனுடன் தண்ணீர் குறைவாகக் குடிப்பதும் மலத்தை கெட்டியாக்கி, அதை வெளியேற்றுவதில் சிரமத்தை உண்டாக்குகிறது.
மலம் கழிக்கும்போது வலியைச் சந்தித்த அனுபவம் இருந்தால், குழந்தை அதற்கு பயந்து மலம் கழிக்காமல், அதை அடக்க ஆரம்பிக்கும். இந்தப் பழக்கம், மலச்சிக்கல் பிரச்னையை நீடிக்கச் செய்யும். பள்ளிக்குச் செல்ல ஆரம்பிப்பது, பயணம் அல்லது வீட்டுச் சூழலில் மாற்றம் போன்றவைகூட மலம் கழிக்கும் பழக்கத்தை பாதிக்கலாம்.

மலச்சிக்கல் பிரச்னைக்கு அரிதான சில மருத்துவ காரணங்களும் இருக்கலாம். உதாரணத்துக்கு, ஹைப்போதைராய்டிசம் (Hypothyroidism) அல்லது குழந்தைகளை பாதிக்கும் பெருங்குடல் சார்ந்த குறைபாடு (Hirschsprung disease) போன்றவற்றைச் சொல்லலாம். ஆனால், இவை பரவலான காரணங்கள் அல்ல.
மலச்சிக்கலுடன், வயிறு பெரிதாக வீங்குதல், வாந்தி, ரத்தம் கலந்து மலம் வெளியேறுவது, கடும்வலியால் குழந்தை அழுதல், உணவு சாப்பிடுவதில் விருப்பமின்மை போன்ற அறிகுறிகளும் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
உணவில் மாற்றம் செய்வது மிக முக்கியம். தினமும் கீரை, காய்கறி, பப்பாளி, பழுத்த வாழை, பேரீச்சை போன்ற பழங்கள், ராகி, ஓட்ஸ் போன்ற முழுதானியங்களையும் சேர்க்க வேண்டும். இவை மலம் மென்மையாகவும் எளிதாகவும் வெளியேற உதவும்.
தண்ணீர் போதுமான அளவில் குடிக்க வேண்டும். நாள் முழுவதும் சிறு அளவுகளில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் உருவாக்கப்பட வேண்டும். இது மலம் கெட்டியாகாமல் தடுக்கும்.

தினசரி ஒரே நேரத்தில், குறிப்பாக, காலை உணவுக்குப் பிறகு, 5–10 நிமிடங்கள் அமைதியாக உட்கார வைத்து மலம் கழிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். குழந்தைக்கு அழுத்தம் கொடுக்காமல், அமைதியான சூழலில் பழக்கப்படுத்துவது முக்கியம்.
வெளியில் விளையாடுதல் மற்றும் உடல் இயக்கம் போன்றவை குடல் இயக்கத்தை மேம்படுத்தும். சில சமயங்களில் மருத்துவர் ஆலோசனையின்படி மலமிளக்கி (stool softener) மருந்துகள் தேவைப்படலாம். இவை வலியின்றி மலம் கழிக்க உதவி செய்து, பயத்தைக் குறைக்கும். ஆரம்பத்திலேயே சரியான உணவு மற்றும் பழக்கங்களைச் சரி செய்தால், பெரும்பாலும் இந்த நிலை முழுமையாக சரியாகிவிடும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
















