விழுப்புரம்: அணிவகுத்த பாரம்பர்ய உணவுகள்; சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியில் மகுடம...
Doctor Vikatan: கொய்யா இலை சேர்த்துக் கொதிக்க வைத்த நீர்... சர்க்கரைநோயின் தீவிரம் குறைக்குமா?
Doctor Vikatan: கொய்யா இலை சூப் மற்றும் தேநீர் குடித்தால் சர்க்கரை நோய் குறையும், குணமாகும் என்று சிலர் கூறுகிறார்கள். சில கடைகளில் கொய்யா இலைப் பொடியைக்கூட விற்பனை செய்கிறார்கள். உண்மையாகவே கொய்யா இலைக்கு சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டா... அது உண்மை என்றால், கொய்யா இலையை எப்படி உபயோகப்படுத்த வேண்டும்?
-Jay, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்.

சர்க்கரை நோயாளிகள் அனைவரும் முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். சர்க்கரைநோய் வந்துவிட்டால், மறுபடி அதை இல்லாமல் செய்வதோ, முழுமையாக குணப்படுத்துவதோ சாத்தியமில்லை. எந்த மருந்தாலும் அதைச் செய்ய முடியாது. ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது மட்டும்தான் சாத்தியம்.
கொய்யா இலையைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, ஒரு மூலிகைக் குடிநீராக எடுத்துக்கொள்வதில் சில நன்மைகள் இருப்பதை மறுக்க முடியாது.
இதில் உள்ள துவர்ப்புச் சுவை மற்றும் 'பைட்டோ நியூட்ரியன்ட்ஸ்' (Phytonutrients) காரணமாக சில மருத்துவ குணங்கள் நமக்குக் கிடைக்கின்றன. மருத்துவ குணங்கள் இருப்பதாலேயே இதனை சர்க்கரை நோய்க்கான ஒரு முழுமையான மருந்தாகக் கருதி, எடுத்துக்கொள்வது தவறானது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள், அன்றாடம் ஆவாரை குடிநீர், மருதம்பட்டை குடிநீர் அல்லது மூலிகை டீ சூப் போன்றவை குடிப்பதைப் போல இதையும் ஒரு துணைப் பொருளாக எடுத்துக்கொள்ளலாமே தவிர, இது மட்டுமே சர்க்கரைநோய்க்கான முழுமையான மருந்தாகாது.

கொய்யா இலையில் உள்ள துவர்ப்புத் தன்மை காரணமாக சர்க்கரையின் அளவு ஓரளவுக்குக் குறைய வாய்ப்புள்ளதே தவிர, இது நோயை முழுமையாகக் கட்டுப்படுத்தும் என்று சொல்ல முடியாது.
எனவே, இதை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுப் பொருள்களில் ஒன்றாக மட்டுமே பார்க்க வேண்டும். மற்றபடி, யாராவது இதை மட்டும் குடித்தால் போதும், சர்க்கரை நோய் சரியாகிவிடும் என்று சொன்னால், அது தவறான வழிகாட்டுதலாகவே இருக்கும். கொய்யா இலைக் குடிநீர் என்றில்லை, இதுபோன்ற மருத்துவ அறிவுரைகளை மருத்துவர் அல்லாதவர்கள் உங்களுக்குச் சொல்லும்போது, அவற்றை அப்படியே நம்பிப் பின்பற்ற வேண்டாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.




















